பக்கம் எண் :


சிங்கன், குற்றாலத்தில் சிங்கியைத் தேடுதல்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


நற்றாலம் தன்னிலுள்ளோர் யாவரேனும்
   நன்னகரத் தலத்தில்வந்து பெறுவார் பேறு
பெற்றார்தாம் நன்னகரத் தலத்தை விட்டாற்
   பிரமலோ கம்வரைக்கும் பேறுண்டாமோ
வற்றாத வடஅருவிச் சாரல் நீங்கி!
   வடகாசி குமரிமட்டும் அலைந்த சிங்கன்
குற்றாலத் தலத்தின்முன்னே தவத்தால் வந்து
   கூடினான் சிங்கிதனைத் தேடி னானே.

(பொ-ரை)

நல்ல உலகத்திலுள்ளோர் யாவாராயினும் நன்னகரமாகிய திருக்குற்றாலத்திற்கு வந்தால், தாம் அடைய வேண்டிய பயன்களை எல்லாம் அடைவார்கள்; இந்த நன்னகரை விட்டுச் சென்றால் பிரம லோகம் வரை சென்றாலும்கூட அவர்க்கு எந்தப் பயனும் கிடைக்குமோ? கிடைக்காது. நீர் வற்றாத வடஅருவியையுடைய! மலையடிவாரத்தைவிட்டு வடக்கே காசி முதல் தெற்கே கன்னியாகுமரி வரையிலும் அலைந்து சிங்கியைத் தேடி சிங்கனானவன் தான் முன்செய்த தவத்தின் பயனால் திருக்குற்றாலத்தலத்தில் வந்து சேர்ந்தான்; அங்கேயும் சிங்கியைத் தேடுவானானான்.

(வி-ரை)

நல்தாலம்-நல்உலகம். பேறு-பெறுவழி; சிறந்தது. முன்னே-முன்பிறப்பில். கூடினான்-சேர்ந்தான்.

(113)

சிங்கன் சிங்கியைக் காணாமல் மீண்டும் புலம்பல்


இராகம்-தோடி
தாளம்-ஆதி.
பல்லவி

(1) சிங்கியைக் காணேனே! என் வங்கணச் சிங்கியைக் காணேனே!

அனுபல்லவி

(2) சிங்கியைக் காமப்ப சுங்கினிப் பேடைடைச்
       சீர்வளர் குற்றாலர் பேர்வளம் பாடிய
  சங்கீத வாரியை இங்கித நாரியைச்
       சல்லாபக் காரியை உல்லாச மோகனச்             (சிங்கி)

(3) ஆரத் தனத்தைப் படங்கொண்டு மூடி
       அசைத்துநின் றாளதை யானைக்கொம் பென்றுநான்
  கோரத்தை வைத்த விழிக்கதிர் சென்றேனென்
       கொஞ்சத் தனத்ததை அறிந்து சுகக்காரி
  பாரத் தனத்தைத் திறந்துவிட் டாள்கண்டு
       பாவியேன் ஆவி மறந்துவிட் டேனுடன்
  தீரக் கனிய மயக்கி முயக்கியே
       சிங்கார மோகனம் சிங்கிகொண் டாளந்தச்;          (சிங்கி)

(4) பூவென்ற பாதம் வருடி வருடிப்
       புளக முலையை நெருடி நெருடி
  ஏவென்ற கண்ணுக்கோர் அஞ்சனம் தீட்டி
       எடுத்த சுருளும் இதழால் இடுக்குவள
  வாவென்று கைச்சுருள் தாவென்று வாங்காள்
       மனக்குறி கண்டு நகக்குறி வைத்தபின்
  ஆவென் றொருக்கால் இருக்கால் உதைப்பன்
       அதுக்கு கிடந்து தொதிக்குதென் பேய்மனம்;         (சிங்கி)

(5) தாராடும் குன்றி வடத்தை ஒதுக்கித்
       தடமார் பிறுகத் தழுவவந் தாலவள்
  வாராடும் கொங்கைக்குச் சந்தனம் பூசாள்
       மறுத்துநான் பூசினும் பூசலா காதென்பாள்
  சீராடிக் கூடி விளையாடி இப்படித்
       தீரா மயல்தந்த தீராமைக் காரியைக்
  காராடும் கண்டர்தென் ஆரிய நாட்டுறை
       காரியப் பூவையை ஆரியப் பாவையை.            (சிங்கி)

(பொ-ரை)

(1) என் அன்புக்குரியவளான சிங்கியைக் கண்டேனில்லையே! என் சிங்கியைக் கண்டேனில்லையே!

(2) சிங்கியென்னும் பெயருடையாளை, காமமூட்டும் பெட்டைப் பச்சைக்கிளியைச் சிறப்புமிகும் திருக்குற்றாலநாதர் பெருவளத்தைப்பாடிய இசைக் கடலை, இன்பந்தரும் மங்கையை, கனிந்த மொழிகளால் இனிக்கப் பேசும் இன்பமிக்க ஆசையுள்ள(சிங்கியைக் கண்டேனில்லையே!)

(3) முத்துமாலையணிந்த கொங்கையை மேற்சீலையால் மூடி அதை அசைத்துக்கொண்டு நின்றாள்; இதனை நான் யானையினது கொம்பு என்று கொடுமைபொருந்திய அவள் கண்ணுக்கெதிரே போனேன்; அந்த இன்பமான பெண் எனது எளிமைத்தனத்தை அறிந்து பருத்த தன் கொங்கையைத் திறந்து விட்டாள் அதனைப் பார்த்த பாவியேன் (என்னையே மறந்த) உணர்ச்சியற்றவனானேன் உடனே முழுவதும் என் மனம் இளகிப் போகும்படி காதல் மயக்கத்தை உண்டாக்கி என்னைக் கட்டித்தழுவிச் சிறந்த அன்பு என்பாற்கொண்டாள் அத்தகைய என், (சிங்கியைத் கண்டேனில்லையே!)

(4) மலரென்னும்படியான அவள்தன் கால்களைத் தடவித் தடவிப் பிடித்து, இன்பத்தால் மயிர் சிலிர்க்கின்ற கொங்கைகளைத் தடவித் தடவி அம்புகளையும் வென்ற அவள் கண்கட்கு அழகிய மை எழுதிக்கொண்டிருக்க, கையில் எடுத்த வெற்றிலைச் சுருளையும் உதடுகளால் இறுக்கிப் பிடிப்பாள்; 'வா' என்று கூறிக்கையிலுள்ள வெற்றிலை மடிப்பைத் 'தா' வென்று கேட்டு வாங்கமாட்டாள். அவள் மனத்தின் குறிப்பை நான் அறிந்து கொண்டு என் நகத்தாற் கிள்ளி அடையாளக்குறி செய்தபின்பு 'ஆ! ஆ' என்று கூறித் தன்னுணர்வற்ற நிலையில் ஒரே ஒரு தரம் தன் இருகால்களினால் எனக்கு எட்டி உதை கொடுப்பாள் அந்தச் செயலையே நினைத்துக்கொண்டு கிடந்து என் பித்து பிடித்த மனமானது வருத்தங்கொள்கின்றதே! (சிங்கியைக் கண்டேனில்லையே!)

(5) மாலையாக அசைகின்ற குன்றிமணி மாலையை விலக்கித் தன் பெரிய மார்பை இறுக்கமாகக் கட்டி அணைக்க வந்தால், அவளது கச்சுப் பொருந்தியதனங்கட்குச் சந்தனம்பூச மாட்டாள் அதனை மறுத்து "நான் பூசுகிறேன்" என்று பூச முற்படின் "பூசவேண்டா" எனமறுப்பாள். இ்ங்ஙனம் இன்புரையாடிக் கூடி விளையாடித், தீராத மயக்கத்தை விளைத்த கொடுமைக்காரியை, மேகத்தையொத்த கரிய நஞ்சுக் கறையையுடைய கழுத்தினரான திருக்குற்றாலநாதரின் காரியக்காரியை ஆரியப்பாவை போல்வாளான. (சிங்கியைக் கண்டேனில்லையே)


(வி-ரை)

1-5 தாலம்-உலகம். வங்கணம்-பேரன்பு காதல். உல்லாசம்-உள்ளக்களிப்பு. படம்-மேற்சீலை, தீர்க்கனிய-முழுவதும் இளக. முயக்கி-தழுவி. மோகனம்-புணர்ச்சி. வருடி-தடவி. ஆ என்று - பரவசப்பட்டு. தார்-மாலை. பூசல்-பூசுதல். சண்டை ஆரியம்-அழகு.

(114)

நூவன், சிங்கியினது அடையாளம் வினாவுதல்

கொச்சகக்கலிப்பா


  சங்கமெலாம் முத்தீனும் சங்கர்திரி கூடவெற்பில்
  பொங்கமெலாம் செய்யும் உங்கள் போகமெலாம் ஆரறிவர்
  சிங்கமெலாம் ஒத்ததுடிச் சிங்காஉன் சிங்கிதனக்
  கங்கமெலாம் சொல்லி அடையாளம் சொல்வாயே

(பொ-ரை)

சிங்கத்தை ஒத்திருக்கின்ற வீரமுடைய சிங்கா! சங்குகளெல்லாம் முத்துக்களை, ஈனுகின்ற சங்கு வடிவக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற திருக்குற்றாலநாதருக்குரிய திரிகூடமலையினிடத்தே இன்பம் மிகுதியைத்தருகின்ற உங்கள் சேர்க்கை நிலையைப் பிறர் எவர் அறிவார்கள்? நீங்களேதாம் அறிவீர்கள்; உன் காதலியாகிய சிங்கிக்குரிய அவள் உறுப்புகளின் அழகை எல்லாம் எனக்கு விளக்கிச்சொல்லி அவளைக் காண்பதற்கான அடையாளத்தையும் நீ கூறுவாயாக.


(115)