பக்கம் எண் :

சிங்கன் பறவைகள் கீழிறங்குதலைச் சொல்லுதல்

கொச்சகக்கலிப்பா
  ஈரா யிரங்கரத்தான் ஏற்றசங்கும் நான்மறையும்
  சீராய் இரங்கநடம் செய்தவர்குற் றாலவெற்பில்
  ஓரா யிரமுகமாய் ஓங்கியகங் காநதிபோற்
  பாரார் பலமுகமும் பட்சிநிரை சாயுதையே;
(பொ-ரை)

ஈராயிரங் கைகளையுடைய பானுகம்பன் தாங்கிய சங்கும், நான்கு வேதங்களும் சிறப்பாய் முழங்கத்திரு நடனம் புரிந்தவர் எழுந்தருளியிருக்கின்ற திருக்குற்றாலமலையில் ஆயிர முகங்கொண்டு பாய்ந்து ஓடுகின்ற உயர்ந்த கங்காநதியின் நிறம்போலப் பறவைக் கூட்டங்கள் பூமியில் பல திசைகளிலும் கீழே இறங்கா நின்றன.



(வி-ரை)

ஈராயிரம் கரத்தான்-இரண்டாயிரங் கைகளையுடைய பானுகம்பன். இரங்க-முழங்க. பார் ஆர்-பூமியில். நிறைந்த-பலமுகம்-பலஇடங்கள். நிரை-வரிசை.

(90)

இராகம் - கல்யாணி.
தாளம் - ஆதி

 

பல்லவி

(1) சாயினும் ஐயே! பறவைகள் சாயினும் ஐயே!
 


அனுபல்லவி

(2) சாயினும் ஐயே! பாயும் பறவைகள்
     சந்தனக் காட்டுக்கும் செண்பகக் காவுக்கும்
  கோயிற் குழல்வாய் மொழிமங்கைப் பேரிக்கும்
     குற்றால நாயகர் சிற்றாற்று வெள்ளம்போல்; (சாயினும்)
 

சரணங்கள்
(3) காராரும் செங்குள மேலப்பாட் டப்பற்று
     காடுவெட் டிப்பற்று நீண்டுசுண் டைப்பற்று
  சீராரும் பேட்டைக் குளமுடைக் காங்கேயன்
     ஸ்ரீகிருட்டிணன் மேடு முனிக்குரு கன்பேரி
  ஏரிவாய் சீவலப் பேரி வடகால்
     இராசகுல ராமன் கண்டுகொண் டான்மேலை
  மாரிப்பற் றும்கீழை மாரிப்பற் றும்சன்ன
     நேரிப்பற் றும்சாத்த னேரிப்பற் றும்சுற்றிச்; (சாயினும்)

(4)

பாரைக் குளந்தெற்கு மேல்வழு திக்குளம
     பாட்டப் பெருங்குளம் செங்குறிஞ் சிக்குளம்
  ஊருணிப் பற்றும் திருப்பணி நீளம்
     உயர்ந்த புளியங் குளந்து வரைக்குளம்
  மாரனே ரிக்குளம் மத்தளம் பாறை
     வழிமறித் தான்குளம் ஆலடிப் பற்றும்
  ஆரணி குற்றாலர் தோட்ட நெடுஞ்செய்
     அபிடேகப் பேரிக் கணக்கன் பற்றிலும்; (சாயினும்)

(5)

ஐயர்குற்றாலத்து நம்பியார் திருத்து
     அப்பா லொருதாதன் குற்றாலப் பேரிச்
  செய்யும் புலியூர் இலஞ்சிமே லகரம்
     செங்கோட்டை சீவல நல்லூர் சிற்றம்பலம்
  துய்ய குன்றக்குடி வாழவல் லான்குடி
     சுரண்டை யூர்முதல் உட்கிடை சுற்றியே
  கொய்யு மலர்த்தார் இலஞ்சிக் குமரா
     குருவிளை யாடும் திருவிளை யாட்டத்தில். (சாயினும்)

(பொ-ரை)

(1) ஐயே! பறவைகள் பலவகையாகப் பல்லிடத்தும் இறங்குகின்றன

(2) சந்தனச் சோலையிலும், செண்பகச் சோலையிலும், குழல்வாய் மொழியம்மை கோயிலின் கட்டளைக்காக விடப்பட்ட (3) மேகங்கள் நீருண்ணும் செங்குள மேலவாரச் செய்கள், காடுவெட்டிச் செய், நீடு சுண்டைக் காட்டுச் செய், சிறப்புப் பொருந்திய பேட்டைக் குளமுடைய காங்கேயன் செய், ஸ்ரீகிருஷ்ணன் மேட்டுச் செய், முனிக்குருக்கள் செய், ஏரிவாய்ச் செய், சீவலப்பேரிச் செய், வடகால் செய், இராச குலராமன் செய், கண்டுகொண்டான் செய், மேலைமாரிப் பற்றுச் செய், கீழை மாரிப்பற்றுச் செய், சன்ன நேரிப் பற்றுச் செய், சாத்தான் நேரிப்பற்றுச் செய், இவற்றை யெல்லாம் சூழ்ந்து, (பறவைகள் இறங்குகின்றன ஐயே!)

(4) பாரைக் குளம், தெற்கு மேல் வழுதிக்குளம், பாட்டப் பெருங்குளம், செங்குறிச்சிக் குளம், ஊருணிச் செய், திருப்பணி நீளம், உயர்ந்த புளியங்குளம், துவரைக் குளம், ஏரிக்குளம், மாரன் மத்தளப்பாறை, வழிமறித்தான்குளம், ஆலடிப்பற்றுச் செய், ஆத்திமலர் அணிந்த குற்றாலநாதர் தோட்ட நெடுஞ்செய் அபிடேகப் பேரி, கணக்கன் பற்றுச் செய், இவற்றிலெல்லாம் (பறவைகள் இறங்குகின்றன ஐயே!)

(5) குற்றாலநாதர் நம்பியார் திருத்துச்செய், அப்பாய் ஒரு தாதன் குற்றாலப் பேரிச் செய், அழகிய புலியூர், இலஞ்சி, மேலகரம், செங்கோட்டை, சீவலப்பேரி, நல்லூர், சிற்றம்பலம், தூய குன்றக்குடி, வாழவல்லான்குடி, சுரண்டையூர் முதல் உட்கிடைகள் முதலியவற்றிலெல்லாம் வட்டமிட்டுக் கொண்டு கொய்யப்படுகின்ற மலர்மாலையணிந்த இலஞ்சிக் குமரப்பெருமானாகிய குருநாதர் விளையாடுகின்ற திருவிளையாட்டச் செய்யிடத்தும் (பறவைகள் இறங்குகின்றன ஐயே!)






(வி-ரை)

1-5: சாயினும்-கீழே இறங்குகின்றன. பற்று-நன்செய். வழுதி-பாண்டியன்; திருத்து, பற்று, பேரி விளையாட்டம் முதலியன வயல்களைக் குறிக்கும் பெயர்கள். குளம், நீளம் முதலியனவும் அன்னவே! இக் கண்ணியில் வருகின்ற சாயினும் என்பது, சாய்கின்றன, இறங்குகின்றன என்னும் பொருளது; மரூஉமொழி அல்லது சேரிமொழியெனக் கொள்க.


(91)

சிங்கன், தன் காதலி அழகுபற்றிச் சொல்லுதல்

கொச்சகக் கலிப்பா


  கொட்டழகு கூத்துடையார் குற்றால நாதர்வெற்பில்
  நெட்டழகு வாள்விழியும் நெற்றியின்மேற் கத்தூரிப்
  பொட்டழகும் காதழகும் பொன்னழகும் ஆய்நடந்த
  நட்டழகி தன்னழகென் கண்ணளவு கொள்ளாதே.

(பொ-ரை)

மேளதாளங்கள் முழங்க ஆடுகின்ற அழகுடைய திருக்கூத்தராகிய குற்றாலநாதர் மலையில் வாழ்கின்ற, நீண்ட வாள் போன்ற அழகு பொருந்திய கண்களும், நெற்றியின் மேல கத்தூரியால் இட்ட பொட்டினழகும், காதழகும், பொன்னாலான அணியுடன் கூடிய அழகுமான நடந்த பேரழகு உடையவளின் அழகானவை என் கண்ணில் அடங்காத தன்மையன.



(வி-ரை)

கொட்ட-முழக்க; இங்கே மேளதாளங்கள் முழக்குதலைக் குறித்தது. அத் தாளங்கட்கேற்ப ஆடுகின்ற இறைவன் திருக்கூத்து, கண்டார் இன்பங்கொள்ளும் தன்மைத்தாக இருத்தலின் 'அழகு கூத்து' என்றார். நெடு-நீண்ட, பொன்-பொன்னாலான அணிகள் பூண்ட அழகு அன்றித் திருமகளின் அழகு போன்ற அழகென்றாலுமாம்.

(92)

சிங்கன், பறவை இரை மேய்தலைச் சொல்லுதல்

இராகம் - கல்யாணி.
தாளம் - ஆதி
 

பல்லவி

(1) மேயினும் ஐயே! பறவைகள் மேயினும் ஐயே!
 


அனுபல்லவி

(2) மேயினும் ஐயே! குற்றால நாதர் வியன்குல சேகரப்
     பட்டிக் குளங்களும்
  ஆயிரப் பேரியும் தென்காசி யும்சுற்றி அயிரையும் தேளியும்
     ஆராலும் கொத்தியே. (மே)
 

சரணங்கள்
(3) ஆலயம் சூழத் திருப்பணி யுங்கட்டி
     அன்னசத் திரங்கட்டி அப்பாலும் தென்காசிப்
  பாலமுங் கட்டிப் படித்தரிஞ் சேர்கட்டிப்
     பத்த சனங்களைக் காக்கத் துசங்கட்டி
  மாலயன் போற்றிய குற்றால நாதர்
     வழித்தொண்டு செய்திடக் கச்சைகட் டிக்கொண்ட
  சீலன் கிளுவையிற் சின்னணைஞ் சேந்தரன்
     சிறுகால சந்தித் திருத்துப் புறவெல்லாம்; (மே)

(4)

தானைத் தலைவன் வயித்தியப் பன்பெற்ற
     சைவக் கொழுந்து தருமத்துக் காலயம்
  சேனைச் சவரிப் பெருமாள் சகோதரன்
     செல்வன் மருதூர் வயித்தி யப்பனுடன்
  மானவன் குற்றால நாதனைப் பெற்றவன்
     வள்ள லெனும்பிச்சைப் பிள்ளை திருத்தெல்லாம்
  கானக் குளத்துள்வாய்க் கீழைப் புதுக்குளம்
     கற்பூரக் காற்பற்றும் தட்டான் குளச்சுற்றும்; (மே)