கச்சணி முலைமாதர் நடனஞ்செய் வேளையிலும்
கவிவாணர் பிரசங்கஞ் செய்போதும் புகலாதே (சொல்லும்)
நீலத் தடங்கண்மாதர் தூதுக ளங்கங்கே
நீள்கடை தோறுநிற்குஞ் சமயம்பார்த் தன்பாலே
சாலப் பெருஞ்சேனை சூழப் பவனிவரத்
தாம்வரு மகராஜர் சபையதன் முன்பாலே (சொல்லும்)
பாலுற்றிடும் போதவ் வாசற் புறநின்று
பணிந்துரைத் தாலது பலித்திடு நம்பாலே
மாலுற்ற துவும்நான் மேலுற்ற துஞ்சொல்லி
மாலைகைக் கொண்டிங்கு வந்திடு கென்பாலே (சொல்லும்)
மோகினி வசனம்:- சகிகாள் சகல சாஸ்திர சம்பன்னரும் சகல தேசத்தரசர்களும் மந்திரி பிரதானிகளும் சூழ சிம்மாசனத்தில் வீற்றிருந்து அரசு செலுத்தும் அச்சரப நரேந்திர பூபதியை வாசலில் காத்திருந்து பணிந்துரைத்தாவது என் குறையைத் தீர்க்கும் படி கேட்டுக்கொள்ளுங்கள்.
சகிகள் வசனம்:- அம்மா மதனவல்லி ஏதோ எங்களால் கூடிய வரையில் சென்று முயன்று பார்க்கிறோம்.
சகிகள் செல்ல மோகினியும் செல்லல்.
காட்சி முடிவு.
___
காட்சி IV
மோகினி அந்தப்புரத்தில் மோகினி தூது சென்றவள்
வரவில்லையே என்று ஏக்கமுற்றிருக்கும்போது
ஒரு சகி பிரவேசிக்கிறாள்.
___
சகி விருத்தம் - எண்சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்.
சொன்னவிந்த வகையெல்லா மதனவல்லி
சொல்லி யந்தப் பாங்கிதனை விடுத்தா ளந்த
|