பக்கம் எண் :

முன்னுரை

(கழகப்புலவர் செல்லூர்க்கிழார் செ.ரெ.இராமசாமிப்பிள்ளை)

1. தமிழ்மொழி மாண்பு:

   காலமும் கணக்குங்கடந்த பழைமையுடையது நம் செந்தமிழ் மொழி; கல்தோன்றி மண்தோன்றாக் காலத்துக்கு முன்னரேயே மொழியுருக்கொள்ள இயைந்தது நம் பைந்தமிழ் மொழி. முதல் முதல் மக்கள் நாவை மெல்ல அசைத்துத் தோன்றியது நம் தீந் தமிழ்மொழி ஒன்றே என்பது, வரலாற்றாசிரியர் கண்ட உண்மை.

   இம் மொழி, காலத்துக்கேற்பக் கொள்கைகட்கேற்பப் பற்பல வளங்கெழுமிய நூற்செல்வங்களைக்கொண்டு திகழும் சிறப்பு மிக்கது.

   தொல்காப்பியக் காலத்துக்கு முன்னரும் பின்னரும் தோன்றிய நூல்கள் பல. அவையிற்றுள் குமரிக்கண்டத்தில் ஒரு பகுதியைக் கடல்கொண்டு தின்ற காலத்தில் அழிந்தனபோக, இக்கால் எஞ்சிக் கிடப்பன, பத்தப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்குகளாம் இவையே. இவற்றின் கருத்தாழம் சொற்செட்டு, சொற்கோப்பு, அரிய நயங்கள் முதலியன, மக்கள் கருத்தை ஈர்த்து இன்புறுத்துந் தகையன. அந் நூல்களில் எங்கும் கருத்துச்செறிவுகள் நிறைந்திருக்கு மன்றிப் பிற்கால நூல்கள்போல் எதுகை மோனைகள் மிகுதியாகக் காண்பதற்கில்லை.

2. குறவஞ்சி:

   மொழி, காலந்தோறும் வளர்ச்சியடைந்து காலத்துக்கேற்ப அவ்வக்காலங்களில் மக்களால் ஏற்றுக்கொள்ளப் பெறும் மக்கட்கு வேண்டும் உண்மைகளைக் கூறி, நல்வழிகளைக் கொண்டு இலகியொளிர்வது இயற்கையாகும். அவ்வாறே பிற்காலத்தில் நம் தமிழ்மொழியிலும் பேரிலக்கியங்களாகவும் சிற்றிலக்கியங்களாகவும் தோன்றிய நூல்கள் பல. சிற்றிலக்கியங்கள் தொண்ணூற்றாறுவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை; இரட்டை மணிமாலை, மும்மணிக்கோவை, நான்மணிமாலை, கலம்பகம், அந்தாதி, பள்ளு, குறம் முதலியனவாம். இவற்றுள் பள்ளு. குறம் என்பன முறையே பள்ளர்நிலையையும் குறவர் நிலையையும் விளக்கிப் பாடி முடிவதால். அவை நாடகமாக நடிக்க ஏற்றனவாயின.

   இவற்றுள் குறமெனப் பெறுவதே, இக் குறவஞ்சியாகும் குறவஞ்சி என்னுஞ் சொற்குக் குறப்பெண் என்பது பொருளாகும். மலைவாணர் குறவர் எனப்பட்டனர். அக் குடியில் தோன்றியவள் குறவஞ்சியெனப்பட்டாள். வஞ்சி-வஞ்சிக் கொடியையொத்த பெண். எனவே, குறவஞ்சியினது தன்மையைக் குறித்துக் கூறப்படும் நூல் என, ஆறாம் வேற்றுமைத் தொகைநிலைக்களத்துப் பிறந்த அன்மொழித் தொகையாக இந்நூற்குப் பெயரமைத்தனர். ஆகவே,குறத்தியைக் குறித்து-அவள் நிலை-அவள் வாழும் மலை-அம் மலை இருக்கும் நாடு-நகர்-அங்குள்ள நிலை முதலியவற்றை விளக்கிக்கூறி முடிப்பது, இக் குறவர்களுள் ஆடவர் தொழில்கள். வனங்களில் வாழும் விலங்குகள், பறவைகள் முதலியவற்றைப் படுத்துக் கொண்டுவரலும்; பெண்கள் தொழில்கள், கூடை முடைதல், கயிறு செய்தல், பிரிமணை, உறி, புட்டில்(கொட்டடான்) முதலியன புனைதல், குறி கூறுதல் முதலியனவுமாம். ஆகலான், அவற்றையெல்லாம் உள்ளடக்கிக் கூறுவது, இந் நூலின் உட்கிடக்கையாகும்.

   இக் குறவஞ்சி நூல்களில் ஒரு தலைவனோ, கடவுளரோ உலாவர, அவரைக் கண்ட பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் ஆகிய எழுவகைப் பருவ மகளிரும் காதலித்துத் தம் உரையுணர்விழந்து நிற்ப அவருள் எல்லாநலமும் ஒருங்கமைந்த இளநங்கை ஒருத்தி உலாவந்த தலைவனைக் காதலித்துக் கங்குகரையில்லாது காதல் மயக்கங் கரைபுரண்டோட நிற்பள்; அவளுக்கும் தலைவன் கிட்டாதவனாய் உலாப்போந்து தன் இருக்கை சேர்வதாக முடிப்பர். காதலால் உந்தப்பட்டு வருந்தும் நிலையினளாகிய மங்கைக்குக் கைக்குறி பார்த்து அவள் காதலித்த தலைவனே அவட்குக் கணவனாகக் கிட்டுவான் என்று குறத்திகுறிகூறுவதாக அமைத்துக் கூறும் பகுதியே சிறந்தது. ஆதலான் அச் சிறப்புப் பற்றிக் குறவஞ்சி என, அப் பெயரால் நூற்குப் பெயரிட்டனர் இவ்வாறே இறையனாரகப்பொருள் நூல், சிறப்புப்பற்றிக் களவியல் என வழங்கப் பெறுவதும் இதற்குச் சான்றாம், பின்னர் நூலின் இறுதியில் பாட்டுடைத்தலைவன் சிறப்பைக்கூறி வாழ்த்தி நூலை முற்றுவிப்பர்.

   இம் முறையில் இயன்றனவே, மீனாட்சியம்மைக் குறம், கொடுமளூர்க்குறவஞ்சி, சரபேந்திர பூபால குறவஞ்சி நாடகம் முதலிய நூல்கள். இவை, தற்காலம் கீர்த்தனமென வழங்கப் பெறும் சந்த வண்ணப்பாக்களாலும் விருத்தப்பாக்களாலும் இயற்றப்பெற்றுத் திகழ்வனவாகும். இவற்றுள், சொல்லழகு பொருளழகு இனிய ஓசைநயம், எதுகைமோனை முதலிய தொடை வனப்பு, உலக வழக்கச்சொல், சேரிமொழி முதலியன கலந்தமைந்து படிப்போர்க்கு மனக்கிளர்வை ஊட்டுவனவாயுள்ளன. இவற்றுள் மீனாட்சியம்மை குறம் மதுரையில் அரசாண்ட மீனாட்சியம்மையாரைத் தலைவராகக் கொண்டு குமரகுருபர அடிகளாரால் அருளப்பெற்றது கொடுமளூர்க் குறவஞ்சி என்பது. கொடுமளூரில் எழுந்தருளியிருக்குங் குமரேசப்பெருமானைத் தலைவராகக் கொண்டு இருநூறு ஆண்டுகட்குமுன் முதுகுளத்தூர்த் தெய்வப்புலமை நல்லவீரப்ப பிள்ளையால் பாடப்பெற்றது. சரபேந்திர பூபால குறவஞ்சி நாடகம் என்பது, கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகரால் பிற்காலத்தே தஞ்சையை ஆண்ட சரபோசி மன்னரைத் தலைவராகக்கொண்டு பாடப்பெற்றது. இவை யாவும் செய்யுட்குரிய எல்லாவகை நலங்களும் அமைந்து இன்பந்தருவனவாக உள்ளன. அவற்றுள் மீனாட்சியம்மை குறத்தில் இரண்டொன்று காட்டுதும்:

   குறத்தி வருகின்றாள்; குறிகேட்கும் தலைவிக்குத் தன் மலைவளத்தைக் கூறுகின்றாள்:

'திங்கள்முடி சூடுமலை தென்றல்விளை யாடுமலை
தங்குபுயல் சூழுமலை தமிழ்முனிவன் வாழுமலை
அங்கயற்கண் அம்மைதிரு வருள்சுரந்து பொழிவதெனப்
பொங்கருவி தூங்குமலை பொதியமலை யென்மலையே'

என்றும்

குறவர்களாகிய தம்வாழ்க்கை நிலையை,

'கொழுங்கொடியின்விழுந்தவள்ளிக் கிழக்குகல்லியெடுப்போம்
        குறிஞ்சிமலர் தெரிந்து முல்லைக் கொடியில் வைத்துத் தொடுப்போம்
பழம்பிழித்த கொழுஞ்சாறும் தேறலும்வாய் மடுப்போம்
         பசுந்தழையும் மரவுரியும் இசைந்திடவே உடுப்போம்
செழுந்தினையும் நறுந்தேனும் விருந்தருந்தக் கொடுப்போம்
         சினவேங்கைப் புலித்தோலின் பாயலிற்கண் படுப்போம்
எழுந்துகயற் கணிகாலில் விழுந்துவினை கெடுப்போம்
         எங்கள்குறக் குடிக்கடுத்தஇயல்பிதுகாண் அம்மே!

எனவும், பிறவாறும் வருவன காண்க.

இதைப்போன்றே ஏனைய குறவஞ்சிகளிலும் வருவன அவ்வக் குறவஞ்சி நூல்களில் காண்க.

3. இந்நூற் சிறப்பும் உள்ளமைப்பும்:

   இக்குறவஞ்சி நூலில் தோற்றப் பொலிவுமிக்ககொன்றை மலர்மாலையணிந்த திருக்குற்றாலநாதர் உலாவருகின்றார். அவர் எழுந்தருளி வருதலை முன்னரே கட்டியக்காரன் கூறுகின்றான். அவர் வெள்ளெருதின்மீதேறிப் பவனிவருகின்றார். பிள்ளையார்ப் பெருமான், முருகப்பெருமான் முதலிய தேவர்கள் பக்கத்தே எழுந்தருளி வருகின்றனர். அவர் உலாவருங்கால் தேவர் முனிவர்களின் கூட்டமும், அடியார்களின் கூட்டமும் நெருங்கி வருகின்றன. இவர் பவனி வருங்கால் பேரிகை முழக்கம், பல்வகை கொட்டுக்களின் முழக்கம், வீணை முதலிய முழக்கங்கள் முழங்க, ஒருபால் அடியார்கள் பாடும் திருப்பல்லாண்டு முழக்கமும், ஒருபால் மூவர்கள் அருளிய தேவாரத்திருமறை முழக்கமும், நான்மறைகளின் பெருமுழக்கமும் முழங்கத் திருச்சின்னங்கள், 'வர் நாயகன் வந்தனன்'பல அமரர் நாயகன் வந்தனன்; தெய்வநாயகன் வந்தனன்'என்று கூறிக் கொண்டுவர உலா வருகின்றார்.

   இம் முழக்கங்களைக் கேட்ட எழுவகைப் பருவப் பெண்களும்; இவ்வுலாக் காண ஓடிவந்தனர். அவர்கள், செங்கண்மால் விடையில் திருவுலா வரும் இறைவன் திருக்கோலங் கண்டு காதலால் உந்தப்பட்டு மயங்கிப் பலவாறாகக் கூறிக்கொண்டு உலாவைத் தொடர்ந்து வருவாராயினர். அக்காலை வசந்த வல்லியென்னும் பேரழகுகொண்ட மங்கையொருத்தி அக்கூட்டத்துள் வந்து சேர்வாளாயினாள். அவளின் அழகுருவை அடிமுதல் முடியீறாக 18 ஆவது கண்ணியில் காணலாம். அவள் ஆங்கே பந்தடிக்கின்றாள்! இறைவன் திருவுலாக்காட்சியைக் கண்டு இந்தச் சித்தர் யாரென வியக்கின்றாள். தன் தோழிகளை இவரைக் குறித்து வினாவுகின்றாள்; அவர்கள் இறைவனைக் குறித்து விளக்கங்கூறுகின்றனர். அப்பால் வசந்தவல்லிதிருக்குற்றாலநாதர் மீது பெருங் காதல் கொள்கின்றாள். அவள் முன்னர்க் காதலின் தன்மை இன்னதென அறியாப்பருவத்தாளாதலின், வாகனைக் கண்டுருகுதையோ! ஒருமயக்கமதாய் வருகுதையோ! மோக மென்பதிதுதானோ! இதை முன்னமே நான் அறிவேனோ!'என்று பலவாறு கூறிக்காதலால் உணர்விழந்து மயங்கிக்கீழே வீழ்கின்றாள். தோழிகள் தூக்கிச்சென்று மாளிகையில் சேர்த்து அவள் காதல் நோயை மாற்றுகின்றனர். மாலைப்போது வந்தது மேலும் மயக்கங்கொண்டாள்; மாலை மெல்ல நகர்ந்தது. இரவுப்போது வந்தது; திங்கட்செல்வன் தோன்றினான்; தன் கதிர்களை வசந்தவல்லியின் மீதுவாரி இறைத்தான்; வசந்த வல்லி நிலாக்கதிர்களைப் பொறுக்கலாற்றாது வருந்தினாள். நிலவைப் பழித்தாள்; மன்மதனைப் பழித்துப் பேசினாள். தன் தோழி அவளின் கருத்தை வினவுகின்றாள்; அவள், தான் உலாக் கண்ட நிலையை விளக்கிக் கூறுகின்றாள். தோழி, வசந்தவல்லி நிலைக்குப் பழித்துப் பேசுகின்றாள். பின்னர் இறைவன்பால் சென்று கொன்றைமலர் மாலையை வாங்கி வருமாறு தோழியைத் தூதுவிடுக்கின்றாள். இதற்கிடையில் கூடல் இழைத்துத் துன்னைத் திருக்குற்றால நாதர் ஏற்றுக் கொள்வாரா'எனப் பார்க்கின்றாள்.

   அதுகாலைக் குறிசொல்லுகின்ற குறத்தி வருகின்றாள். அவளை வசந்தவல்லி காண்கின்றாள்; உடனே களிகூர்கின்றாள்அவளிடம் 'ன் சொந்த மலை எது' என்று வினவுகின்றாள். அவள் தான் வாழ்கின்ற திருக்குற்றால மலையின் சிறப்பைக் கூறுகின்றாள். பின்னர் அவள் நாட்டின் வளம் நகர் வளங்களைக் கூறுமாறு கேட்கின்றாள். அவள் அவற்றின் சிறப்புக்களைக் கூறுகின்றாள். பின்னர்க் குற்றாலத்தலத்தின் பெருமை, திரிகூடநாதர் சிறப்பு, தேவர்கள், திருமால், பிரமன், பிள்ளையார்ப் பெருமான், முருகப்பெருமான் முதலியவர்கள் திருகூடநாதருக்குக் கிளைகளாக உள்ளோர் என வியப்புடன்பகர்கின்றாள்.

   அப்பால் வசந்தவல்லி குறியின் தன்மையை வினவ, குறத்தி முன் குறி கூறியவர்கள் எங்கள் குலத்தில் தோன்றியவர்களே எனக் கூறித் தான் குறிசொல்லுதலில் சிறந்தவளென உணர்த்துகின்றாள். பின்னர் வசந்தவல்லி குறிகேட்க, அவள் தெய்வங்களையெல்லாம் வழிபட்டுக் குறி கூறுகின்றாள். அப்போது அவள் வசந்தவல்லியைப் பார்த்து, பணியாபரணம் பூண்ட பார்த்திபன் வந்தான்; அவன் சேனை கண்ட வெருட்சி போற்காணு' தென்றாள். அதற்கு வசந்தவல்லி, 'நீ குறியைக் குழப்பிப்போட்டாய்; நன்றாகப் பார்த்துச் சொல்,' என்று வினவுகின்றாள். அவள் திரிகூடநாதர் மீது காதல் கொண்டுள்ளதை உள்ளவாறே கூறுகின்றாள். திரிகூடநாதர் என்றலும் வசந்தவல்லி நாணி முகத்ததைக் கீழ்நோக்கிக் கவிழ்த்துக்கொண்டாள். ' நீ நாணத்தை விடு, நான் நாளை உன் நாணத்தைப் பார்க்கத்தான் போகிறேன்' என்று கேலியோடு குறத்தி பேசுகின்றாள். உடனே மகிழ்ந்து குறத்திக்குப் பரிசாகப் பற்பல அணிவகைகளை வசந்தவல்லி வழங்குகின்றாள்.