பக்கம் எண் :


சிங்கன், சிங்கியை மகிழ்வித்தல்

கொச்சகக் கலிப்பா

  தொண்டாடும் சுந்தரர்க்குத் தோழர்திரி கூடவெற்பில்
  திண்டாடி நின்றசிங்கன் சீராடும் சிங்கிதனைக்
  கண்டாடித் துள்ளாடிக் கள்ளாடும் தும்பியைப் போற்
  கொண்டாடிக் கொண்டாடிக் கூத்தாடிக் கொண்டானே.

(பொ-ரை) தேவாரம் பாடித் திருத்தொண்டு புரிந்தவரான சுந்தரமூர்த்தி நாயனார்க்குத் தோழரான திருக்குற்றால நாதருக்குரிய திரிகூட மலையிடத்தே காதலால் தவித்து நின்ற சிங்கனானாவன். தன்னுடன் காதலுரையாடுகின்ற தன் காதற் சிங்கியைக் கண்டு ஆட்டம் போட்டுத் துள்ளித் குதித்து, மலரில் தேனை உண்கின்ற வண்டினைப்போல மயக்கங்கொண்டு அவளைப் பாராட்டிப் பாராட்டிக் கூத்தாடிக் கொண்டேயிருப்பானானான்.


(124)

சிங்கனும் சிங்கியும் எதிர்த்துரையாடல்

இராகம் - தன்யாசி
தாளம் - ஆதி
கண்ணிகள்

(1) இத்தனை நாளாக என்னுடன் சொல்லாமல்
  எங்கே நடந்தாய்நீ சிங்கி! (எங்கே நடந்தாய்நீ)

(2) கொத்தார் குழலார்க்கு வித்தாரமாகக்
  குறிசொல்லப் போனனடா சிங்கா! (குறி சொல்ல)

(3) பார்க்கில் அதிசயந் தோணுது சொல்லப்
  பயமாய் இருக்குதடி சிங்கி: (பயமா)

(4) ஆர்க்கும் பயமில்லைத் தோணின காரியம்
  அஞ்சாமற் சொல்லடா சிங்கா! (அஞ்சா)

(5) காலுக்கு மேலே பெரிய விரியன்
  கடித்துக் கிடப்பானேன் சிங்கி (கடித்து)

(6) சேலத்து நாட்டிற் குறிசொல்லிப் பெற்ற
  சிலம்பு கிடக்குதடா சிங்கா (சிலம்பு)

(7) சேலத்தார் இட்டசிலம்புக்கு மேலே
  திருகு முறுகென்னடி சிங்கி! (திருகு)

(8) கோலத்து நாட்டார் முறுக்கிட்ட தண்டை
  கொடுத்த வரிசையடா சிங்கா! (கொடுத்த)

(9) நீண்டு குறுகியும் நாங்கூழுப் போல
  நெளிந்த நெளிவென்னடி சிங்கி! (நெளிந்த)

(10) பாண்டிய னார்மகள் வேண்டும் குறிக்காகப்
  பாடக மிட்டதடா சிங்கா! (பாடக)

(11) மாண்ட தவளைஉள் காலிலே கட்டிய
  மார்க்கம தேதுபெண்ணே சிங்கி! (மார்க்)

(12) ஆண்டவர் குற்றாலர் சந்நிதிப்பெண்கள்
  அணிமணிக் கெச்சமடா சிங்கா! (அணிமணி)

(13) சுண்டு விரலிலே குண்டலப்பூச்சி
சுருண்டு கிடப்பானேன் சிங்கி! (சுருண்டு)

(14) கண்டிய தேசத்திற் பண்டுநான் பெற்ற
காலாழி பீலி அடா சிங்கா! (காலாழி)

(15) மெல்லிய பூந்தொடை வாழைக் குருத்தை
விரிந்து மடித்ததார் சிங்கி! (விரிந்து)

(16) நெல்வேலி யார்தந்த சல்லாச் சேலை
நெறிபிடித் துடுத்தினேன் சிங்கா! (நெறிபிடி)

(17) ஊருக்கு மேக்கே உயர்ந்த அரசிலே
சாரைப் பாம்பேது பெண்ணே சிங்கி! (சாரை)

(18) சீர்பெற்ற சோழன் குமாரத்தி யார்தந்த
செம்பொன் அரைஞாணடா சிங்கா! (செம்பொன்)

(19) மார்பிற்கு மேலே புடைத்த சிலந்தியில்
கொப்புளம் கொள்வானேன் சிங்கி! (கொப்பு)

(20) பாருக்குள் ஏற்றமாம் காயலார் தந்த
பாரமுத் தாரமடா சிங்கா! (பார)

(21) எட்டுப் பறவை குமுறும் கமுகிலே
பத்தெட்டுப் பாம்பேதடி சிங்கி! (பத்தெ)

(22) குட்டத்து நாட்டாரும் காயங் குளத்தாரும்
இட்ட சவடியடா சிங்கா! (இட்ட)

(பொ,ரை)

(1) அடிசிங்கி, நீ இவ்வளவு நாட்களாக இன்ன இடத்துக்குப் போகிறேனேன்றுகூட என்னிடம் சொல்லாதபடி எங்கே போயிருந்தாயடி?

(2) அடே சிங்கா! பூங்கொத்துக்களணியும் கூந்தலையுடைய மங்கையர்கட்கு அவர்கள்கேட்கும் குறிகளை விரிவாக சொல்லி வருவதற்குப் போயிருந்தேனடா!

(3) அடி சிங்கி! இதையெண்ணிப் பார்க்கும் பொழுது வியப்பாகத் தோன்று கிறதே உன்னிடம் விட்டுச் சொல்லவும் எனக்கு அச்சமாக இருக்கின்றதே!

(4) அடி சிங்கா! நீ யாருக்கும் அஞ்சவேண்டுவதில்லையே! உனக்கு நெஞ்சில் தோன்றியதை அஞ்சாமற் சொல்லு; (நான் அதற்காக வருந்தமாட்டேன்;)

(5) அடியே சிங்கி! உன் காலுக்கு மேலே பெரிய விரியன் பாம்புபோல் ஒன்று ஒட்டிக்கொண்டு கிடப்பதென்ன! (எனக்குப் பார்க்க வியப்பாக இருக்கிறதடி!)

(6) அடே சிங்கா! (அஃது உனக்குத் தெரியாதா?) சேலத்தைச் சேர்ந்த நாட்டிலே நான்குறி சொல்லி அதற்குப் பரிசாகப் பெற்ற சிலம்பு கிடக்கிறது பாரடா!

(7) அடி சிங்கி! உனக்குச் சேலத்தார் அணிவித்த சிலம்புக்கு மேலே என்னவோதிருகலும் முறுகலுமாகக் கிடக்கிறதே அஃதென்னடி!

(8) அடே சிங்கா! (இதுகூட உனக்குத் தெரியாதா?) கலிங்க நாட்டார்கள் நான்குறி சொன்னதற்குப் பரிசாகக் கொடுத்த முறுக்குத் தண்டைபார், (நன்கு பார்!)

(9) அடிசிங்கி!நீளமாகவும் கூனலாகவும் நாக்குப்பூச்சி போல் நெளிந்ததாக வளைவுள்ளதாக இருக்கின்றதே அஃதென்னடி!

(10) அடே சிங்கா! பாண்டிய மன்னரின் மகள், அவள் விரும்பின குறிகள் நான் சொன்னதற்காகப் பாடகம் அணிவித்தாள் (பாரடா!)

(11) அடி சிங்கிப் பெண்ணே! செத்துப்போன தவளையைப் போல உன் காலிலே கட்டிவைத்திருக்கின்றதே; அதற்கு என்னடி பெயர்?

(12) அடே சிங்கா! இன்னும் உனக்கு ஒன்றுந் தெரிவில்லை: உலகத்துக்கெல்லாம் தலைவரான திருக்குற்றால நாதரின் திருமுன்பு நடனஞ் செய்கின்ற மங்கையர்கள் (நான் குறி சொன்னதற்காக மகிழ்ந்து) அணிவித்த சதங்கை மணியடா!

(13) அடி சிங்கி! உன் காலின் சுண்டுவிரலிலே (சிறு விரலிடத்தே) குண்டலவடிவமான பூச்சிபோல் வளைந்து கிடக்கின்றதே; அஃதென்ன கோலமடி?

(14) அடே சிங்கா! ஈழ நாட்டில் (இலங்கைத் தேசத்தில்) (நான் குறி சொல்லிப் பரிசிலாகப்) பெற்ற கால்மோதிரமும் பீலியுமடா! (நீ நகைகளையே பார்த்தவனில்லை; என்னவோ கேட்கிறாய்!)

(15) அடி சிங்கி! உன்னுடைய மென்மையான அழகுள்ள தொடைமேல் வாழைக் குருத்தை யொத்த மிக மெல்லிய ஆடையை விரித்து உனக்கு அணிவித்தவர் யாரடீ?

(16) அடே சிங்கா! (நான் நன்றாகக் குறி சொல்லியதற்காக) திருநெல்வேலி மக்கள் கொடுத்த சல்லாச் சேலையை நான் கொய்து உடுத்துள்ளேன், (இதுவுமா உனக்குத் தெரியாது?)

(17) அடி சிங்கி! உன் தொடைகளுக்கு நடுவிடத்தே மேலே தோன்றுகின்ற அரசிலை போன்ற உன் கடிதடத்தின் மேல் சாரைப் பாம்புபோல் ஒன்று கிடக்கின்றதே அஃது ஏதடி?

(18) அடே சிங்கா! சிறப்புமிக்க சோழ அரசன் மகளானவள் (நான் அவள் மனத்தில் எண்ணியதைச் சொன்ன குறிக்காக மகிழ்ந்து) நல்ல பொன்னால் செய்து தந்த அரைஞாண் கொடியடா அது.

(19) மார்புக்குமேல் பருத்தெழுந்த சிலந்தி போன்ற கொங்கையின் மீது கொப்புளம் கொண்டது போல் காணப்படுகின்றனவே அஃதேன் சிங்கி!

(20) அடே சிங்கா! உலகத்திற் சிறந்த காயற்பட்டினத்தார் ஆணி முத்துக்களால் செய்துதந்த முத்து மாலையடா!

(21) அடி சிங்கி! எட்டுவகைப் பறவைகளின் ஒலிகள் உண்டாகும் கமுகு போன்ற உன் கழுத்திலே பத்து எட்டுப் பாம்புகள் போல் சுற்றிக் கிடக்கின்றனவே அஃது ஏதடி?

(22) அடே சிங்கா! குட்ட நாட்டினரும் காயங்குளத்தாரும் (என் குறிக்காக) அணிவித்த கழுத்துச் சரடுகளடா!







(வி-ரை)


1-22. விரியன்,திருகு, முறுகு, நாங்கூழ்,தவளை குண்டலப்பூச்சி முதலியன அவ்வவ் வடிவத்தை ஒத்த அணிகளைக் குறித்தன. ஊரு-ஊர்;

தொடை. மேக்கே-மேற்குப்பக்கம், மேலிடம். அரசு-அரசமரம்; அரசின் இலை போன்ற பெண்ணுடல்.

இதில் ஊருக்கு மேற்குப் பக்கத்திலுள்ள அரசமரத்திலே சாரைப்பாம்பு சுற்றிக்கொண்டிருப்பதாக ஒரு பொருளும் சிங்கியின் தொடைகளுக்கு நடுவிடமான பெண்ணுடம்பின் அருகிலே அரை ஞாண் சுற்றப்பட்டிருப்பது மாகிய ஒரு பொருளும், ஆக இரு பொருள் நயம் அமைந்து இன்பந் தருதலை அறிக. 'ஆலவட்டம் அரசடி முக்காணிவிட்டால், சால உழுது வெள்ளைச் சம்பா விதையேனோ?' என்னும் 'கூளப்ப நாயக்கன் காதல்' அடியின் கருத்தோடு இஃது ஒத்ததாக அமைந்திருப்பதறிக.


(125)