திருக்குற்றாலத்
திருநகர், பாண்டிநாட்டுத் திருநகர்கள் பதினான்கில் ஒன்றாகத்
திகழும் பெருமை பெற்றது.
இது மலைவளம் நீர்வள நிலவளங்கள் முதலிய
பல்வகை வளங்களுஞ் செறிந்தது; கண்டவர் கண்ணையும் கருத்தையும்
கவரத்தக்க பேரெழில் வாய்ந்தது; முழுழுதற் கடவுளாகிய சிவபெருமான்
எழுந்தருளியிருக்கும் பேறு பெற்றது; அதனால் தன்பால் வந்து தங்குவார்க்கு
எல்லா நோய்களையும் போக்கி எண்ணிய எண்ணியாங் கெய்துவிக்கும்
சிறப்புடையது; சிவமது கங்கை, செண்பகத்தடாகம், பொங்குமாகடல்,
வடஅருவி, சித்திராநதி என்னும் ஐந்து தீர்த்தங்கள் அமைந்த
சிறப்புப் பெற்றது.
'போதும்
பொன்னும் உந்தி அருவி புடைசூழக்
கூதல் மாரி நுண் துளி தூங்கும் குற்றாலம்'
என
சம்பந்தப் பெருமான் பாடல்சால் சிறப்புக்குரிமையது.
இத்தகைய தலத்தில் குறும்பலா மரத்தினடியில்
இறைவன் எழுந்தருளியிருக்கின்றான் என்பது இத் தலபுராண வரலாறு;
இங்கே இறைவன் திருநடஞ் செய்யுஞ் சித்திர சபை ஒன்றுள்ளது; இது
திருக்குற்றாலநாதர் திருக்கோயிலுக்கு வட பக்கமுள்ளது. இச் சபையில்
சிவபெருமான் திருக்கூத்தாட, உமையம்மையார் தாளங்கொட்டிநின்று
கண்டுகளித்தனர் என்பது வரலாறு. இச்சபை, ஐந்து சபைகளில் ஒன்றாகத்
திகழும் பெருமை பெற்றது.
இத் திருநகர்க்கு இருபத்தொரு திருப்பெயர்கள்
உள்ளன. அவை: பிதுர்கண்டம் தீர்த்தபுரம் (1) சிவத்துரோகந்
தீர்த்த பெருமை மூதூர் (2) மதுவுண்டான் உயிர்மீட்டபுரம் (3)
பவர்க்கமீட்டபுரம் (4) வசந்தப் பேரூர் (5) முதுகங்கை வந்தபுரம்
(6) செண்பகாரணிய புரம் (7) முத்திவேலி (8) நதி மூன்றில் மாநகரம்
(9) திருநகரம் (10) நன்னகரம் (11) ஞானப் பாக்கம் (12) வேடன்
வலஞ்செய்த புரம் (13) யானை பூசித்த புரம் (14) வேதசத்திபீடபுரம்
(15) சிவமுகுந்த பிரமபுரம் (16) முனிக்கு உருகும் போரூர் (17)
தேவகூடபுரம் (18) திரிகூடபுரம் (19) புடார்ச்சுனபுரம் (20) குறும்பால
விசேடபுரம் (21) என இருபத்தொரு திருப்பெயர்கள் காரணங்களால்
கொண்டு ஓங்கும் சிறப்புக் பெற்றது. திருக்குற்றாலத் தலபுராணத்துத்
தலமகிமைச் சருக்கம் 30,31 ஆம் பாடல்களால் இவை விளக்கப்படுகின்றன.
அவை: