பக்கம் எண் :



இராகம்-அடாணா
தாளம்-சாப்பு
கண்ணிகள்

(1) ஊர்க் குருவிக்குக் கண்ணியும் கொண்டு
உள்ளானும் வலியானும் எண்ணிக் கொண்டு
மார்க்கமெல் லாம்பல பண்ணிக் கொண்டு
கோட்கார நூவனும் வந்தானே;

(2)

கரிக்குருவிக்குக் கண்ணியும் கொண்டு
கானாங் கோழிக்குப் பொறியும் கொண்டு
வரிச்சிலைக் குளுவரிற் கவண்டன் மல்லன்
வாய்ப்பான நூவனும் வந்தானே;

(3)

ஏகனை நாகனைக் கூவிக் கொண்டு
எலியனைப் புலியனை ஏவிக் கொண்டு
வாகான சிங்கனை மேவிக் கொண்டு
வங்கார நூவனும் வந்தானே;

(4)

கொட்டகைத் தூண்போற் காலி லங்கக்
ஒட்டகம் போலே மேலி லங்கக்
கட்டான திரிகூடச் சிங்கன் முன்னே
மட்டீவாய் நாவனும் வந்தானே.

(பொ-ரை)

(1) ஊர்க்குருவியைப் பிடிக்கக் கண்ணியும் கொண்டு, உள்ளான்களையும் வலியான்களையும் பிடிக்கவேண்டுமென்று நினைத்துக்கொண்டு, அவற்றைப் பிடிக்கும் வழியெல்லாம் பல பேசிக்கொண்டு, பறவைகளைப் பிடிக்குந் தன்மையுடையவனான நூவனும் வந்தான்;

(2) கரிக்குருவிக்குக் கண்ணியும் கொண்டு, கானாங் கோழிக்கு அதைப் பிடிக்கத்தக்க முக்கூடு என்னும் கண்ணியையும் எடுத்துக் கொண்டு, அழகுள்ள வில்லையுடைய குளுவர் குறக்குடிப் பிறந்த கவண்டன் மல்லன் என்பவர்களுடன் தகுந்த நூவனும் வந்தான்; (3) ஏகன் நாகன் என்பவர்களைக் கூப்பிட்டுக்கொண்டும் எலியன் புலியன் என்பவர்களை இதைச் செய் அதைப்பிடி என்று ஏவிக்கொண்டும், நல்லசிங்கனை விரும்பி நூவனும் வருவதானான்.

(4) காவணப்பந்தலில் நிறுத்திய தூண்போலக் கால் நீளமாகத் தோன்றவும், அவன் உடலானது நீண்ட உடலையுடைய ஒட்டகம்போலத் தோற்றமளிக்கவும், கட்டுவிடாத, திரிகூடச் சிங்கன்முன் கள் குடித்து ஈக்கள் மொய்க்கின்ற வாயையுடைய நூவனும் வருவதானான்.


(வி-ரை)

1-4 உள்ளான், வலியான் என்பன, பறவைகளின் வகைகள். பொறி-கானாங்கோழியைப் பிடிக்கத்தக்க முக்கூடு என்னும் ஒருவகைக் கண்ணி. மட்டு-கள். ஈ வாய்-ஈக்கள் மொய்க்கின்ற வாய்.
(87)

சிங்கன், மரமேறிப் பறவைகளைப் பார்த்தல்

அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்

மூவகை மதிலும் சாய மூரலால் வீரம் செய்த
சேவகர் திருக்குற் றாலர் திருவிளை யாட்டம் தன்னிற்
பாவகம் ஆக நூவன் பறவைபோற் பறவை கூவ
மாவின்மே லேறிச் சிங்கன் வரும்பட்சி பார்க்கின் றானே.

(பொ-ரை)

இரும்பு வெள்ளி பொன் ஆகிய மூன்று வகைக் கோட்டைகளையும் தம் சிரிப்பினால் எரித்து வெற்றி கொண்ட வீரரான திருக்குற்றால நாதரின் சிறந்த விளைநிலத்தினின்று இயற்கையாக நூவன் பறவைக்குரல் போலக் குரலெடுத்துப் பறவைகளைக் கூப்பிட, சிங்கன் மாமரத்தின்மேல் ஏறி நின்று வரும் பறவைகளைக் கவனிக்கலானான்.


(வி-ரை)

சாய-அழிய. மூரல்-சிரிப்பு. சேவகர்-வீரர். பாவகம்-இயற்கை. பறவை கூவ-பறவைபோல் கத்த. மா-மாமரம். வரும் பட்சி- பறந்து வருகின்ற பறவைகள்.
(88)

சிங்கன், பறவைகள் வரவு கூறுதல்
இராகம்-கல்யாணி
தாளம்-ஆதி
பல்லவி

(1) வருகினும் ஐயே! பறவைகள் வருகினும் ஐயே!;

அனுபல்லவி

(2) வருகினும் ஐயே! திரிகூட நாயகர்
     வாட்டமில் லாப்பண்ணைப் பாட்டப் புரவெல்லாம்
  குருகும் நாரையும் அன்னமுந் தாராவும்
     கூழைக் கடாக்களும் செங்கால் நாரையும்;          (வரு)

சரணங்கள்

(3) சென்னியி லேபுனற் கன்னியை வைத்த
     திரிகூட நாதர் கிரிமாது வேட்கையில்     
  மன்னன் ஒருவன் வரிசையிட்ட டான்கங்கை
     மங்கைக்கு நானே வரிரைசெய் வேன்என   
  அன்னை தயவுடை ஆகாச கங்கை
     அடுக்களை காணப் புறப்படு நேர்த்திபோல்
  பொன்னிற வானெங்குந் தந்நிறமாகப்
     புரிந்து புவனம் திரிந்து குருகினம்                (வரு)

(4)

காடை வருகுது கம்புள் வருகுது
     காக்கை வருகுது கொண்டைக் குலாத்தியும்
  மாடப் புறாவும் மயிலும் வருகுது
     மற்றொரு சாரியாக் கொக்குத் திரளெல்லாம்
  கூடலை உள்ளாக்கிச் சைவம் புறம்பாக்கிக்
     கூடுஞ் சமணரை நீடுங் கழுவேற்ற
  ஏடெதிர் ஏற்றிய சம்பந்த மூர்த்திக்கன்
     றிட்ட திருமுத்தின் பந்தர்வந் தாற்போல;           (வரு)

(5)

வெள்ளைப் புறாவும் சகோரமும் ஆந்தையும்
     மீன்கொத்திப் புள்ளும் மரங்கொத்திப் பட்சியும்
  கிள்ளையும் பஞ்சவர் னக்கிளிக் கூட்டமும்
     கேகயப் பட்சியும் நாகண வாய்ச்சியும்
  உள்ளானும் சிட்டும் வலியானும் அன்றிலும்
     ஓலஞ்செய் தேகூடி நாலஞ்சு பேதமாய்த்
  துள்ளாடுஞ் சூல கபாலர் பிராட்டியார்
     தொட்டாடும் ஐவனப் பட்டாடை போலவே         (வரு)
   
(பொ-ரை) (1) ஐயே! பறவைகள் வருகின்றன; வருகின்றன.

(2) ஐயே! வருகின்றன பறவைகள்! திரிகூடநாயகரின் வாட்டமில்லாத வயல்களுள் வாரப்பற்றுக்காடு, தோட்டம் இவற்றிலெல்லாம் பலவகைப் பறவைகளும் நாரைகளும், அன்னங்களும் தாராக்களும், கூழை கடாக்களும், செங்கால் நாரையும் வருகின்றன ஐயே! (3) தம் திருச்சடையின்மீது கங்கையைத் தரித்த திரிகூடநாதரானவர், மலைமகளாகிய பார்வதியை மணம் புரிகையில் இமயமலை அரசன் ஒருவன் சிறப்புச் செய்தான்; அவன் தங்கைக்கு வரிசை செய்தானில்லை; கங்காதேவிக்கு நானே சிறப்புச் செய்வேன் என்று அன்னையாகிய அன்புமிகுந்த ஆகாயகங்கை மடைப்பள்ளியைக் காணப் புறப்பட்டு வருகின்ற தன்மை போல, நீலநிறமுடைய வானகமெங்கும் தம்முடைய வெண்ணிறமாகத் தோன்றும்படி உலகெங்கும் வட்டமிட்டுக் கொண்டு (பறவைக் கூட்டங்கள் வருகின்றன ஐயே!)

(4) காடை, சம்பங்கோழி, காக்கை, கொண்டைக் குலாத்தி, மாடப்புறா, மயில் இவை வருகின்றன; மற்றொரு வரிசையாக கொக்குக் கூட்டங்களெல்லாம் மதுரையைக் கைவசப்படுத்திச் சைவ சமயத்தை அப்புறப்படுத்தக்கூடிய சமணர்களை, நீண்ட கழுமரத்தில் ஏற்றுதற்கு வையை ஆற்றில் தாம் எழுதிய தேவாரத் திருஏட்டை எதிர்த்துப் போகும்படி செய்த திருஞான சம்பந்தர் மூர்த்திக்கு அக்காலத்தில் இடப்பட்ட அழகிய முத்துப் பந்தல் வந்தாற்போல வெண்ணிறமாகப் (பறவைக்கூட்டங்கள் வருகின்றன ஐயே!)

(5) வெள்ளைப் புறாக்களும், சகோரமான செம்போத்தும், ஆந்தையும் மீன் கொத்திப் பறவையும், மரங் கொத்திப் பறவையும், பச்சைக்கிளியும், ஐந்துநிறக் கிளிக்கூட்டமும், மயில்களும், நாகணவாய்ப் பறவைகளும், உள்ளான்களும் சிட்டுக் குருவிகளும், கரிக்குருவிகளும், அன்றிற் பறவைகளும் சத்தமிட்டுக் கூடிப் பலநிற வேறுபாடுகளுடன் துள்ளி ஆடுகின்ற ஆலத்தையும் நான் முகன்தலையோட்டையும் கொண்ட திரிகூட நாதரின் மனைவியாராகிய குழல் வாய்மொழியம்மை எடுத்து அணிந்து கொள்ளுகின்ற ஐந்து நிறத்தையுடைய பட்டாடை போல, பலவகை நிறத்துடன் (பறவைகள் வருகின்றன ஐயே!)


(வி-ரை)

1-5 கூழைக்கடா-நாரையில் பெருநாரை. வருகினும்-வருகின்றன என்னும் பொருளது; குறவனானதால் திருத்தமில்லாமல் கூறுகின்றான். பண்ணை-வயல். பாட்டப்புரவு-வாரப்பற்றுக்காடு. புறம்புஆக்கி-அப்புறப்படுத்தி, சாரியாய்-வரிசையாய். எதிர் ஏற்றிய-எதிர் ஏறச்செய்த. சகோதரம்-செம்போத்து. கேகயம்-மயில். துள்ளாடும்-காற்றால் படபடென ஆடுகின்ற. ஐவனம்-ஐந்துநிறம். பட்டு ஆடை-பட்டாலான சிலைகள்.
(89)