சகியேயென் றேன்சற்றுச் சகியேயென் றாளவள்வஞ்
சகியேயிப் படியென்னைத் தவிக்கவிட்டுச் சென்றாள்
மகிபாலன் சரபோஜி மன்னன் றனக்கிசைந்தால்
வருவான் வரச்சொல்வான் மாலையா கிலுங்கொடுப்பான்
(இன்னும்)
___
சகி வசனம்:- மதனவல்லி போனவள் வருமுன்னம் நீ இவ்வாறு வேதனையடைவது உனக்கழகாகாது எப்படியும் அவள் உன்மனோ பீஷ்டம் பூர்த்தியாகும் மார்க்கம் தேடியே திரும்புவாள் வருந்தாதே
மோகினி வசனம்:- சகியே! காமன் கணையால் வருந்தும் என் வருத்தத்தை அவரறியச் சொல்லி இணங்கச் செய்குவாளோ ஏதோ தெரியவில்லையடி.
சகி வசனம்:- அம்மா யாதொன்றுக்கும் கவலைப்படவேண்டாம். போனவள் ஜெயத்துடனே திரும்புவாள். வா. நாம் செல்லுவோம்.
இருவரும் உள்ளே செல்ல
காட்சி முடிவு,
___
காட்சி - V.
குறத்தி பிரவேசம்.
___
குறத்தியின் வர்ணனை நேரிசை ஆசிரியப்பா.
இப்படி யிவர்க ளிருந்திடு காலையில்
மைப்படி விழியளோர் மலைக்குற மடந்தை
மும்மதக் களிற்றின் முகபடா மென்ன
வெம்முலைத் தடத்தின் மேற்கச் சணிந்து
மதன்கொலு மண்டபம் வளைத்திடு திரைபோல்
விதமுறு சித்திர மென்றுகி லுடுத்துப்
|