இங்கே,
இவள் இவ்வாறாக, இக்குறத்தியாகிய சிங்கியைத்தேடி அவள் கணவனாகிய குறவன்
வருகின்றான்; அவன் பெயர் சிங்கன்; அவன் தன் சிறப்பையெல்லாம் பேசிக்கொண்டு
வருகின்றான். குலவழக்கப்படி குருவி வேட்டையாடுவதற்கு வேண்டும் கண்ணிகளையெல்லாம்
எடுத்துக்கொண்டு வருகின்றான். அவனுடன் நூவன் என்னும் குறவனும் வருகிறான்;
அப்பால் குளுவன் என்பானும் வருகின்றான்; எல்லோரும் ஒன்று சேர்ந்து பறவைகள்
பிடிக்கின்றார்கள்; சிங்கன் சிங்கியைத் தேடுவதிலேயே கருத்தாக இருக்க,
நூவன் தெரிந்து கேலி செய்கின்றான். நூவனைச் சிங்கன், சிங்கி போன
இடத்தைத் தெரிந்து கூறும்படி வேண்டுகின்றான்; அவன் குற்றாலநகரில் ஒரு
தெருவைத் காட்டுகின்றான். சிங்கன் அவ்வழியாகத் தேடிச் சிங்கியைக்
கண்டு மகிழ்ந்து உரையாடுகின்றான். அவள் அளவற்ற அணிகள் அணிந்திருப்பதைக்
கண்டு முன்பின் அணிவகைகளைக் காணாத குறவனாதலால் ஒவ்வோரணியும் தான்
கண்ட பாம்பு புழு தவளைபோல் இருப்பதால் அஃதென்ன இஃதென்ன' என்று வினவ,
அவள் இன்ன இன்ன நாட்டில் இன்னின்னாரிடம் தான், குறி சொல்லியதற்காகப்
பெற்ற அணிகளாகிய பரிசுகள் என்று விடை கூறுகின்றாள்; பின்பு இருவரும் கூடிக்களித்து
இன்புறுகின்றனர்.
பின்பு இறைவர் திருக்குற்றாலநாதரின் சிறப்புக்களையெல்லாம்
விளக்கிக்கூறி வாழ்த்தோடு இந்நூலை முடிக்கின்றார் ஆசிரியர்.
குற்றாலக் குறவஞ்சியென்னும் இந்நூல் இனிய சந்த அமைப்புக்களோடு
எளிய சொற்களால் இயன்ற அரிய நூல். இதில் வரும் கண்ணிகள் முதலியன கருத்தை
உருக்கும் மோனை எதுகை நயங்களோடு நுண்ணிய பொருட்செறிவுங் கொண்டிலங்குகின்றன.
கற்பனை, உயர்வுநவிற்சி, தற்குறிப்பேற்றம் இவற்றை அமைக்குந் திறத்தில்
ஆசிரியர் மிகச்சிறந்தவர்; சொற்கள் தட்டுத் தடையின்றிப் பாக்களில்
அமைந்து ஆசிரியர்க்குப் பணி புரிகின்றன; இஃதே கவிகளின் இயல்பு
'கலைமாண்ட கேள்வி,
வல்லார் கவிபோல் பலவான் துறைதோன்ற வாய்த்துச்
செல்லாறுதோறும் பொருள் ஆழ்ந்து தெளிந்து தேயத்து
எல்லாரும் வீழ்ந்து பயன்கொள்ள இறுத்தது' |
என்றும்,
'நல்லியற் கவிஞர்
நாவிற் பொருள் குறித்து அமைந்த நாமச்
சொல்லெனச் சொல்லிற் கொண்ட தொடையென' |
என்றும்,
நீரின் வெள்ளப்பெருக்கு நீர்நிலைகளில் சென்று தங்கிப் பெருகி நின்ற
நிலைக்குப் பரஞ்சோதி முனிவர் உவமமாகக் கொண்டு கூறுவதும், இராமபிரான்
அம்புகள் ஒன்றபின் ஒன்றாகக் கங்குகரையின்றி வந்தநிலைக்கு இராவணன்
வாயிலாகக் கம்பநாடார் உவமங் கூறுவதும் இத்ததையபொருண்மை சான்ற கவிகளே
யெனின், கவிகளின் சிறப்பு எவ்வளவு சிறந்தது! இச்சான்றோர்கள்கருத்துரைகட்கு
ஏற்ற எடுத்துக்காட்டாக இதன்கண் அடங்கியுள்ள பாட்டுக்கள் இலகுறுகின்றன.
இவற்றை ஒவ்வொன்றாக எடுத்து நயங்களை விளக்கிச்செல்லின், மிக விரியும்;
இவ் வேட்டகத்தும் அடங்காது; ஆகலான்கலை இன்பம் காண்பார்க்கும், நூலின்
நுண்மையைப் பருகி இன்புற விழைவார்க்கும், கற்றுத்துறைபோகும் இளங்காளையர்
பயின்று சுவைத்தற்கும் வாய்ப்பாகச் சிலவற்றை ஈண்டுக் குறிப்பாம்.
தற்சிறப்புப்
பாயிரம்
இந்நூல் திருக்குற்றாலத் தலத்தில் கோயில்கொண்டு எழுந்தருளியிருக்கும்
திரிகூடப்பெருமான் மீது இயற்றப்பெற்ற தாகலான், சைவசமய முறைப்படி முதற்கண்
காத்தற் கடிவுளாகக் கொள்ளப்பெறுவர் பிள்ளையார்ப்பெருமான். அம் முறைகொண்டு
ஓங்காரமுக வடிவராகிய பிள்ளையார்க்கு வாழ்த்துக் கூறுங்கால்:
'ஐந்து கைவலான் காவலானே'(1) என்று கூறுகின்றார்
கைவலிமையுடையவன், நமக்கு இந்நூல் பாடுதற்குக் காவலாக (காப்பாக) இருப்பான்
என்று பொருளாகும். இதில் 'கைவலான் காவலான்'எனச் சொற்பின்வருநிலையணியாகச்
சொற்கள் அமைந்திருத்தல் காண்க.
அடுத்து முருகப்பெருமான்
வணக்கத்தில் |
'பன்னிருகை'
(2) என்று தொடங்கி ஒருவன் என்பது வரை முடிகின்ற தொடரில், பன்னிரண்டு
முதல் ஒன்றுவரை கீழ் எண்ணாக அமைந்து இன்பஞ்செய்தல் பெருவிருந்தாக உளது.
குறும்பலா ஈசர் வணக்கத்தில் |
இறைவன்
எழுந்தருளியிருக்க நிழல்தருகின்ற பலா மரத்தையே இறைவன் திருவுருவாகச் சித்திரித்துக்
காட்டுவது இறைவன் பற்றில்லாதவர்கள் கூட இறைவன்பால் பற்றுப் பற்ற அமைந்துள்ளது.
. ............கனியெலாம்
சிவலிங்கம் கனிகள் ஈன்ற
சுளையெலாம் சிவலிங்கம் வித்தெலாம் சிவலிங்கம்' (3)
என்பது காண்க.
குழல்வாய்மொழியம்மை
வணக்கத்தில் |
அம்மையாரை
ஒரு பூங்கொடியாக வருணித்துக் காட்டுகின்றார். அப் பூங்கொடி ஏனைய கொடிகள்
போன்றதன்று. இக் கொடி தாமரைக்கொடிதான். ஆனால் இது, ஏனைய தாமரைக்கொடி
போன்றதன்று; இஃதொரு தெய்வத்தாமரைக் கொடி. அக் கொடி நீரில் தோன்றுங்கொடி; இது மலையில் முளைத்தெழுந்து ஒரு பவளமலைமேல் படர்வது. தாமரைக் கொடி, தனக்குரியதாமரைமலர்,
ஆகிய ஒரேவகை மலரையே பூத்து நிற்கும். இது, தாமரைமலர், அல்லிமலர், கருங்குவளை
மலரும் பூத்து நிற்கின்ற அருட்கொடி என்கிறார்,
'அவிழுநறைப் பூங்கடப்பந் தாமரையும் ஈன்றொரு
கோட்டாம்பல் ஈன்று குவலயம்பூத் தருள்கொடியை '
(4)
என்கின்றார், இங்கே கொடி யென்பதற்கேற்பத் தாமரையும் ஈன்று ஆம்பல் ஈன்று
குவலயம் பூத்து என்பன, அந்தந்த மலர்களைக் குறிப்பதுடன், பூங்கடப்பந் தாமரை-அழகிய
கடப்ப மலர் மாலையணிந்த முருகவேளை, தாமரை மலரை; ஒரு கோட்டு ஆம்பல்-ஒற்றைக்
கொம்பையுடைய யானைமுகக் கடவுளாகிய பிள்ளையாரை, ஆம்பல்-யானை; அல்லிமலர்,
குவலயம் உலகத்து உயிர்கள், குவளைமலர் என, இருபொருள் நயங்கொள்ளக் கிடப்பதறிக.
சமயக்குரவர்கள் நால்வருக்கும் அகத்தியமுனிவருக்கும் வணக்கம் கூறுவதில்
'அலையிலே மலைமிதக்க
ஏறினானும்
அத்தியிலே பூவை அந்நாள் அழைப்பித்தானும்'
'பொருள் ............கனகுளத்தில் எடுத்தானும்' (5)
,,,,,,,,,,,,முனியைப்பாடி ........சிலேட்டுமம்வந் தேறாவண்ணம்
பித்தனடித் துணைசேர்ந்த வாதவூரான்' (6) |
என்பனவற்றுள்;
'அலையிலே மலைமிதக்க ஏறினான்', என்றது கல்லிற் கட்டிக்கடலிற் போட்டபோது
கல்லையே தெப்பமாகக் கொண்டு கரையேறிய திருநாவுக்கரசரை, 'அத்தியிலே
பூவையந்நாள் அழைப்பித்தானும்' என்றது, திருஞானசம்பந்தரை 'பொருள்.......கனகுளத்தில்
எடுத்தான்' என்றது, சுந்தரரை, இவற்றுள் அலை-நீர், மலை-கல். அலை மலை
என்னும் சொல் நயமும் அலையில் கல் மிதக்காதென்னும் பொருள்முரணும் பொருந்தி
இன்பந்தருதல் காண்க. அத்தி-எலும்பு; அத்திமரம். பூவை-பெண்; மலர். இதில்
திருஞானசம்பந்தர் எலும்பைப் பெண்ணாக்கிய வரலாறு கூறுவதில் சிலேடையணியாக
அத்தியிலே-எலும்பிலே. பூவைவர-பெண்ணுருவந் தோன்ற என்றும் அத்திமரத்திலே
பூவுண்டாக என்றும் அமைத்த நயம் காண்க. உடலுக்கு ஊறுசெய்யும் நோய்கள்
வாத வித்த சிலேட்டுமங்கள். இக் கருத்துக்கள் அமைய மூன்றையுங் கூறிய நயம்
அறிக, வாதவூரான்-மாணிக்கவாசகர்; வாதநோய் என இரு பொருள் காண்க.
கலைமகளை
ஞானக்கொடியாகக் கொண்டு அவளின் உறுப்புக்களில் சிவப்பு, கறுப்பு, வெளுப்பு
ஆகிய நிறத்தால் முரண்தொடை அமைய மலர்களாகக் குறித்திருப்பது (8) இறும்பூது
பயப்பதாக உள்ளது.
காட்டுவேடன் நரி அந்தணன் தேவர்கட்கெல்லாம் நடுநின்று எல்லாப் பாவங்களையும்
நீக்கினமையால் இச்சிறந்த நகரை நினைத்த பேர்கள் நினைத்த வரம் பெறுதற்கே இந்நூலை நாடகமாகப்
பாடுகின்றேன் (8) என்று கூறி அவையடக்கத்தில் பூவினால் நாருக்கும் பெருமை உண்டாவதுபோல்,
திருக்குற்றாலநாதர் திருப்பெயரினால் இந்நூற்குச் சிறப்பென்று அவையடக்கத்தைப் பணிவன்போடு கூறித்
தற்சிறப்புப் பாயிரத்தை முற்றுவிக்கின்றார்.
நூல்
'மூக்கெழுந்த முத்துடையார்'(11) என்று துவங்குவதில்
எழுந்த என்னும் சொல்லழகு காண்க. மூக்கெழுந்த முத்து முத்தால் ஆக்கிய மூக்குத்தியணி,
இறைவன் உலாவருகின்ற சிறப்பை,
'பவனி வந்தனரே-மழவிடைப் பவனி வந்தனரே'
என்ற சந்தத்தில் துவங்கி,
சேனைப் பெருக்கமும்
தானைக் பெருக்கமும் |
தேரின்
பெருக்கமும் தாரின் பெருக்கமும் |
ஆனைப் பெருக்கமும்
குதிரைப் பெருக்கமும் |
அவனி
முழுதினும் நெருங்கவே |
மோனைக் கொடிகளின்
காடு நெடுவெளி |
மூடி
அடங்கலும் ஓடி இருண்டபின் |
ஏனைச் சுடர்விரி
இடப கேதனம் |
எழுந்துதிசைதிசை
விளங்கவே'(பவனி வந்தனரே) (13) |
என்பதில்,
சொல்லழகு சந்தஇசை பொருட்செறிவு யாவும் நம் அகக்ககண்முன் இறைவர் திருக்குற்றாலநாதர்
உலாவருவதாகவே தோன்றுகின்றதன்றோ?
பின் இறைவன் உலாவைக் கண்ட இளமங்கையர்கள்
கூற்றாக. அவர்கள் பேசுவதுபோல்.
'புரிநூலின் மார்பனிவன் அயனென்பார் அயனாகில்
பொங்கரவம் ஏதுதனிச் சங்கம்ஏ தென்பார்
விரிகருணை மாலென்பார் மாலாகில் விழியின்மேல்
விழியுண்டோ முடியின்மேல் முடியுண்டோ என்பார்' (15) |
எனவும்
பிறவும் வருவன, உலகத்தில் புதிதாகக் காணப்பெறும் ஒருவரைக் கண்ட பலர்,
பற்பலவாறாக எண்ணுவதைப்போல் இயற்கையாகச் சித்திரித்துக் காட்டுவது,
சுவைமிக்கதாகும். இதில், அப்பெண்கள் உலாக் காணவரும் விரைவில், ஒருகையில்
வளையலணிந்தவர், மற்றொருகைக்கு வளையலணியமறந்தவரும், ஒரு கண்ணுக்கு மையெழுதியவர்,
மறு கணணுக்கு மையெழுத விரலில் எடுத்த மையுங் கையுமாக வந்தோருமாகக் குறித்திருப்பது,
இயற்கையில் நடக்கும் செயலை அவ்வாறே படம்பிடித்துக் காட்டுவதுபோல் தெற்றென
அமைந்திருத்தல் அறிக. இக் கூடடத்துள்.
இயற்கையழகுமிக்க
வசந்தவல்லி யென்னும் பெயருடைய ஒரு மங்கை அங்கே வருகின்றாள்; அவள் மெய்யழகை
முடி முதல் அடிவரை சித்திரித்துக் காட்டியிருக்கும் அழகு, சுவைத்து இன்புறற்பாலது.
பெண்ணுருவைப் பேயென வெறுத்து முற்றுந் துறந்தவர்கூடத் தம்மையறியாது மயங்குமாறு
அவ்வளவு இ்ன்னோசை பொருந்த எளிய இனிய சொற்களைக் கோத்து அமைத்திருப்பது,
ஆசிரியன் பரந்துபட்ட நுண்ணறிவைப் பகிர்ந்தளிப்பது போல் வியக்கத்தக்கதாக
இருக்கின்றது. அதில் ஒரு சிற்றளவு மொண்டு நுங்கட்குத் தருகின்றேன்; பார்மின்
நூலினுட் புகுந்து கண்டு தேர்ந்து இன்புறுமின்!
வெடித்த கடலமுதை
எடுத்து வடிவுசெய்த மேனியாள்; ஒரு |
வீமப்
பாகம்பெற்ற காமப் பாலுக்கொத்த சீனியாள்' |
பிடித்த சுகந்தவல்லிக்
கொடிப்போல் வசந்தவல்லி பெருக்கமே; சத்தி |
பீடவாசர்திரி
கூடராசர்சித்தம் உருக்குமே' (18) |
திருப்பாற்கடலில்
தோன்றிய அமிழ்து, அதை உண்டாரை நரை திரை மூப்புப் பிணியினின்றும் காத்து,
என்றும் இளைஞராய், இன்பநிலையராய் நிலைக்க வைப்பது. அதுபோல் கண்டு கேட்கு
உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புல வேட்கை வெப்பகற்றும் அருமருந்தாய் ஆடவரை
என்றும் இன்புறுத்துவதாகக் கொண்டு 'கடலமுதை யெடுத்து வடிவு செய்த மேனியாள்........
காமப்பாலுக்கொத்த சீனியாள்'என்பவற்றுள் மேனியாள் சீனியாள் என்னும்
எதுகை இயைபுத் தொடை அழகு களிவிருந்தாக அமைந்துள்ளமை காண்க.
பின்னர் இறைவன் திருவுலாக்காட்சியைக் காண்கின்றாள்.
இறைவன் அழகுருவைக்கண்டு காதல் மயக்கங் கொள்கின்றாள். அக் காதல் உந்த
இறைவனையே யெண்ணிய மனத்தளாய் வருந்துகின்றாள்; தென்றற்புலி சீறுகின்றது;
மன்மதன்மலரம்பை அவள்மீது தொடுத்துத் தொடுத்து விளையாடுகின்றான்; மாலை
வருகின்றது; அது மாலை (மயக்கத்தைச்) செய்கின்றது; இரவு நெருங்குகின்றது;
விண்ணிலே வெண்ணிலாத் தோன்றித் தண் கதிர்களை இவள்மீது பெய்கின்றது;
காதலர்க்குத் தட்பப் பொருளெல்லாம் வெப்பந் தருதல் இயற்கையன்றோ'வருந்துகின்றாள்.
நிலவைக் குறித்துப் பேசி அதனை ஏசுவதாக அமைந்திருக்கும் கண்ணிகள், நம்மை
இன்பக்கண்ணியில் பிடிப்பனவாகும். அதில் ஒரு பகுதி:
'தண்ணமு துடன் பிறந்தாய்
வெண்ணிலாவே!-அந்தக் |
தண்ணளியை
ஏன் மறந்தாய் வெண்ணிலாவே! |
பெண்ணுடன் பிறந்ததுண்டே
தெண்ணிலாவே!- என்றன் |
பெண்மைகண்டும்
காயலாமோ வெண்ணிலாவே! (32) |
என நிலவோடு
பேசுதல், சுவையாக இருத்தல் காண்க.
|