பக்கம் எண் :


சிங்கன், சிங்கியினது அடையாளம் கூறுதல்

இராகம்-பியாகடை
தாளம்-முசுரம்
பல்லவி
(1) கறுப்பில் அழகியடா! என்சிங்கி கறுப்பில் அழகியடா!

அனுபல்லவி

(2) கறுப்பி லழகி காமச் சுறுக்கில் மிகுந்த சிங்கி சுகக்காரி;     (கறுப்)

சரணங்கள்
(3) கண்களிரண்டும் அம்புக் கணைபோல நீண்டிருக்கும்
       கையத் தனைஅகலம் காணுமடா
  பெண்கள் மயக்குமவள் விரகப்பார்வை சிங்கி
       பிடித்தால் மதப்பயலும் பெலப்பானே;            (கறுப்)

(4) நகையுமுகமும் அவள் நாணயக் கைவீச்சும்
       பகைவரும் திரும்பிப் பார்ப்பாரடா
  தொகையாய்ச் சொன்னேன் இனிச் சொல்லக் கூடாதொரு
       வகையாய் வருகுதென்னை மயக்குதையே;         (கறுப்)

(5) விடையில் வரும்பவனி உடையர் திருக்குற்றாலர்
       சடையில் அழகும்இரு துடையி லழகும் அவள்
  நடையில் இளம்பிறைபோல் தனிநுதலாள்
       உடையில் அழகுமென்னை உருக்குதையோ.        (கறுப்)

(பொ-ரை)

(1) அடே! கருநிறத்திலேயே ஒரு அழகானவளடா!

(2) சிங்கி நிறத்தில் கறுப்புநிற அழகுள்ளவளடா? காமக்கவர்ச்சியில் மிக்கவள்; அந்தச் சிங்கி மிக்க இன்பங் கொடுப்பவளடா!

(3) அவளுடைய இரண்டு கண்களும் அம்புகளைப் போல நீண்டு கூர்மையாக இருக்கும்; அக் கண்களின் அகலங்களோ, கையை விரித்தால் எவ்வளவு அகலமோ அவ்வளவினவாகத் தோற்றமளிக்குமடா! பெண்களைக் கூட மயங்கச் செய்கின்ற காதற் பார்வையால் என் சிங்கி பார்க்க முற்படுவாளானால், மன்மதனென்றும் பெயருடைய இளைஞன் கூட அவளுக்கு எதிராக நிற்க வல்லவனோ? (அவனும் மயங்கி விழுவானடா)

(4) அவள் புன்சிரிப்பும், அதுதோன்றும் முகப்பொலிவும்! சிறந்த கைகளை வீசிச்செல்லும் தன்மையும், அவட்குப்பகைவர்கள் கூடக் கண்டால் திரும்பிப் பார்ப்பார்களடா! இங்கே இவற்றைச் சுருக்கமாகக் கூறினேன். இனிச்சொல்ல முடியாது போலிருக்கின்றதே! ஏதோ ஒரு வகையாக எனக்கு வருகின்றது; என்னவோ பித்தந்தான் மயக்குகின்றதே!

(5) காளை ஊர்தியின் மீதேறி உலாவருகின்றவரான திருக்குற்றால நாதரின் திருச்சடைமுடி மீதிருக்கின்ற மூன்றாம் பிறையைப் போன்ற ஒப்பில்லாத சிறிய நெற்றியுடையாள்; அவள் ஆடையின் அழகும், என்னை மனம் இளகச் செய்கின்றதே ஐயோ!


(வி-ரை)

1-5. போகம்-இன்பம். துடி-வீரம். அங்கம்-உறுப்பு. சுறுக்கில்-விரைவில். அம்புக்கணை-அம்புகள்; ஒரு பொருட் பன்மொழி. பெலப்பானோ-பலங்கொண்டு எதிர்த்து நிற்பானோ? நாணயம்-ஒழுங்கு; சிறப்பு.

(116)

நூவன் சிங்கியைச் சேர்த்துவைப்பதற்குச்
சிங்கனிடம் கூலிவினாவுதல்


கொச்சகக்கலிப்பா

  சாட்டிநிற்கும் அண்டமெலாஞ் சாட்டையிலாப் பம்பரம்போல்
  ஆட்டுவிக்கும் குற்றாலத் தண்ணலார் நன்னாட்டிற்
  காட்டுவிக்கும் உன்மோகக் கண்மாயச் சிங்கிதனைக்
  கூட்டுவிக்கும் பேர்களுக்குக் கூலியென்ன சொல்வாயே.

(பொ-ரை)

ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கின்ற உலகங்களையெல்லாம் சாட்டைக் கயிறில்லாத பம்பரம் போல் ஆடச்செய்கின்ற திருக்குற்றாலத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமைமிக்கவரான திருக்குற்றாலநாதருக்குரிமையான நல்ல இந்நாட்டிடத்தே எல்லோருக்கும் தெரியச் செய்கின்ற உன்னுடைய மோகத்துக்குரிய கண்களையுடைய மாயத்தைத் தருகின்ற சிங்கியை உன்னிடங்கொண்டு வந்து கூட்டவிப்பவர்களுக்கு நீ என்ன (பரிசு) கூலி கொடுப்பாய் சொல்லு?


(117)

சிங்கன் நூவனுக்குக் கைம்மாறு கொடுத்தலைக்கூறுதல்

இராகம்-தர்பார்
தாளம்-ரூபகம்
கண்ணிகள்

(1) வாடை மருந்துப் பொடியும் அம்மியூர்
      மரப்பாவை பின்தொடர மாயப் பொடியும்
  கூடியிருக்க மருந்தும் இருபொழுதும்
      கூடியிருப் பார்களைக் கலைக்க மருந்தும்
  காடுகட்டக் கினிக்கட்டு குறளி வித்தை
      கண்கட்டு வித்தைகளும் காட்டித் தருவேன்
  வேடிக்கைக் காம ரதிபோல் திரிகூட
      வெற்பிலுறை சிங்கிதனைக் காட்டாய் ஐயே!

(2) மலையைக் கரையப் பண்ணுவேன் குமரிகட்கு
      வாராத முலைகளும் வரப்பண்ணுவேன்
  முலையை ஒளிக்கப் பண்ணுவேன் ஒளித்தபேர்க்கு
      மோகினி மந்திரஞ்சொல்லி வரப்பண்ணுவேன்
  திலக வசீகரம் செய்வேன் ஒருவருக்கும்
      தெரியாமற் போகவரச் சித்தும் அறிவேன்
  கலக மதனப் பயலை என்மேற்கண்
      காட்டிவிட்ட சிங்கிதனைக் காட்டாய் ஐயே!

(பொ-ரை)

(1) மணமுள்ள மருந்துப் பொடியும் அம்மி மேல் ஏறிநடக்கின்ற மரத்தாற்செய்த பாவைகளும் கூட உன் பின்னே தொடர்ந்து வரச் செய்யும் மாயாசாலப் பொடியும், (காதலன் காலிகள் இணைபிரியாமல்) சேர்ந்திருப்பதற்குரிய வசிய மருந்தும், காலைமாலை முதலிய எல்லா நேரங்களிலும் பிரியாதிருக்கின்ற காதலர்களைக் கலைத்து மாறுபாடு கொள்வதற்கேற்ற வெறுப்புத் தரும் மருந்தும், காடுகளிலிருந்து பறவை விலங்கு முதலிய வெளியேறிச் செல்லாதபடி காடுகளைக் கட்டுப்படுத்தும் வித்தையும் நெருப்பைச்சுடாமல் குளிரும்படி செய்து கட்டுப்படுத்துகின்ற வித்தையும், பார்ப்பவர் கண்கட்குத் தாம் சொல்லும் பொருளே தோன்றும்படி செய்கின்ற கண்கட்கு வித்தைகளும் சொல்லித் தருவேன்; சிறந்த தோற்றமுள்ள காமனுக்குரிய இரதி போன்ற அழகுள்ளவளான திரிகூட மலையில் வாழும் என் சிங்கியைக் கொண்டு வந்து காட்டையே!

(2) நான்மலைகளைக் கூட நீராகக் கரைந்தோடும்படி செய்வேன்? பருவம் வந்ததும் கொங்கைகள் தடித்து மேலெழும்பாத இளம் பெண்களுக்கு அவை மேலே புடைத்தெழுந்துபருக்க வைப்பேன்? அப்படித்தடிக்தெழுந்த கொங்கைகளையே இல்லாத படி கூடச் செய்வேன்; அவ்வாறு இல்லாது செய்த பெண்களுக்கு மோகினிப்போய் மந்திரஞ் செபித்து மீண்டும் வருமாறு செய்வேன்; அஞ்சன மை போட்டு எப்படிப்பட்ட பெண்களையும் எனக்கு வசமாகும்படி செய்வேன்; எவர் கண்களுக்குந் தோன்றாமல் வெளியே போய்வரக்கூடிய சித்தர் வித்தையும் அறிந்துள்ளேன்; இவ்வளவு வித்தையையும் கற்ற என்மீது காதலால் கலகமூட்டுகின்ற மன்மதப் பயலை என்னிடம் வரும்படி தன் கடைக்கண்களால் காட்டிவரச்செய்த சிங்கியை என்னிடம் கொண்டுவந்து காட்டுவாயையே! (காட்டினால் இந்த வித்தைகளையெல்லாம் உனக்குக் கற்றுக் கொடுப்பேன்!)


(வி-ரை)

1-2 சாட்டி-நெருங்கி. மரப்பாவை-மரத்தாலாகிய பாவை. அக்கினிக்கட்டு-தீசுடாமலிருக்கச் செய்தல். வசீகரம்-வசமாக்குதல். சித்து-மந்திரம். கண்காட்டி விட்ட-ஏவிவிட்ட. .

(118)