அனுபல்லவி
வானவற்போற் றிடுந்தஞ்சை நீடுசர போஜி
மன்னவர்காத் திடுமிந்த மன்னுபுவி மீதே (நானறிந்த)
சரணங்கள்.
பன்னிடுதாம் பிரவருணி பரவுபெரு வைகை
பொன்னிநதி முத்தாறு புகழ்ந்திடுபா லாறு
சொன்னமுகி கம்பைநதி துலங்கிடுஞ்சே யாறு
கன்னிநெடு யமுனைநதி கண்டறிவே னம்மே (நானறிந்த)
பொங்குதுங்க பத்திரையே போற்றுநிரு மதையே
மங்களஞ்செய் கெடிலநதி மருவுகோதா விரியே
சங்கநதி கபிலநதி சரஸ்வதிகிட் டிணையே
கங்கைநதி யாதிநதி கண்டறிவே னம்மே (நானறிந்த)
இந்தநெடு நதிகளெலா மூழ்கிவந்தே னிங்கே
முந்தியொரு சோழன்மயன் மூண்டகொடும் பிணியே
சிந்திடச்சேர்த் தின்பமருள் சிவகெங்கை தனிலே
அந்தமிலா வினைதீர்தற் காடவந்தே னம்மே (நானறிந்த)
குறத்தி வசனம்:- அம்மே நான் போன தேசவளமெலா சொல்றே கேளு
___
குறத்தி தேசவளஞ் சொல்லுதல்
___
ராகம் - சங்கராபரணம்] பல்லவி. [தாளம் - மிச்ரம்
தேசங்கண் மருவிய பேரும் வளமையும்
தெரியக் கூறுவன் மின்னே
அனுபல்லவி.
வாச மலர்ச்சோலை சூழு முயர்தஞ்சை
வாழுஞ் சரபோஜி மன்னவர் போற்றிடு (தேச)
|