பக்கம் எண் :


நூலாசிரியர் வரலாறு

1. தோற்றம்:

   சொல்லென்னும் பூம்போது தோற்றிப்பொருளென்னும் நல்லிரும்பூந்தாது நம் தமிழ்நாடெங்கணும் கமழ்ந்து இன்பத்தைப் பரப்புமாறு இக் குறவஞ்சி நாடகத்தை உதவியவர், திரிகூடராசப்பக் கவிராயரென்னும் செம்மலாவர். இவர், நம் சமய குரவர்களால் பாடல்சால் சிறப்புப்பெற்ற திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசியை யடுத்துள்ள மேலகரம் என்னும் நகரில் ஏறக்குறைய இற்றைக்கு இருநூற்றைம்பது யாண்டு கட்குமுன் பிறந்தவராவர்; இவர் சைவ வேளாண் குலத்தினர்; திருவாவடுதுறை ஆதீன மடத்தின் தலைவராக இலகியிருந்த மறைத்திரு சுப்பிரமணிய சுவாமிகளின் மரபு வழியினர்.

2. நூற்பயிற்சி :

   இவர் தம் இளம் பருவத்திலேயே தமிழ்க்கல்வி பயின்று அதில் நன்கு தேர்ச்சி பெற்றார்; செய்யுள் இயற்றும் திறனும் கைவரப் பெற்றார்; அவற்றுள், மடக்கு திரிபு சிலேடை முதலிய சொல்லணிகளும், உவமை முதலிய பொருளணிகளும் சிறப்பப் பாடுதலில் வல்லுநர்; அஃதோடு விரைந்து பாடும் பேராற்றலும் தொழுதலேயெனக் கொண்டார்; அதனால் தேனருவித் திரையெழும்பி வானின்வரை யொழுகுகின்ற திருக்குற்றாலத் திருநகரில் குறும்பலாவெனும் நறும்பலா நிழலின்கண் எழுந்தருளியிருக்கின்ற திருக்குற்றால நாதராகிய திரிகூடராசப் பெருமான் மீது பதினான்கு நூல்கள் பாடினார். அவற்றுள் மக்களெல்லாம் விரும்பிக் கொண்டு கூட்டுண்ண இசைவிருந்தோடு பொருள் விருந்தும் நய விருந்தும் கொண்டு மிளிர்வது, இக் குறவஞ்சி நூலாகும்.

3. இந்நூல் செய்தலும் பாராட்டுப் பெறுதலும் :

   இந்நூல் அளவிற் சிறிதேனும் பொருள்வளத்தில் சொல் வளத்தில் மிகமிகப் பெரிது; இதனைக் கற்றார் நன்குணர்வர். இதன் பெருமையை இந்நூல் தோன்றிய காலத்தேயே உணர்ந்து புலவர்க்குச் சிறப்புச்செய்து போற்றியவர், இவர் காலத்தே நம் தென் தமிழகத்தை மதுரையிலிருந்து ஆட்சி செய்த முத்துவிசயரங்க சொக்கநாத நாயக்கராவர். அவர், இவரியற்றிய இந்நூலின் சிறப்புக்கண்டு மகிழ்ந்தும், ஏனைய பதின்மூன்று நூல்களின் தன்மைகள் கண்டு வியந்தும், இவர்க்கு 'திருக்குற்றலாநாதர் கோயில் வித்துவான்'என்ற சிறப்புப் பட்டப்பெயர் சூட்டிப் பாராட்டினார்; இந்நூலின் நினைவுக் குறியாகக் 'றவஞ்சிமேடு' என்னும் பெயர்க்கொடுத்துச் சிறந்த தண்ணடையான நன்செய் நிலத்தை வாரம் வரியின்றி முற்றூட்டாக வழங்கினார்; அதற்குரிய செப்பேடும் பொறித்து, அது, இவர் வழி வழி மரபினர்க்கே உரிமையாகுமாறும் தீட்டித் தம் கைச்சாத்தும் இட்டுள்ளார். அச் செப்பேட்டின் சொற்றொடர்கள் வருமாறு:

4. செப்பேட்டு விளக்கம் :

   'சாலிவாகன சகாப்தம் 1640 -க்குச் செல்லாநின்ற கொல்லம் 891u தைமீ 112, ராஜமானிய ராஜஸ்ரீ முத்துவிஜயரெங்க சொக்கநாத நாயக்கரவர்களோம்; திருக்குத்தாலம் ராஜப்பன் கவிராஜருக்குப் பொறுப்புப் பட்டயம் எழுதிக் கொடுத்தபடி சுவாமி திருக்குற்றாலநாத சுவாமி பேரில் குறவஞ்சி நாடகம் பாடி அரங்கேற்றினதற்கு மேலச் செண்பகக் காவில் கருப்புக்கட்டி ஊத்துமேட்டில் கல், உல், சங்கிலி அளவு ஹீ 3வ-யும் 52-யும் விட்டுக் கொடுத்த படியினாலே பொறுப்பு uக்கு தீர்வை.....வீதம் குடுத்து கையாடிக் கொண்டு சன்னதி பிரபந்த வித்துவானானக நடந்து வருவாராகவும், இந்த நிலத்துக்கு வேறே வரி, நாட்டுச் சிலவு காவல் கூலி, போர் நெல் குடுக்கத் தேவையில்லை யென்று கட்டளையிட்ட படியினாலே இந்தப் படிக்குக் கையாடிக் கொள்ளவும்.
           கையொப்பம் (தெலுங்கில்) ஸ்ரீராமஜெயம்.

   இந்நிலம் இன்றும் இவருடைய வழியினருக்குப் பெண் வழிக் காணியாக இருந்து வருகின்றது. இந் நூலாசிரியரின் வழித் தோன்றலாகிய திருவாவடுதுறை ஆதீனத்து மகா சந்நிதானம் மறைத்திரு சுப்பிரமணிய சுவாமிகளின் தமையனார் வைத்தியலிங்கக் கவிராயர் மகள்பிள்ளை பேரரும் கடையம் சங்கரலிங்கம் பிள்ளையவர்களின் புதல்வருமாகிய வைத்தியலிங்கம் பிள்ளையவர்களும் அவர்கள் உடன்தோன்றலார் போலீசுடிப்டி சூப்பிரண்டெண்டாகத் திகழ்ந்த இராவ்சாகிபு கே.எஸ்.கற்பக விநாயகம்பிள்ளை பி.ஏ., அவர்களும் ஆண்டுவந்த சிறப்புப்பெற்றுள்ளது.

5. இந்நூலாசிரியர் இயற்றிய வேறு நூல்கள்:

  1. திருக்குற்றலத் தலபுராணம்
  2. திருக்குற்றால மாலை
  3. திருக்குற்றாலச் சிலேடை வெண்பா
  4. திருக்குற்றால யமக அந்தாதி
  5. திருக்குற்றால உலா
  6. திருக்குற்றால ஊடல்
  7. திருக்குற்றாலப் பரம்பொருள் மாலை
  8. திருக்குற்றாலக் கோவை
  9. திருக்குற்றாலக் குழல்வாய்மொழி மாலை
 10. திருக்குற்றாலக் கோமளமாலை
 11. திருக்குற்றால வெண்பா அந்தாதி
 12. திருக்குற்றாலப் பிள்ளைத்தமிழ்
 13. திருக்குற்றால நன்னகர் வெண்
பா.

6. ஆரியர் நன்றியறிவு:

   இவரை ஆதரித்துப் புரந்து வந்தவர்களுள் சொக்கம் பட்டிக் குறுநில மன்னர் சின்ணஞ்சாத் தேவரும் ஒருவராவர் அவரை இந்நூலகத்தில் ஏற்ற இடங்களில் போற்றிப் புகழ்ந்து தம் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். கம்பர் தம்மை ஆதரித்த திருவெண்ணெய்நல்லூர்ச் சடையப்ப வள்ளலைத் தாம் பாடிய இராமகாதையில் அமைத்துள்ளமை போலவும், புகழேந்திப் புலவர் தம்மை ஆதரித்துப் போற்றிய சந்திரன் சுவர்க்கி மன்னனைத் தாம்பாடிய நளவெண்பா நூலில் ஏற்ற இடங்களில் அமைத்துள்ளமை போலவும் இவரும் அமைத்த சிறப்பு, போற்றற்குரியதாகும். அவற்றுட் சில:

   குறத்தி தன் குறிசொல்லும் திறத்தை வசந்த வல்லியிடங் கூறும்போது கூறுவதாக.

'நன்னகர்க் குற்றாலம்............
     தென்னாரும் சித்ர சபையை எங்கள்
சின்னணஞ் சாத்தேவன்
     செப்போடு வேய்ந்த
முன்னாளி லேகுறி சொல்லிப் பெற்ற
     மோகன மாலைபார் மோகன வல்லி    (62)

என்றும் குறவனானவன், பறவைகள் யாவும் வந்து இறங்கி மேய்கின்ற தன்மையைக் கூறுங்கால்.

'ஆலயஞ் சூழத் திருப்பணியுங்கட்டி
     அன்னசத் ரங்கட்டி அப்பாலும் தென்காசிப்
பாலமுங் கட்டிப் படித்தரம் சேர்கட்டிப்
     பக்த சனங்களைக் காக்கத் துசங்கட்டி
மாலயன் போற்றிய குற்றால நாதர்
     வழித்தொண்டு செய்திடக் கச்சைகட் டிக்கொண்ட
சீலன் கிளுவையில் சின்னணஞ் சேந்த்ரன்
     சிறுகால சந்தித் திருத்துப் புறவெல்லாம்'(63)

என்றும் கூறுவனவற்றால் புலனாகும்.

   அன்றியும் ஏனையவர்களில், தம்பால் அன்புடையவர்கள் யாவர்களையும் இந்நூலில் பறவைகள் மேய்கின்ற வயல்களைக் கூறுங்கால் அவர்கள் சிறப்பெல்லாம் கூறி வருதல், இவர்தம் அன்புள்ள உள்ள நலனைப் புலனாக்குகின்றது.

7. ஆசிரியர் உள்ளப்பண்பும், வீடுபேறடைதலும்:

   புலவர்கள், தாம் ஆக்கும் நூலகத்தில் மக்கட்கு வேண்டும் அடிப்படையான அறங்களை ஏற்ற இடத்துச் சொல்லி அறத்தை வலியுறுத்திப் போவது மரபு; அஃது, அவர்தம் குறிக்கோளுமாகும், நம் கவிராயரும் அதில் வழுவாது ஏற்ற இடங்களில் அமைத்துள்ளார். அஃது இவர் அறவுள்ளங்கொண்ட ஆண்டகையார் என்பதை விளக்கிக் காட்டுகின்றது, அன்றியும் இவர் திருக்குற்றாலநாதர்பால் அளவுகடந்த பேரன்பு பூண்டொழுகிய அன்புடையவர் என்பதும் புலனாகின்றது. எடுத்துக் காட்டாக இரண்டொன்று காட்டுவாம்.

   பறவைகள், கண்ணிக்குள் வந்து சிக்கிக்கொள்வதைக் கண்ட குறவன் கூற்றாக.

'பூசி உடுத்து முடித்து வளையிட்டுப்
     பொட்டிட்டு மையிட்டுப் பொன்னிட்டுப் பூவிட்டுக்
காசு பறித்திடும் வேசையர் ஆசாரக்
     கண்ணிக்குள் ளேபடும் காமுகர் போலவும்' (99)

என்றும்,

'தம்பமென்றே நம்பி னோரைச் சதிபண்ணித்
     தாம் வாழப் பார்ப்பவர் செல்வங்கள் போலவும்'(105)

என்றும் வருவன, கணிகையராகிய வேசையர்தம் வஞ்சநிலையும் அவர்தம் கூட்டுறவால் காமுகர் சிக்கிக் கெடும் தன்மையும் கூறி அறவழியில் நடக்கக் குறிப்பார் தூண்டுகின்றார்.

   நம்பினோர்க்குக் கெடுதல் செய்யும் கொடியர் கெட்டே தொலைவர்; அவர் செல்வமும் தொலைந்துவறிஞராவர் என்பதையும் கூறி, நல்வழியில் நடக்குமாறு யாவருக்கம் அறிவுறுத்துகின்றார், பின்னரும் குறவன் தற்பெருமையாகப் பேசுங்கால்

'காதலஞ் செழுத்தார் போதநீ றணியார்
     கைந்நகரம் பெடுத்துக் கின்னரம் தொடுத்தப்
பாதகர் தோலால் பலதவி லடித்துப்
     பறவைகள் படுக்கும் குறவனும் நானே.   (85)
தலைதனிற் பிறையார் பலவினில் உறைவார்
     தகைதனை வணங்கார் சிகைதனைப் பிடித்தே
பலமயிர் நறுக்கிச் சிலகண்ணி முறுக்கிப்
     பறவைகள் படுக்கும் குளுவனும் நானே'(86)

என்பன போன்றன, இவர் இறைவன்பால் மாறப் பத்திமைக்கு அறிகுறியாவன. திருநீறணியாதவர்களின் கைந்நரம் பெடுத்துக் கின்னரிக்கு நரம்பாகக் கட்டுவதாகவும், அவரைக் கொன்று அவர் உடல்தோலை உரித்துப் பலவகையான பறைகள் செய்து முழக்குவதாகவும், இறைவன் திருக்குற்றாலநாதரை வணங்காதவர் தலையைப் பிடித்திழுத்து அவர் தம் குடுமியை நறுக்கிக் கண்ணியாக்கிப் பறவை பிடிப்பதாகவும் குறவன் கூறும் கூற்றாக இவர் கூறுவன இவர் திருநீற்றின்மீதும் திருக்குற்றாலநாதர் மீதும் கொண்ட மட்டற்ற பேரன்பைக் காட்டுகின்றன; திருநீறணியாதவரைப் பாதகரென்றே கூறுகின்றார்; என்னே! இவர் தம் அழுந்திய இறைவன் பேரன்பு!

இத்தகைய சிறப்புமிக்க புலவர்பெருமான், இறைவன் திருப்புகழையே பாடி வணங்கி மகிழ்வதே தம் கடனாகக் கொண்டு வாழ்ந்து, செயற்கருஞ் செயல்கள் பல செய்து, தம் அகவை முதிர்ந்து, ஒரு நன்னாளில் இறைவன் திருவடிப் பேறடைந்தார்.

8. புலவர் புகழ்:

இவ்வாறு இறைவன் புகழைக் கற்றாரும் கல்லாருங் கேட்டுப்பொருளும் இசையும் எளிதாகத் தெரியும்படி குறவஞ்சியாக அமைத்துதவி மறைந்த புலவர் பெருமகனார். புகழுடம்பு பெற்று இன்றும் என்றும் நம்முடன் உறவுகொண்டுள்ளார். அவர் இன்று எழுத்து அசை, சீர், தளை, அடி, தொடை, யாப்பு என்னும் எழுவகைத் தாதுக்கள் கொண்ட செய்யுளுரு வெடுத்து நம்முடன் வாழ்கின்றார். அவர் நூல் வாழ்க; வெல்க.