பக்கம் எண் :

(பொ-ரை)

(1) வெற்றி பொருந்திய மூன்றாம் பிறையையணிந்த திருச் சடைமுடியை உடையவனை திருக்குறும் பலா மரத்தடியில் எழுந்தருளியிருப்ப வனை, வெற்றியுடைய மழுப்படை கொண்டவனை எருது ஊர்தி உடையானை, நான்வாழ்த்துகின்றேன்.

(2) தந்தையில்லாத அருட்செல்வனை, (நல்ல மகனை) பெரிய இமயமலை யரசனுக்கு மருமகனை, மறைகள் முழங்குகின்ற சங்க வீதிஉடையவனை அந்தணனை, நான் வாழ்த்துகின்றேன்.

(3) யானை முகத்தையுடைய ஒப்பற்ற உலகத் தலைவனான பிள்ளையார்ப் பெருமானை, இனிமைமிக்க இலஞ்சி நகரில் எழுந்தருளியிருக்கின்ற முருகவேளைப் புதல்வர்களாகப் பெற்றாரென்னும் பெருமைக்குரிய முதல்வனை, மறைகளைத் தந்தவனை, நான் வாழ்த்துகின்றேன்.

(4) வேள்வித் தீயிடத்தே பறிகொடுத்துவிட்ட அழகிய தலைக்காக நல்ல ஆட்டுத்தலையைத் தன்மாமனாகிய தக்கனுக்கு தான் கொடுக்கும் பரிசிற்பொருளாக ஒட்டவைத்துதவிய பெரிய நிலைபெற்ற தலைவனாகிய திருக்குற்றாலநாதனை நான் வாழ்த்துகின்றேன்.

(5) மன்மதனுக்கும் மலரில் வாழும் நான்முகனுக்கும் கட்டழகுவாய்ந்த தெய்வயானை அம்மையார்க்கும், மாமனென்று கூறி உலகம் போற்றும்படியான அருட்கொடையாளனை நான் வாழ்த்துகின்றேன்.

(6) நீண்ட மூவுலகங்களையும் தன் திருவடிகளால் அளந்த நெடிய திருமாலும், நான்முகனும் தேடியலைந்தும் காணுதற்குரிய திரிகூடமலையில் எழுந்தருளியிருக்கின்ற அருட்செல்வனை நான் வாழ்த்துகின்றேன்.

(7) சித்திர நதியைத் தனக்குரிமையைாகப் பெற்றவனை, தேனருவிப் பெருக்கத்தைப் பெற்றவனை, சித்திரசபையில் திருநடஞ்செய்வோனை, என்றும் அழியாது நிலைபெற்ற திருக்குற்றால நாதனை, நான் வாழ்த்துகின்றேன்.

(8) நாகப்பாம்பை அணியாகப் பூண்டவனை, தன் அடியார்களையெல்லாம் ஆட்கொண்டருளியவனை, எக்காலும், மாறாது திருநடஞ் செய்வோனை எல்லோரையும் ஆண்டருள்கின்ற திருக்குற்றாலநாதனை நான் வாழ்த்துகின்றேன்.

(9) தானே திருமாலுடன் நான்முகனாகி உருத்திரனாகி இவர்களோடு ஒன்றுகலந்த திரிகூடமலையிலெழுந்தருளியிருக்கின்ற மேலானதற்கும் மேலாகியவனை, எட்டுத்திசைகளையுமே தனக்கு ஆடையாக உடைய திருக்குற்றாலநாதப் பெருமானை நான் வாழ்த்துகின்றேன்.

(10) சிற்றாற்றினது கரையுடையவனை, திருக்குற்றாலமலையை யுடையவனை, திருக்குற்றால நகரில் எழுந்தருளியிருப்பவனை, தக்கணாமூர்த்தியாக உள்ள மேலானவனாகிய திருக்குற்றால நாதப் பெருமானை, நான் வாழ்த்துகின்றேன்.

(11) மதங்கொண்ட யானையை உரித்தவனை, மூன்றாம்பிறையைத் திருச்சடையில் கொண்டிருப்பவனை, வடஅருவித் திருத்துறையுடையவனை வேதங்கட்குரியவனாகிய திருக்குற்றாலநாதப் பெருமானை, நான் வாழ்த்துகின்றேன்.

(12) முதல்முதல் வேதங்களை அருளிச்செய்தவனை, எல்லா உயிர்கட்கும் முன்தோன்றியவனை, குழல்வாய்மொழியம்மையார் சேர்ந்திருக்கின்ற இறைவனாகிய திருக்குற்றாலநாதப் பெருமானை நான் வாழ்த்துகின்றேன்.



(வி-ரை) 1-12 கொற்றம்-வெற்றி. தந்தி-யானை; தந்த-முடையது. கோனை-தலைவனை 'கோ' என்பது, ஐயுரு பெற்ற போது னகரச் சாரியை பெற்றது. தீ முகத்தில்-யாகத் தீயினிடத்தில்; ஒரு முடி இங்கே ஆட்டுத்தலை பனகஅணி; பாம்பு அணி. திகம்பரனை-திக்குகளை ஆடையாக உடையவனை; உலகம் முழுதும் நிறைந்துள்ளவனை. கடம்-மதம். கரி-யானை கருநிறமுடையது; அல்லது உருவிற்பெரியது என்னும் பொருளது. ஆதிமறை-முதன்மையான வேதம்; பழமையான வேதம். முன்னவன்-முற்பட்டவன்; கால எல்லையையெல்லாம் கடந்து நின்ற முதல்வன் என்றலுமாம். (128)

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

  வார்வாழும் தனத்திகுழல் வாய்மொழியம் பிகைவாழி
                                     வதுவைசூட்டும்
  தார்வாழி திரிகூடத்தார்வாழிகுறுமுனிவன் தலைநாட் சொன்ன;
  போர்வாழி அரசர்கள் செங் கோல்வாழி நன்னகரப் பேரால் ஓங்கும்
  ஊர்வாழி குற்றாலத் தலத்தடியார் வாழிநீ டூழிதானே.

(பொ-ரை) கச்சானவை என்றும் அணிந்திருக்கின்ற கொங்கைகளையுடையவளாகிய குழல்வாய்மொழியம்மை வாழ்க; அம்மையை மணக்கச் சூட்டிய மலர்மாலை வாழ்க; திருக்குற்றால நகரமக்கள் யாவரும் வாழ்க; அகத்திய முனிவரும் முற்காலத்தில் கூறப்பட்டவர்கள் யாவரும் வாழ்க; அரசர்களின் முறைமாறாத ஆட்சி வாழ்க; நல்லநகரமென்னும் பெயர் கொண்டு விளங்குகின்ற திருக்குற்றால நகரமும் வாழ்க; இத்திருக்குற்றால நகரில் வாழ்கின்ற தொண்டர்களும் பல ஊழிகள் தோறும் நிலைபெற்று வாழ்க;

 
(வி-ரை) வார்-கச்சு. வதுவை-மணம். சொன்ன பேர்-சொல்லப்பட்டவர். ஊழி-மிக நீண்ட காலம். வாழி-வாழ்க முற்காலத்தில் கூறப்பட்டவரென்பர், ஊரும்பேரும் மறைந்து போன பழங்காலப் பெரியோர்கள், இதனால், நூலின் இறுதியில் வாழ்த்துக் கூறி மங்கலமாக நூலை முற்றுவிக்கின்றார். (129)

திருக்குற்றாலக் குறவஞ்சி

மூலமும் உரையும் முற்றுப்பெற்றன