பக்கம் எண் :


ஷ வேறு

இராகம் - புன்னாகவராளி
தாளம் - ஆதி
கண்ணிகள்

(1) வள்ளிக்கொடியிலே துத்திப்பூப்பூப்பானேன் சிங்கி! காதில்
வங்காளத் தாரிட்ட சிங்காரக் கொப்படா சிங்கா

(2) கள்ளிப்பூப் பூத்த ததிசய மல்லவோ சிங்கி! தெற்கு
வள்ளியூ ரார்தந்தமாணிக்கத் தண்டொட்டி சிங்கா!


(3) வண்ணக் குமிழிலே புன்னை அரும்பேது சிங்கி! மண்ணில்
முந்நீர்ச் சலாபத்து முத்துமூக் குத்திகாண் சிங்கா!

(4) சொருகி முடித்ததில் தூக்கணம் ஏதடி சிங்கி! தென்
குருகைபூ ரார்தந்த குப்பியும் தொங்கலும் சிங்கா!

(5) பொன்னிட்ட மேலெல்லாம் மின்வெட்டிப்
  பார்ப்பானேன் சிங்கி! இந்த
  வண்ணப் பணிகளின் மாணிக்கக் கல்லடா சிங்கா!

(6) இந்தப் பணியைநீ பூணப் பொறுக்குமோ சிங்கி! பூவில்
ஈசர்க்கும் நல்லார்க்கும் எல்லாம் பொறுக்குங்காண் சிங்கா!

(7) குன்றத்தைப் பார்த்தாற் கொடியிடை தாங்குமோ சிங்கி! தன்
கொடிக்குச் சுரைக்காய் கனத்துக்கிடக்குமோ சிங்கா!

(8) இல்லாத சுற்றெல்லாம் எங்கே படித்தாய்நீ சிங்கி! நாட்டில்
நல்லாரைக் காண்பவர்க் கெல்லாம் வருமடா சிங்கா!

(9) பெட்டகப் பாம்பைப் பிடித்தாட்ட வேண்டாமோ சிங்கி! இந்த
வெட்ட வெளியிலே கோடிப்பாம் பாடுமோ சிங்கா!


(10) சுட்டிக்கொண் டேசற்றே முத்தம் கொடுக்கவா சிங்கி நடுப்
பட்டப் பகலில்நான் எட்டிக் கொடுப்பேனா சிங்கா!

(11) முட்டப் படாமுலை யானையை முட்டவோ சிங்கி! காம
மட்டுப் படாவிடில் மண்ணோட முட்டடா சிங்கா!

(12) சேலை உடைதனைச் சற்றே நெகிழ்க்கவோ சிங்கி! சும்மா
நாலுபேர் முன்எனை நாணம் குலையாதே சிங்கா!

(13) பாதம் வருடித் துடைகுத்த வேண்டாமோ சிங்கி! மனப்
போதம் வருடிப்போய்ப் பூனையைக் குத்தடா சிங்கா!

(14) நாக்குத் துடிக்குதுன் நல்வா யிதழுக்குச் சிங்கி! உன்றன்
வாய்க்கு ருசிப்பது மாலைக்கள் அல்லவோ சிங்கா!

(15) ஒக்கப் படுக்க ஒதுக்கிடம் பார்க்கவோ சிங்கி! பருங்
கொக்குப் படுக்கக் குறியிடம் பாரடா சிங்கா!

(16) வித்தைக் காரியுன்னை வெல்லக் கூடாதடி சிங்கி! அது
சந்தேக மோவுன் தலைப்பேனைக் கேளடா சிங்கா!

(17) தென்னா டெல்லாமுன்னைத் தேடித்திரிந்தேனே சிங்கி! அப்பால
இந்நாட்டில் வந்தென்னை எப்படி நீகண்டாய் சிங்கா!

(18) நன்னகர்க் குற்றால நாதரை வேண்டினேன் சிங்கி! மணிப்
பன்னகம் பூண்டாரைப் பாடிக்கொள் வோமடா சிங்கா!

(19) பாடிக்கொள் வாரெவர் ஆடிக்கொள் வாரெவர்சிங்கி! நீதான்
பாடிக்கொண் டாற்போதும் ஆடிக்கொள் வேனடா சிங்கா!

(20) பார்க்கபொறுக்குமோ பாவியென் ஆவிதான் சிங்கி! முன்னே
ஆக்கப் பொறுத்தவர் ஆறப் பொறார்களோ சிங்கா!

(பொ-ரை)

(1) அடி சிங்கி! வள்ளிக் கொடிமேலே துத்திப் பூப் பூத்ததுபோல ஏதோ காதில் அணிந்திருக்கின்றாயே அஃதென்னடி!

வங்காளத்தார் இட்ட அழகுள்ள கொப்பு அடா, சிங்கா.

(2) அடி சிங்கி! கள்ளிப்பூ பூத்ததுபோல நீளமாக இருப்பது வியப்புக்குரிய தன்றோ?

தெற்கே வள்ளியூரார் என் குறிக்காகச் செய்துகொடுத்து மாணிக்கக்கல் பதித்த தண்டொட்டியடா! சிங்கா!

(3) அடி சிங்கி! அழகுள்ள குமிழமலரையொத்த உன் மூக்கின்மீது புன்னையரும்புபோல ஏதோஒன்று அணிந்திருக்கின்றாயே அஃதென்னடி!

சிங்கா! அது, கடலினடியிலே சலாபத்திலே குளித்தெடுத்த முத்து மூக்குத்தியடா! நன்றாகப பார்.

(4) அடி சிங்கி! செருகி முடித்த உன் கூந்தலில் தூக்கணங் குருவிக்கூடுபோல் இருக்கின்றதே அஃது ஏதடி சொல்லு?

அழகிய ஆழ்வார்திருநகரிலுள்ளவர்கள் தந்த குப்பி (தலைச்சூளாமணியும், மயிர்மாட்டியுமடா சிங்கா!)

(5) உன்னுடைய பொன்னொளி வீசுகின்ற உடம்பெங்கும் பளிச்சுப்பளிச் சென்று மின்னலொளி வீசுவதற்குக் காரணமென்னடி சிங்கி?

நான்பூண்டஇந்த அழகுள்ள நகைகளிற் பதித்த மாணிக்கக் கற்களின் ஒளியடா கிங்கா!

(6) இத்தகைய அணிகளை நீ அணிவதற்கு உன்னால் தாங்க முடியுமோ சிங்கி? உலகில் திருக்குற்றாலநாதருக்கும் என்போன்றமங்கையர்களுக்கெல்லாமும் தாங்கத்தக்கது தானடா சிங்கா!

(7) மலையை ஒத்த உன் கொங்கைகளின் பெருக்கத்தைக் கண்ணால பார்த்தால் உன் கொடி போன்ற நுட்ப இடை தாங்குமா? (ஒடிந்து போகுமன்றோ?) சிங்கி?

கரைக்கொடிக்கு அதன் காய் கனமாகவா தோன்றும்? தோன்றாதடா சிங்கா! (கொடிக்குக் காய் கனமா? என்னும் பழமொழி கூட நீ கேட்டதிலையோ?)

(8) முன் உன்னிடத்தில் காணக்கிடைக்காத வளைத்துப் பேசுகின்ற வெட்டுத் தட்டுப் பேச்சுகளெல்லாம், இப்போது நீ எங்கே படித்து்கொண்டு வந்தாயடி சிங்கி?

நாடுகளில் நல்லோர் பெரியோர்களைக் கண்டு வருபவர் எவர்க்கும் நல்ல தன்மைகளெல்லாம் தானே கிட்டுமடாசிங்கா!

(9) கூடையில் அடங்கிக் கிடக்கின்ற நாகப்பாம்பு போன்ற உன் கடிதடத்தைப் பிடித்து ஆடச்செய்ய வேண்டாவோ சிங்கி?

வெட்டவெளிப் பொட்டலிலே நல்ல சாதிப்பாம்பு ஆடுமோ அடா? (ஆடலாமா அடா?) சிங்கா.

(10) என்னைக் கட்டித்தழுவிக்கொண்டு சிறிதுநேரம் முத்தங் கொடுப்பதற்கு வா,சிங்கி!

நல்ல பட்டப்பகல் நேரத்தில் நான் உன்னிடம் வந்து நெருங்கி முத்தங் கொடுப்பேனோ சிங்கா!

(11) என்னை மோதுவதற்குரிய மேலாடை போர்த்த உன் கொங்கைகளாகிய யானைகளை யான் என் தலையால் மோதவா சிங்கி!

உனக்குக் காமக்கிறுக்கு அடக்க முடியாவிட்டால் மண்ணில் விழுந்து முட்டடா சிங்கா!

(12) உன் சீலை உடுத்துள்ள கட்டினைச் சிறிது அவிழ்க்க வா சிங்கி!

வீண்தனமாக நாலுபேர் போகிற வருகிற இடத்தில் என்மானத்தைக் கெடுக்காதேயடா சிங்கா!

(13) உன் கால்களைப் பிடித்துவிட்டு உன் தொடைக்குள்ளிடமுள்ள கடிதடத்தை குத்தவேண்டாவா சிங்கி!

மனவொருமை கொண்டுபோய்ப் பூனைகளைப் பார்த்துக் குத்தடா சிங்கா!

(14) உன் நல்ல வாயின் இதழ்களின் சுவைக்கு என் நாக்கு படபடவென்று துடிக்கின்றதே சிங்கி!

உன் நாக்குக்கு நல்ல சுவையாக இருப்பது, மாலை நேரத்தில் இறக்குகின்ற கள்ளுதானடா சிங்கா!

(15) நாம் ஒன்றாகத் தழுவிக்கொண்டு படுக்கைகொள்வதற்கு மறைவான இடம் பார்த்துவிட்டு வரவா சிங்கி!

பெரிய கொக்குகளைப் பார்த்துப் பிடிப்பதற்குக் குறிப்பான (நல்ல) இடத்தைக் கண்டு வா சிங்கா!

(16) நீ வியப்பானவள், உன்னை யாராலும் வெற்றி கொள்ள இயலாதடி சிங்கி!

அதற்கும் ஐயமாகவா இருக்கின்றது? நீ அறிந்துகொள்ள வேண்டினால் உன் தலைப்பேனைக் கேட்டால்கூட உண்மையைச் சொல்லுமடா! வேறே யாரிடமுமா கேட்கவேண்டும் சிங்கா? அதையே கேளடா!

(17) இந்தத் தென்னாடெங்கும் உன்னைக் காணாமல் தேடித்தேடி அலைந்தேனே! (உனக்கு நன்றி இருக்கிறதா? அன்புதான் இருக்கிறதா?) ஏடி சிங்கி!

அதன்பின் இந்த நாட்டைக் கண்டுபிடித்து என்னை நீ எந்த விதத்தில் கண்டுகொண்டாயடா சிங்கா!

(18) இந்த நல்ல நகராகிய திருக்குற்றாலத்தில் எழுந்தருளியிருக்கின்ற திருக்குற்றால நாதரை (வணங்கி உன்னைக் கண்டு பிடிக்க அருள் தர வேண்டுமென்று) நான் வேண்டிக் கொண்டேனடி சிங்கி!

அவ்வாறானால் மணியையுடைய நாகப்பாம்பையணிந்த திருக்குற்றாலநாதப் பெருமானைப்பாடி வணங்கிக்கொள்வோமடா சிங்கா!

(19) அவ்வாறானால் நம்முள் யார்பாடுவது? யார் ஆடுவது சொல்லடி சிங்கி!

(நீ ஆடவேண்டா) பாடினால் மட்டும் போதும்; நான் அப்பாட்டுக் கேற்ப ஆடுவேனடா சிங்கா!

(20) அடி சிங்கி!- உன் ஆட்டத்தைக் கண்டால்-அடிபாவி!-என் உயிர் தரிக்குமா? சொல்லடி சிங்கி! (நீ ஆட்டம் போடுவேன் என்கிறாயே!)

உலகத்தில் சோறு சமைக்கும்வரை பசியோடு காத்திருந்தவர்கள் அது சூடு ஆறும் வரை பொறுத் திருக்கமாட்டார்களா (இஃது உனக்குத் தெரியாதா?



(வி-ரை) 1-20 குமிழ்-குமிழம்பூ; மூக்குக்கு ஆகுபெயர். முந்நீர்-கடல். பணி-நகை. பெட்டகப்பாம்பு-கூடையில் மூடிவைத்திருக்கின்ற பாம்புபோன்ற அல்குல். கோடிப்பாம்பு-நல்ல பாம்பு; சாதிப்பாம்பு. போதம் வருடி-மனவொருமை கொண்டு. விந்தை-வியப்பு. பன்னகம்-பாம்பு. ஆக்க-சமைக்க. ஆற-சூடு தணிய.
(126)

வாழ்த்து


நேரிசை வெண்பா

  சுற்றாத ஊர்தோறும் சுற்றவேன் டாம்புலவீர்
  குற்றாலம் என்றொருகாற் கூறினால்-வற்றா
  வடவருவி யானே மறுபிறவிச் சேற்றில்
  நடவருவி யானே நமை.

(பொ-ரை) (புலவர்களே! பிறப்பை ஒழிப்பதற்கு நீவிர் இதுவரை சுற்றிப்பாராத ஊர்களையெல்லாம் இனிச் சுற்றி வருதலை விட்டு விடுங்கள்; குற்றாலம் என்று நீவிர் ஒரே ஒருகால் சொல்வீர்களாயின் வற்றாது பெருக்கெடுத்தோடும் நீர்வளமுள்ள வடஅருவியை உடையவனான திருக்குற்றாலநாதன், நம்மை மறுபிறப்பாகிய சேற்றில் அழுந்துதற்கு இம் மண்ணுலகிற்கு வரச் செய்யமாட்டுவானல்லன். (நம் பிறப்பை ஒழித்துத் திருவடிப் பேறு தந்தருளுவன்! வம்மின் வம்மின் புலவர் பெருமக்களே! வம்மின்!)



(வி-ரை) ஒருகால்-ஒரே தடவை. பிறவிச்சேறு-பிறப்பாகிய சகதி. வருவியான்-வரச்செய்யமாட்டான்; பிறவினை. அருவியான்-மலையிலிருந்து வருகின்ற நீர்வீழ்ச்சியாகிய அருவியையுடையவன். (127)

கண்ணிகள்

(1) கொற்றமதிச் சடையானை குறும்பலா உடையானை
வெற்றிமழுப் படையானை விடையானை வாழ்த்துகிறேன

(2) தாதையிலாத் திருமகனைத் தடமலைக்கு மருமகனை
வேதசங்க வீதியனை வேதியனை வாழ்த்துகிறேன்;


(3) தந்திமுகத் தொருகோனைத் தமிழிலஞ்சி முருகோனை
மைந்தரெனும் இறையோனை மறையோனை வாழ்த்துகிறேன்;

(4) தீமுகத்திற் பறிகொடுத்த திருமுடிக்கா ஒருமுடியை
மாமனுக்கு வரிசையிட்ட மாமனைநான் வாழ்த்துகிறேன்;

(5) காமனுக்கும் பூமனுக்கும் கன்னிதெய்வ யானைக்கும்
மாமனென வேபகரும் வள்ளல்தனை வாழ்த்துகிறேன்


(6) நீடுலகெ லாமளந்த நெடியமா லும்அயனும்
தேடரிய திரிகூடச் செல்வனையான் வாழ்த்துகிறேன்;

(7) சித்ரநதி இடத்தானைத் தேனருவித் தடத்தானைச்
சித்ரசபை நடத்தானைத் திடத்தானை வாழ்த்துகிறேன்.

(8) பனகஅணி பூண்டவனைப் பக்தர்களை ஆண்டவனை
அனவரத தாண்டவனை ஆண்டவனை வாழ்த்துகிறேன்;


(9) அரிகூட அயனாகி அரனாகி அகலாத
திரிகூடப் பரம்பரனைத் திகம்பரனை வாழ்த்துகிறேன்;


(10) சிற்றாற்றங் கரையானைத் திரிகூட வரையானைக்
குற்றாலத் துறைவானைக் குருபரனை வாழ்த்துகிறேன்;

(11) கடகரியை உரித்தவனைக் கலைமதியம் தரித்தவனை
வடஅருவித் துறையவனை மறையவனை வாழ்த்துகிறேன்;

(12) ஆதிமறை சொன்னவனை அனைத்துயிர்க்கும் முன்னவனை
மாதுகுழல் வாய்மொழிசேர் மன்னவனை வாழ்த்துகிறேன்