பக்கம் எண் :

சிங்கன் சிங்கியை நினைத்து மயங்குதல்

அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்

  காவலர் திரிகூ டத்தில் காமத்தால் கலங்கி வந்த
  நூவனைப் பழித்துச் சிங்கன் நோக்கிய வேட்டைக் காட்டில்
  ஆவல்சேர் காம வேட்டை ஆசையால் அன்னப் பேட்டைச்
  சேவல் போய்ப் புணரக்கண்டான் சிங்கிமேற் பிரமைகொண்டான்

(பொ-ரை)

சோலைகள் நிறைந்துள்ள திரிகூடமலையில் காமத்தால் மனங்கலங்கி வந்த நூவனை இகழ்ந்து பேசிச் சிங்கனானவன் தான் நினைத்தபடி வேட்டையாடுகின்ற காட்டிடத்திலே ஆசைமிகுந்த காமவேட்கை மிகுதியால் ஒரு பெண் அன்னத்தைத் தன் காதல் மிகுதியினாலே ஓர் ஆண் அன்னம் சென்று புணர்வதைப் பார்த்தான்; பார்த்த உடனே, தன் மனைவியாகி சி்ங்கியினிடத்தில் காதல் மயக்கமுற்றான்.





(102)

சிங்கன், சிங்கியை நினைத்துப் புலம்பல்

இராகம்-ஆகிரி.
தாளம்-சாப்பு
கண்ணிகள்



எட்டுக் குரலில் ஒருகுரல் கூவும்பு றாவே! என
   தேகாந்தச் சிங்கியைக் கூவாத தென்னகு லாவே!
மட்டார் குழலிதன் சாயலை காட்டும யூரமே! அவள்
   மாமலர்த் தாள்நடை காட்டாத தென்னவிகாரமே!
தட்டொத்த கும்பத் தடமுலை காட்டுஞ்ச சோரமே! சற்றுத்
   தண்ணென்றும் வெச்சென்றுக்காட்டி விட்டால் உபகாரமே
கட்டித் திரவியம் கண்போலும் நன்னகர்க் காவியே! கண்ணிற்
   கண்டிடம் எல்லாம் அவளாகத் தோணுதே பாவியே
(பொ-ரை)

எட்டுவகைக் குரல்களில் ஒன்றான ஒரு குரலைக் கூவுகின்ற புறாவே! என்னுடைய ஒன்றுபட்ட காதற் கிழத்தியை நீ அழைத்துக் கூவாதது என்ன அன்போ'மணம் பொருந்திய கூந்தலையுடைய என் காதற் சிங்கியினது சாயலைக் காட்டுகின்ற மயிலே! அவளுடைய சிறந்த தாமரை மலர் போன்ற திரவடிகளின் நடையை நீ எனக்குக் காட்டாமல் இருப்பது என்ன வேறுபாடோ'உள்ளளிடமெங்கும் குடத்தைப் போன்ற பெரிய கொங்கைகளின் தோற்றத்தைக் காட்டுகின்ற சக்கரவாகப் பறவைகளே! நீங்கள் அக் கொங்கைகளின் குளிர்ச்சியையும் வெப்பத்தையும் காட்டிவிடுவீர்களானால் எனக்குப் பேருதவியாக இருக்குமே'என் சிறந்த பாக்கியமாகிய சிங்கியின் கண்கள் போல மலர்ந்தது நல்ல திருக்குற்றாலநகரத் தடாகத்தில் மலர்ந்திருக்கும் கருங்குவளை மலர்களே! கண்ணால் உங்களைக் கண்ட இடங்கள்தோறும் அவள் உருவாகவே தேரிகின்றதே. பாவிகளே! (நீங்கள் அவள் நினைவை உண்டாக்கி விட்டீர்களே! என்ன செய்வேன்! எவ்வாறுய்வேன்!)






(வி-ரை)

எட்டுக் குரல்; மயில், புறா, அன்னம், காடை, வண்டானம் (நாரை) குயில், கோழி, வண்டு இவற்றின் ஒலிகள். நல்ல மங்கையர்கட்குக் கலவிக் காலத்தில் இக் குரல்கள் இன்ப நிலையில் தம்மை மறந்து தோன்றுமென்று காதலிற்கன்றியுணர்ந்தோர் நுனித்தறிந்து கூறுப; இதனை அருணகிரிநாதரும் தாம் ஆக்கிய திருப்புகழ் நூலின்கண்ஓரிடத்து, 'மயில்குயில் புறவென மிக வாய்விட்டு உருக்கும்' என்று கூறுவதும் காண்க. காட்டிடத்தே தனியே இருந்து தன் சேவலை அழைக்கும் புறாவைக் கண்டான் சிங்கன். தன் காதற் காதலி சிங்கியின் குரல் எண்ணந் தோன்றிற்று. அதைப்பார்த்து, 'நீ என்காதலியை அழைக்காததென்ன?' என்று கேட்கின்றான். பிறவும் இவ்வாறே கொள்க.

மட்டு-தேன்; இங்கே மணம். மயூரம்-மயில்: வடசொல் இச் சொற்கள் பிற்காலத்தில் கலந்து தமிழின் தூய உருவையும் ஒலி இனிமையையும் கெடுத்தன. விகாரம்-வேறுபாடு; வடசொல். தட்டு-உன்னிடம். கும்பல்-குடம். சகோரம்-சக்கரவாகப் பறவைகள். தன்மை-குளிர்ச்சி. வெச்சு-வெப்பம், சூடு. மகளிர் கொங்கையின் இயற்கைத் தன்மை வெப்பக்காலத்தில் குளிர்ந்தும் குளிர்காலத்தில் சூடுமாக இருக்குமென்பர், 'தண்ணென்று வெச்சென்றுபொன்வர் கொண்டனந்த முலை' என்று குமரகுருபர அடிகள்! கூறுவதாலும் அறிக.
















(103)

சிங்கன், வேட்டையைப்ற்றிச் சொல்லுதல்

கொச்சகக் கலிப்பா


  செட்டிபற்றில் கண்ணிவைத்துச் சிங்கிநடைச் சாயலினாற்
  பெட்டைக் குளத்தில் அன்னப் பேடைநடை பார்த்திருந்தேன்
  கட்டுற்ற நன்னகர்க்கென் கண்ணியெலாம் கொத்திவெற்றி
  கொட்டிக்கொண் டையே கருவியெலாம் போயினுமே.

(பொ-ரை)

செட்டிவயலில் நான் கண்ணிகளை ஊன்றி வைத்து என் சிங்கியினது நடையைப்போல் நடக்கின்ற தன்மையினால் பெட்டைக்குள் வயலில் செல்கின்ற பெண் அன்னத்தினது நடையைப் பார்த்த வண்ணமாக இருந்தேன்; கட்டமைந்த வலிமை பெற்ற கண்ணிகளை யெல்லாம் தம் வாய்களாற் கொத்தி யெடுத்து விட்டு வெற்றிப்பறை முழக்கி நல்ல சேர்க்கையுள்ள திருக்குற்றால நகருக்குப் பறவைகளெல்லாம் பறந்து போகின்றன ஐயே!






(வி-ரை)

செட்டிபற்று-ஒரு வயலின் பெயர். பெட்டைக் குளம்-ஒரு வயலின்பெயர். கட்டு-சேர்க்கை. வெற்றிக்கொட்டு-வெற்றி கொண்டதற்கு முழக்கும் பறை. குருவி-பறவை. போயினும்-போகின்றன.


(104)

சிங்கன், பறவைகள் பறந்துபோவதைச் சொல்லுதல்

இராகம்-முகாரி.
தாளம்-சாப்பு
பல்லவி

(1) போயினும் ஐயே! பறவைகள்போயினும் ஐயா!        (போ)

அனுபல்லவி

(2) போயினும் ஐயே! நாயகர் குற்றாலர்
       பொல்லாத தக்கன் மகத்தை அழித்தநாள்
  வாயில் அடிபட் டிடிபட் டுதைபட்டு
       வானவர் தானவர் போனது போலவே;                (போ)
   
(3) மேடையில் நின்றொரு பஞ்சவர் னக்கிளி
       மின்னார்கை தப்பிஎன் முன்னாக வந்தது
  பேடைஎன் றேஅதைச் சேவல் தொடர்ந்தது
       இன்னொரு சேவலுங் கூடத் தொடர்ந்தது
  சூடியஇன்பம் இரண்டுக்கும் எட்டாமல்
       சுந்தோப சுந்தர்போல் வந்த கலகத்தில்
  காடெல்லாம் பட்சியாக் கூடி வளம்பாடிக்
       கண்ணியும் தட்டியென் கண்ணிலுங் குட்டியே;      (போ)
   
(4) ஆயிரம் கொக்குக்குக் கண்ணியை வைத்துநான்
       அப்பாலே போயொரு மிப்பா யிருக்கையில்
  மாயிருங் காகங்கள் ஆயிரம் பட்டு
        மறைத்து விறைத்துக் கிடப்பது போலவே
  காயம் ஒடுங்கிக் கிடந்தது கண்டுநான்
       கண்ணி கழற்றி நிலத்திலே வைத்தபின்
  சேயிழை தன்பொருட் டாலேபஞ் சாக்கரம்
       செபித்த மன்னவன் பாவம்போ னாற்போலப்;      (போ)
   
(5) தம்பமென் றேநம்பி னோரைச் சதிபண்ணித்
       தாம்வாழப் பார்ப்பவர் செல்வங்கள் போலவும்
  பம்பும்வடபால் அருவியில் தோய்ந்தவர்
       பாவம் கழுநீராய்ப் போவது போலவும்
  கும்ப முனிக்குச் சிவமான காலம்
       குதித்தோடிப் போன வயிணவர் போலவும்
  அம்பிகை பாகர் திருகூட நாதர்
       அடியவர் மேல்வந்த துன்பங்கள் போலவும்.      (போ)

(பொ-ரை)


(1) போகின்றன ஐயே! பறவைகள் போகின்றன ஐயே!

(2) உலகுக்கெல்லாம் தலைவராகிய திருக்குற்றாலநாதரானவர், தீயவனான தக்கன் செய்த வேள்வியை அழித்த நாளில், வாயினிடத்தே அடிபட்டும் உடம்பில் இடிக்கப்பெற்றும் காலால் உதைக்கப்பெற்றும் அஞ்சித் தேவர்களும் அசுரர்களும் ஓடிப் போன தன்மையைப்போல் (பறவைகள் போகின்றன ஐயே, பறவைகள் போகின்றன ஐயே!)

(3) மேடையினின்றும் ஐந்து நிறக்கிளி ஒன்று அங்கிருந்த பெண்களின் கையினின்றும் விடுபட்டு என் முன்னாக வந்தது; அதைப் பெட்டைக்கிளி என்று நினைத்து, ஆண்கிளி ஒன்று தொடர்ந்து வந்தது; மற்றோர் ஆண்கிளியும் அக் கிளியுடன் தொர்ந்து பறந்து வந்தது; தாம் கருதி வந்த இன்பம் இரண்டுக்கும் கிட்டாதபடி சுந்தன் உபசுந்தன் என்னும் அசுரர்கள் திலோத்தமை யென்னும் பெண்ணின் பொருட்டாக நிகழ்ந்த போரில் மாண்ட தன்மைபோல, இக்காடுகள் எங்கும் பறவைகள் கூட்டங் கூட்டமாகக் கூடிக்கொண்டும் அவை பலவகைக் குரலெடுத்துக் கத்திக்கொண்டும், நான் வைத்த கண்ணிகளையும் தட்டிவிட்டு, என் கண்களிலும் தட்டிப்பாய்ந்து சென்று (பறவைகள் போகின்றன ஐயே!)

(4) ஆயிரம் கொக்குகளுக்கு நான் கண்ணிவைத்துவிட்டு சற்றுத் தொலைவில் சென்று இக் கண்ணிகையே ஒருமிப்பாகப் பார்த்துக் கொண்டிருக்கையில் ஆயிரம்கண்ணிக்குள்ளும் ஆயிரம் காகங்கள் அக்கப்பட்டு மறைபட்டுச் செத்துக்கிடப்பது போல உடல் ஒடுங்கிக்கிடந்ததைப் பார்த்து, நான் கண்ணிகளைக் கழற்றி நிலத்திலே வைத்ததும் தன் மனைவி மங்கையர்க்கரசி காரணமாக மதுரை அரசனாகிய கூன்பாண்டியன் ஐந்தெழுத்தை ஓதினவுடன் அவன் வினைகளெல்லாம் விடுபட்டுத் தொலைந்து போனாற் போல, (பறவைகள் போகின்றன ஐயே!)

(5) தாமே தமக்கு ஆதரவென்னு தம்மை நம்பினவர்களை வஞ்சனைசெய்து தாம் மட்டும் வாழப்பார்க்கின்ற தம்மைப் பேணிய மனிதர்களின் செல்வங்கள் அழிந்து தொலைவது போலவும், நிறைகின்ற நீர்ப்பெருக்கினையுடைய வடவருவித் தீர்த்தத்தில் முழுக்காடினவர்களின் பாவங்களெல்லாம் நீரில் கழுவப்பட்ட அழுக்குகள் கரைந்து போவது போலவும், அகத்திய முனிவருக்குத் திருமால் உருவம் மாறிச் சிவ உருவமாக இறைவன் காட்சியளித்தபோது, அங்கே சற்றும் தங்காது துள்ளி வெளியேறி ஓடிப்போன திருமாலடியவர்களைப் போலவும், குழல்வாய்மொழியம்மையைத் தம் பாகத்திற்கொண்ட திரிகூடநாதபெருமானுடைய தொண்டர்களின் மேல் பற்றியிருந்த துன்பங்கள் உடனே ஒழிந்து போவது போலவும், (பறவைகள் போகின்றன ஐயே!)






(வி-ரை)

1-5. மகம்-யாகம்; வேள்வி. தானவர்-அசுரர். சுந்தோப சுந்தர் என்பவர்களின் அரக்கர்கள்; உடன் பிறந்த அண்ணன் தம்பிகள். சுந்தர் உபசுந்தர் என்பது அவர்களின் பெயர். இருவரும் திலோத்தமை யென்ற அழகிய பெண்ணொருத்தியைக் கண்டு காமங்கொண்டு, அது வெளியாகி எனக்கு உனக்கு என்று கூறிவாய் போராகிக்கைப்போர் செய்து இறந்தனர் என்பது வரலாறு.

ஓருமிப்பாய்-ஒரே பார்வையாய். மறைபட்டு-கண்ணிக்குள் மறைந்து. மன்னவன்-கூன்பாண்டியன். தம்பம்-பற்றுக்கோடு. வடபால்-வடபக்கம். பம்பும்-நெருங்கும்.







(105)