உ
ஸ்ரீ பிரஹந்நாயகி ஸமேத ஸ்ரீ பிரகதீஸ்வரர் துணை.
ஸ்ரீ சரபேந்திர பூபால
குறவஞ்சி நாடகம்.
___
காப்பு-விருத்தம்.] [ராகம் - நாதநாமக்கிரியை.
பார்கொண்ட புகழினோங்கும் பதியெனுந் தஞ்சைமேவுந்
தார்கொண்ட மார்பனெங்கள் சரபோஜி மன்னன்மீது
சீர்கொண்ட தமிழினாலே திகழ்குற வஞ்சிகூறப்
பேர்கொண்ட பிரகதீசர் பெறுகண பதிகாப்பாமே.
___
ஸ்ரீ சந்திர மௌலீஸ்வரர் துதி விருத்தம்.
ராகம்--நாதநாமக்கிரியை.
தன்னிகர் செல்வன் றஞ்சைச் சரபோஜி மன்னன்மீது
நன்னயத் தமிழினாலே நவில்குற வஞ்சிகூற
உன்னுபோ சலகுலத்துக் குயர்குல தெய்வமாகி
மன்னுசந் திரமௌலீசர் மலர்ப்பதங் காப்பதாமே.
___
காட்சி I
கட்டியக்காரன் பிரவேசம் - விருத்தம்.
ராகம் - நாதநாமக்கிரியை.
வரமுறு சரபமன்னர் வளர்தஞ்சை நகரந்தன்னில்
மருவுமோ கினிப்பெண்மேவும் வாசற்கட்டியக்கா ரன்றான்
குரவமென் மலர்ப்பூங் கோதைக் குறவஞ்சி நாடகத்திற்
கருள்கண பதிவந் தாரென் றவையின்முன் சொலவந்தானே.
___
|