(பொ-ரை) |
(1) அடேகுளுவா!
கண்ணி கொண்டு வாடா குளுவா!
(2) கண்ணி கொண்டுவாடா! தேவர்கள் தலைவரும் திருக்குற்றாலநகரில் எழுந்தருளியிருப்பவருமாகிய
திரிகூடராசப் பெருமானுடைய மேகங்கள் உறங்குகின்ற திரிகூடமலைச் சாரலிலே
நாம் செய்த நல்லறங்களெல்லாம் நமக்கு வந்து கைக்கூடிய தன்மை போல, நாரை
கொக்கு முதலிய எல்லாவகைப் பறவைகளும் எங்கும்பரவி இரைகளை மேய்ந்து கொண்டிருக்கின்றன.
(அவற்றை நாம் பிடிப்பதற்குக் குளுவா! கண்ணி கொண்டு வாடா).
(3) பெருமையுடையவர் வாழ்கின்ற மதுரைமாநகரிர் உள்ள அரிமர்த்தன பாண்டியன்
தன் முதல் மந்திரியாகிய மாணிக்கவாசகரிடத்தே முன்னதாகவே பணத்தைக்
கொடுத்து பின் தான் விரும்பியபடி கைக்கொண்ட கொக்குகள் (குதிரை) எல்லாம்
தங்கவில்லை (இருக்கவில்லை) நரிகள் கொண்டுபோய் விட்டன. (நரி உருவாக
மாறிப்போய் விட்டன); ஆனதால் குறவர்கள் வேட்டையாடுந் தொழிலை, நீ
கீழ்மையானதென்று நினைக்காதே; (நாம் மட்டுமா வேட்டையாடுகின்றோம்?)
கரிய மேகநிறத்தவனான திருமாலுமன்றோ ஒருகால் காக்கையை (வேட்டையாடி)க்
கொன்றான். (காவல் தொழில் செய்கின்றான்) முன்பு கொன்ற கொக்கினது
இறகானது இப்பொழுதுங்கூடக் காளைவாகனராகிய திருக்குற்றாலநாதரின் சடையில்
முடித்து விளங்குகின்றது. அதனால் நாம் வேட்டையாடுவது தவறாகாது; நாம் பறவைகளைப்
பிடிப்பதற்குக் (கண்ணி கொண்டுவாடா குளுவா!)
(4) முற்காலத்தில் பிடித்த பெருச்சாளியை மூத்தவராகிய பிள்ளையார் மிக்க
தந்திரமாகக் கொண்டு போய்விட்டார்; அவர் பின் தோன்றிய தம்பியராகிய
முருகப்பெருமானும் சிறுபிள்ளைத்தனமாய் ஆடுகின்ற மயிலையும் பிடித்துக் கொண்டு
போய்விட்டார்; சொல்லுதற்கரிய அழகிய அன்னப்பறவையை குற்றாலநாதர்
தமக்குஉண்கலம் உதவிய பார்ப்பானாகிய பிரம்மனுக்குக் கொடுத்து விட்டார்;
செம்பருத்தை ஒருதிருடனாகிய திருமால் பிடித்துக் கொண்டு போனான்; (இவர்களெல்லாம்
இவ்வாறு வேட்டையாடும் போது நாம் வேட்டை யாடுவது குற்றமாகுமா?) ஆதலால்
நாம் வக்காக்களையும் நாரைகளையும் கொக்குகளையும் பிடிப்பதற்கு, (நீ கண்ணி
கொண்டு வாடா குளுவா!)
(5) (இன்னுங் கேளடா! இவ் வேட்டைப் பெருமையை) வளங்கள் நிறைந்த இலஞ்சியிலுள்ள
குறத்தியாகிய வள்ளியை மணம் செய்து கொண்ட முருகப்பெருமானாகிய குறவனானவன்
முதல் முதல் வேட்டைக்குச் சென்ற காலத்தில் ஆறுநாட்களுக்குப் பின்தான்
ஒருகொக்குப் பிடிபட்டுக் கிடைத்தது; (ஆறு நாட்களுக்குப் மாமர உருவாக நின்ற
சூரனை வீழ்த்தினார்) தம் கைக்குக் கிடைத்த அந்தக் கொக்கினை ஒரு சட்டியிலிட்டு
அவியவைத்துக் குழம்பு வைத்த பின் அக் குழம்பின் சுவைகண்டு, வேதப்பிராமணர்
உண்டனர்; புலாலுண்ணாத சைவர்களும் உண்டனர் (எவ்வுயிரும் தம்முயிர்போற்
கருதும்) தவப்பேறுடையவர்களாகிய முனிவர்களும்கூட அதை ஏற்றுக்கொண்டார்களென்றால்
இதற்கு மாற்றுப்பேச்சுப் பேசாமல் கொக்கு முதலிய பறவைகளைப் பிடிப்பதற்கு,
(நீ கண்ணி கொண்டு வாடா குளுவா!)
| |
(வி-ரை) |
1-5.
மானவர்-பெருமையுள்ளவர்; சிறந்தவர். கொக்கு-மாமரம், செந்நாய், குதிரை,
மூலநாள் முதலியவற்றைக் குறிக்கும் உரிச்சொல். இங்கே கொக்காகிய பறவையையும்
குதிரையையும் மாமரத்தையும் குறித்தது. வேடன் பேசுகின்றான் என இருபொருள்
நயந்தோன்ற அமைத்த இக்கண்ணிகள் மிக்க சொல்நயம் பொருள்நயம் செறிந்து
இன்சுவை தருதலை யறிக. முந்திப்பணம் போட்டு முன்னதாகவே பணங்கொடுத்து
அல்லது ஆடையின் முந்தியிலே (மடியிலே) முன்பணமாகக் கொடுத்தென்றும், தரி
கொண்டு தில்லை. தரிக்கவில்லை, நிலைக்கவில்லை என்றும் கூறுவது உலகவழக்கச்
சொல், கொக்கு-இங்கே குதிரை, குதிரைகள் நிலைகொள்ளவில்லை யென்றும்,
கொக்குகள் அங்கே இருக்கவில்லை யென்றும், நரிகொண்டு போச்சுது. நரி
உருவமாக மாறிவிட்டன என்றும், அக் கொக்குகளை நரிகள் பிடித்துக் கொண்டு
போய்விட்டன என்றும்; கருமுகில் வண்ணன்-மேகம்போல் கருநிறமுடையவன் என்றும்,
திருமால் என்றும், காக்கை-காத்தல் உலகைக் காத்தற் கடவுள் திருமாலானதால்
அவன் காத்தற்றொழிலை மேற்கொண்டானென்றும், அன்றிக் காகாசுரனது கண்ணைக்
கெடுத்தானென்றும், காக்கை காகம்: காக்கைப் பறவையைக் கறுப்புநிற வேடன்
பிடித்தான் என்றும், (கொக்கிறகை இறைவன் திருமுடிமீது சூட்டுவது மக்களியல்பு)
அதைக் கொக்கைக் கொன்று சடைமேல் இன்றுங்கூட வைத்திருக்கின்றாரென்றும்
சிலேடை அணி தோன்றக் கூறியன அறிந்து மகிழ்தற்குரியன.
அசுரர் தேவர்கட்குள் போர்மூண்ட காலத்தில் கயமுகாசுரன் தன் உருமாறிப்
பெருச்சாளி ஆனான்; அப் பெருச்சாளியைப் பிள்ளையார்ப்பெருமான் தமக்கு
ஊர்தியாகக் கொண்டார்; இதைப் பிள்ளையார் கூட ஓர் உயிர்பொருளான பெருச்சாளியை
வேட்டையாடி வைத்துக்கொண்டாரென்றும், முருகப்பெருமான் சூரனோடு போர் புரிந்தபோது,
அவன் முருகப்பெருமானோடு போர்செய்யலாற்றாவது சேவலும் மயிலுமாக உருமாறி
நிற்க சேவலைக் கொடியகவும் மயிலை ஊர்தியாகவும் கொண்டாரென்பதும் கந்தபுராணக்
கதை. மயிலை ஊர்தியாகக் கொண்டதை, முருகப்பெருமான் வேட்டையாடி உயிர்ப்பொருளான
மயிற்பறவையைக் கொண்டு சென்றானென்பதும், சிவபெருமான், பிரமன் தலையைக்
கிள்ளியெடுத்து, உண்கலமாகக் கொண்டாரென்பதும் புராணக்கூற்று. அதைக் கொடுத்ததாகக்
கொண்டு, அன்னப்பறவையை வேட்டையாடிப் பிரமனுக்குக் கொடுத்தாரென்றும்,
திருமாலுக்கு ஊர்திகருடனாதலால் திருமாலைக் கள்வன், கருநிறந்தான், திருடனென்றும்
கூறி அத்திருடன், வன்னப் பருந்தைவேட்டையாடி யெடுத்துக்கொண்டு போனானென்றும்
இருபொருள் நயந்தோன்ற அமைத்த அழகு நவில்தொறும் நவில்தொறும் நயந்தோன்றுதலறிக.
பிள்ளையார்க்குப் பெருச்சாளி ஊர்தி; முருகப் பெருமானுக்கு மயில்ஊர்தி;
பிரமனுக்கு அன்னம்ஊர்தி; திருமாலுக்குக் கருடன் ஊர்தி; இவற்றை வேடன்
தான் வேட்டையாடுவதற்கு ஏற்ற நிலையைக்கூறி, பறவை பிடித்தலாகிய அறமல்லாத
கொலைத்தொழில் செய்வது கூடாதென்றை கருத்தை உட்கொண்டு அதைக் கடவுளர்கள்
கூட ஒவ்வொரு பறவைமுதலியவற்றைப் பிடித்துத் தமக்குக் கொண்டு போயிருக்கும்போது,
நாம்வேட்டை யாடுவதில் தவறில்லையென்று குளுவனிடம் பேசுவதாக இருபொருள்
நயந்தோன்ற இரண்டாங் கண்ணியில் நிற்றல் அறிக.
முருகப்பெருமான் வள்ளிநாயகியவரை மணந்தவர்; வள்ளி குறவர் குடியில் வளர்ந்தவள்;
ஆதலால்குறத்தி; அவளை கொண்டதால் முருகப்பெருமானைக் குறவன் என்றார்.
முருகப்பெருமான் சூரனோடு போர்செய்ய அவன் மாமரமாக மாற்றுருவடைந்தான்
அம்மரத்தை ஆறுநாளில் வேரோடு பறிய வீழ்த்தினார் என்பதுவரலாறு. ஆறாவது
நாளை வடமொழியில் சஷ்டி என்பர் தமிழில் வந்து வழங்குங்கால், முப்பதுதோராவது
சகர மெய்யாகிய 'ஷ; டகரமாக மாறும். தமிழின் ஒலிக்கேற்ப அதனைச் 'சட்டி'
என்று வழங்குவர். சட்டி; 'சஷ்டி' யென்பதன் திரிபு. முருகப்பெருமான் திருநாளில்
இச்சஷ்டியைக் கொண்டாடுவது உலகஇயல்பு. சாறு-திருவிழா, குழம்பு என்ற இருபொருள்
உள்ளன; ஆதனால் கொக்கைக் குழம்பாகச் சட்டியில் வைத்தபோது சைவர்களும், வேதப்பிராமணர்களும்
முற்றுந்துறந்தமுனிவர்களும் அக்குழம்புச் சுவைகண்டு உண்டார்களென்றும், சட்டித்
திருநாளைச் சைவர்களும் அந்தணர்களும் முற்றுந்துறந்த முனிவர்களும் கொண்டாடிக்
களித்தார்க்கௌன்றும் இருபொருள் நயந்தோன்றச் சிலேடை அணியாகக் குறித்த
திறப்பாடு என்பையும் உருக்கும் மிக்கசுவை வாய்ந்த பகுதிகளாகும்.
பிக்கு-பிசகு; ஒவ்வாத தன்மை. குறவன் கூறுகின்றான் என் கருத்து மாறுபட்டுப்
பேசாமல் நீ கண்ணிகளையெடுத்துக் கொண்டு கொக்குகளைப் பிடிப்பதற்கு வா
என்று கூறுகின்றான் அத்தொடரே பிக்குச் சொல்லாமலே கொக்குப்படுக்கவே
என்பது.
|
(95) |