(பொ-ரை) |
(1)
ஐயே! பறவைகள் மேய்கின்றன; பறவைகள் மேய்கின்றன.
(2) மேய்கின்றன ஐயே! திருக்குற்றாலநாதர் பெரிய குல சேகரப்பட்டிக் குளங்களிலும்
ஆயிரப் பேரியிலும் தென்காசியிலும் சுற்றி அயிரை, தேளி ஆரல் முதலிய மீன்களையெல்லாம்
கொத்தி மேய்கின்றன ஐயே!
(3) திருக்குற்றாலநாதர் திருக்கோவிலைச் சுற்றி மதிலமைத்து அறஉணவு விடுதியும்கட்டி
தென்காசிக்குப் பாலமும் அமைத்துப் படித்தரமும் அமைத்து, திருக்குற்றாலநாதரின்
தொண்டர்களைக் காப்பதற்குக் கொடியும் கட்டித் திருமாலும் நான்முகனும் வணங்குகின்ற
திருக்குற்றால நாதருடைய வழிவழியாகத் தொண்டு செய்து வருவதற்கு உறுதி கொண்டிருக்கின்ற
சிறந்தவனான, கிளுவையென்னும் பெயருடைய சொக்கம்பட்டியில் வாழ்கின்ற சின்னணைஞ்
சேந்திரன் என்பவன், சிறுகாலமாகிய ஆறுவகைச் சந்திக்கு விட்டுள்ள திருத்துப்புறவென்னும்
வயல்களிலெல்லாம் (மேய்கின்றன ஐயே! பறவைகள் மேய்கின்றன)
(4) படைத்தலைவனான வைத்தியப்பன் என்பவன் பெற்ற சைவ சமய முதல்வனும், அறத்திற்கு
இருப்பிடமும், சேனைச் சவரிப் பெருமானின் பின் பிறந்தவனும், செல்வனுமான மருதூரில்
வாழ்கின்ற வைத்தியப்பன் என்பவனுடன், பெருமையுடையவனாகிய குற்றாலநாதன் என்பவனைப்
பெற்ற தந்தையும் கொடையில் சிறந்தவனுமான பிச்சைப்பிள்ளையுடைய வயல்களிலெல்லாம்
காட்டுக்குளத்தின் உட்கிடையான கீழைப் புதுக்குளத்துக் கற்பூரக்கால் பற்று என்னும்
வயலிலும் தட்டாங்குளச் சுற்று என்னும் வயலிலும் (மேய்கின்றன ஐயே! பறவைகள் மேய்கின்றன),
(5) அரசனான சொக்கம்பட்டி சின்னணைஞ்சேந்திரனுடைய வடகரை வீட்டுக்கு மந்திரியாகவும்,
செந்நெல் விளைகின்ற மருதூருக்குத் தலைவனாகவும், தென்காசி நகருக்குத் தாய் பிறந்த
இடம் போலவும் தன்னை வளர்க்கின்ற குற்றாலநாதர் திருநகராகிய திருக்குற்றாலநகரை
மேம்படச் செய்கின்ற செயலாளனாகவும், திருக்குற்றாலத்து அந்தாதி பாடிய புலவரான
பகைவரும் வணங்கும் பிச்சைப் பிள்ளையுடைய வயல்களிலெங்கும், (பறவைகள் மேய்கின்றன
ஐயே! பறவைகள் மேய்கின்றன).
(6) நல்ல ஊர்களை உண்டாக்கி படிப்பகம், மடம் முதலியவற்றைக் கட்டி முடித்து சோமாஸ்கந்தர்
கோயிலில் கொலுமண்டபம் கட்டி முடித்து, மிக்க இன்பந்தரும் தென்னைமரத் தோப்பையும்
உண்டாக்கி தெப்பக்குளம் அமைத்து தேர் மண்டபம் அமைத்து, யாவராலும் புகழப்படும்
திரிகூடச் சபையையும் கட்டி பசுச்சாலைகள் மிகுதியாகக் கட்டி, இன்னும் திருப்பணிகள்
வேண்டுவதெல்லாஞ் செய்து, அக்காலத்திலேயே அறவிடுதிகள் பல கட்டியமைத்த
அனந்தபத்மநாபன் திருக்கோவில் படித் தரத்துக்காக விடப்பட்ட வயல்களிலெல்லாம்
(பறவைகள் மேய்கின்றன ஐயே! பறவைகள் மேய்கின்றன)
(7) தந்தையார் அமைத்த ஊரம்பலகட்டிடமும் அறத்துக்கு நிலைக்கண்ணாடிபோல் எவரும்
அறியும்படி எம்தந்தையாராகிய திரிகூடநாதப் பெருமான் திருச்சந்தியில் பிள்ளையார்ப்
பெருமான் திருவுருவைச் செய்வித்தும், இரண்டு சிறு படித்துறைகளும் அமைத்த பூமாலை
அணிந்த தோள்களையுடைய இராக்கதப் பெருமாள் என்னும் பெயருடையவனுக்கும் குற்றாலநாதன்
என்னும் பெயருடையவனுக்கும் தமையனும், எவராலும் போற்றத்தக்க சங்க முத்துவின்
மைத்துனனுமான புகழ்பொருந்திய வைத்தியநாதன் என்பவனுடைய வயல்களிலெல்லாம்.(பறவைகள்
மேய்கின்றன ஐயே! பறவைகள் மேய்கின்றன).
(8) எவரிடத்தும் வருவதான துன்பங்களையெல்லாம் நீக்கி தமக்குப் பகைவர்கள் செய்யும்
குறும்புகளையும் அடக்கித் தென்காசியில் உயர்ந்த நீதிநெறியை நிலைநிறுத்தி,
நம்மையுடையவராகிய திருக்குற்றாலநாதரின் பூசை, நைவேத்தியத்துடன், தேர்த்திருநாளும்,
தெப்பத் திருநாளும், சித்திரை மண்டபமும், அறஉணவு விடுதியும், பொருப்பாதைகளும்
இவற்றையெல்லாம் பூமியிலே வளம்பெற அமைத்த அனந்தபத்மநாபன் மகனான வைத்தியநாதன்
வயல்களிலெல்லாம் (பறவைகள் மேய்கின்றன ஐயே! பறவைகள் மேய்கின்றன).
(9) ஆற்றூர் அழகப்பவேள் கட்டளைச்செய், இறைவன் பால் அன்புடைய திருமலைக்கொழுந்து
கட்டளைச்செய், மணங்கமழும் மலர்செறிந்த குற்றாலர் சங்கு கட்டளைச்செய், நம்முடைய
பகைவர்களுக்குச் சிங்கம்போன்ற நரபாலன் கட்டளைச் செய், பெருமை பொருந்திய
பால்வண்ணச்சங்குவின் கட்டளைச் செய், சிறந்த ஓமநல்லூர் வணிகர் தலைவனான கிருஷ்ணனுடைய
கட்டளைச் செய், பைம்பொழிற் பட்டினத்துச் சங்கு முத்துவின் பெரியகட்டளைச்செய்,
முதலிய விளைவுச்சிறப்புமிக்க வயல்களிலெல்லாம், (பறவைகள் மேய்கின்றன ஐயே!
பறவைகள் மேய்கின்றன)
(10) கோவிற் காரியக்காரணான சர்க்கரைப் பண்டாரம் என்னும் குறையாத ஆசையொடு
பணிவிடை செய்கின்ற மேன்மை பெற்ற சுந்தரத்தோழன் கட்டளைச் செய், மிக்க
கரிவலம் வந்த நல்லூர் இராமநாயகனுடைய கட்டளைச்செய், உலகமெல்லாம் புகழ்கின்ற
தாகம் தீர்த்தான் என்னுஞ் செய்யுடன் ஓமநல்லூரில் தோன்றிய சங்கரமூர்த்தி
கட்டளைச்செய், சிறப்புடைய சடைத்தம்பிரான் பிச்சைக் கட்டளைச் செய் மலைநாட்டார்
கட்டளைச் செய் முதலியவற்றிலெல்லாம் (பறவைகள் மேய்கின்றன ஐயே! பறவைகள்
மேய்கின்றன).
|
|