பக்கம் எண் :

குறவஞ்சி வருதல்

    குறவஞ்சி, வசந்தவல்லி இருக்குமிடத்துக்கு வருங்கால் இறைவன் திருவருளைப் பாடிக்கொண்டு வருவதாகக் குறிக்கின்றார். அதில் அரசருக்குரிய பத்துறுப்புக் (தசாங்கம்) களையுங் குறித்திருப்பது பெருமகிழ்வூட்டுவதாக உள்ளது, குறத்தியின் தோற்றத்தை - அவள் வருட்காட்சியை - நேரே கண்ணாற் காண்பதுபோல் உருவநிலையைக் கூறுகின்றார். குறத்திகள் அணியும் அணிகளான பாசிமணி மாலை, வெள்ளைச் சீலை, கூடை, மாத்திரைக்கோல் முதலியனகொண்டு, சைவக்கொள்கை தோன்ற நெற்றியில் திருநீறு, பொட்டு முதலியன அணிந்து குலுக்குநடையொடு வருவதாகக் குறித்துக்காட்டுவது மிக்க சுவை பயப்பதாக இருக்கின்றது.

'தேவர்கள் தம்பிரான் திருவருள் பாடி
இலகுநீ றணிந்து திலகமும் எழுதிக்
குலமணிப் பாசியும் குன்றியும் புனைந்து
சலவைசேர் மருங்கிற் சாத்திய கூடையும்
வலதுகைப் பிடித்த மாத்திரைக் கோலும்
மொழிக்கொரு பசப்பும் முலைக்கொரு குலுக்கும்
விழிக்கொரு சிமிட்டும் வெளிக்கொரு பகட்டுமாய்
உருவசி அரம்பை கருவமும் அடங்க
முறுவலின் குறும்பால் முனிவரும் அடங்கச்
சமனிக்கும் உரையால் சபையெலாம் அடங்கக்
கமனிக்கு மவரும் கடைக்கண்ணால் அடங்க'               (46)

என்பது காண்க.

   இப்பாட்டு, குறத்தி நடக்கும் வீறாப்புநடைபோல் விறுவிறுப்பாகப் படிப்போர்க்கு உள்ளக்கிளர்ச்சியை ஊட்டி மகிழ்விக்கும் தன்மையில் அமைத்திருப்பது கலைஞர்கட்குக் கலை இன்பமாகக் காட்சி தருவது காண்க.

   குறத்தி மலைவளம், நாட்டுவளம் கூறும் பகுதி மிக்க சுவையுடையன. அதனைப் படிமின்; மலைவளம் காண்மின்; குற்றாலக் கொழுவிய காட்சியைக் காண்மின்; கேண்மின்; அருவியைப் பார்மின்; முழக்கத்தைக் கேண்மின்; அருவியில் மூழ்குமின்; அதோ குரங்குகள் கொஞ்சுகின்றன; கனிகளைப் பறிக்கின்றன; திருஞானசம்பந்தர் கண்ட குற்றாலக்காட்சி, இந்நூலாசிரியர் பார்த்த தோற்றம், இன்றும் நிலைபெற்றிருக்கின்றனவன்றோ' என்னே! குற்றாலம்! தமிழும் தென்றலும் தவழும் மலையன்றோ! இமயம் தோன்றுதற்கு முன் தோன்றிய இயற்கை மலையன்றோ! அம்மலைப் பெருமையைக் குறத்தி வாயிலாகக் கேண்மின்கள்!

வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
   மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழியெறிந்து வானவரை அழைப்பார்
   கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார்
தேனருவித் திரையெழும்பி வானின்வழிஒழுகும்
   செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்
கூனலிளம் பிறைமுடித்த வேணியலங் காரர்
   குற்றாலத் திரிகூட மலையெங்கள் மலையே.'       (56)

பின்னும் இக் கண்ணிகளோடு தொடர்ந்துவருங் கண்ணிகளில் யாவுங் காண்க.

'பக்கம் வாழைப் பாய்கனி யோடு பலவின்தேன்
கொக்கிக் கோட்டுப் பைங்கிளி தூங்கும் குற்றாலம்
''

என்றருளிய ஞானசம்பந்தர் கண்ட காட்சி, இதோ! எம் அகக் கண்முன் இன்னும் தோற்றமளிக்கின்றன.

   எல்லாமாய் அல்லதுமாய் எங்கும் இருக்கின்ற இறைவன் திருக்குற்றாலநாதன், இம் மலையின் இயற்கையிலன்றோ மூழ்கியிருக்கின்றான்! குற்றாலமே நீவாழ்க! என நமக்கு வாழ்த்தத் தோன்றுகின்றது அக்காட்சி.

   இனி நாடு கூறுகின்றார். இந்நாடோ தென்பாண்டி நாடு; தென்னாடு, இறை சிவபெருமானுக்குரியது; தென்னாடுடைய பெருமான், இங்கு நின்றும் முகிழ்த்து எந்நாட்டவர்க்கும் இறைவனாக மலர்ந்தான்; அவன் எழுந்தருளியிருக்கும் நாடு, சிறந்த நாடன்றோ? இதையே குறத்தி தன் நாடு எனச் சாற்றுகின்றாள்; அவள் சொல்வதைக் கேளுங்கள்!

'தக்க பூமிக்கும் முன்புள்ள நாடு
   சகல தேவர்க்கும் அன்புள்ள நாடு
திக்கெ லாம்வளர்ந் தோங்கிய நாடு
   சிவத்து ரோகமும் நீங்கிய நாடு
முக்க ணான்விளை யாடிய நாடு
   முதிய நான்மறை பாடிய நாடு
மைக்க ணாள்சூழல் வாய்மொழி பாகர்
   வசந்த ஆரிய நாடெங்கள் நாடே.'      (56)

   பின்னர் இறைவன் சிறப்பைக் குறித்துக் கூறுங்கால், கிளையும் கேளும் இல்லாப் பெருமானுக்குக் கிளைகள் கூறுவது இன்பத்தின் ஏற்றமாதலறிக.

   அப்பால் குறத்தி குறி சொல்லும் பகுதியில், நாம் இன்று கண்முன் காணும் குறிகாரர்கள் கோடாங்கிகள் பூசாரிகள் கடவுளை வேண்டிக் குறிமுகத்தில் பேசுவதுபோல் இக்குறத்தி கூறுவதாக,

       
'விநாயகா,

என்று தொடங்கி,

'ஆரியங் காளி! அருட் சொரி முத்தே!
நேரிய குளத்தூர் நின்றசே வகனே!
கோலமா காளி! குற்றால நங்காய்
கால வைரவா கனதுடிக் கறுப்பா!
முன்னடி முருகா! வன்னிய ராயா!'           (72)

என்பனவும்,

   குறி இன்னதென, இவள் நினைத்தன இன்னதெனக் கூறிக் கேட்பனவாகிய,

'வசந்த மோகினிப்பெண்
சிந்தையில் நினைந்தது சீவனோ தாதுவோ'(72)

என்று துவங்கி வருவனவும் இயற்கையாகக் குறிகாரர்கள் பேசும் மொழியில் அமைத்திருக்கும் முறை, மிகச் சிறந்ததாக உளது. பிறவும் இப் பகுதிகளும், குறவன் பறவை பிடிக்கின்ற தன்மைகளில் வரும் குறவர்கள் பேச்சுக்களும் மிகச் சுவைத்து இன்புறற் பாலன.

  குறத்தியும் குறவனும் உரையாடித் காதல் கொள்ளுகின்ற வகைகளும், இடக்கரடக்கல், மொழிகளும் மிக இன்பந்தருவனவாக மிக எளிய கருத்தமைதியுடனும் அமைந்துள்ளன அவற்றை நூலினுள் தோய்ந்து காண்க,