மந்தமுறு மாருதமாய் முந்தியெல்லா நின்றனையே
தென்றலே-இன்று
மண்டபிர சண்டகுணங் கொண்டுலவி வந்ததென்னே
தென்றலே
வாடையொடு கோடையுமே லூதையுமிங் குன்னைப்போலத்
தென்றலே-வந்து
வருத்தமெதிர் விளைத்திடலை, யொருத்தருமுன் கண்டதில்லை
தென்றலே
நீடுதிரைக் கடலொலிக்குங் குயிலிசைக்கும் பரிதவிப்பேன்
தென்றலே-இங்கு
நீயுமொரு வாதமதாய் மோதுமிதை யேதுசொல்வேன்
தென்றலே
ஒருகுணத்தின், மருவிலைநீ, பிரிவிலவர்க் கமுதாவாய்
தென்றலே-பிரிந்தோர்க்
கோங்குவிடமாகிமய லாங்குறவே தீங்குசெய்வாய்
தென்றலே
விரவுதழல் சாரிவதுன்றன் மருவியற்கைக் குணந்தானோ
தென்றலே-பொதியம்
மேவுசந்த னாடவியற் சூழரவின் றீவிடமோ
தென்றலே
மருவிமுன்பு கந்தவகன் மதனன் வா கனமானாய்
தென்றலே இன்று
வன்னிவக னாயினைமேற் கன்னிவா கனமுமாவாய்
தென்றலே
சரபோஜி மன்னரென்னை மருவுவார் நாளைக்குத்
தென்றலே-அங்கே
சார்ந்திளைப்புத் தீர்ந்திடலாம் போந்திடுகிப் போதினி நீ
தென்றலே
___
|