பக்கம் எண் :

45

குறத்தி பாட்டு.
___

 ராகம்-கேதாரகௌளம்]          பல்லவி          [தாளம்-ஆதி

 

         சோழநாட்டின் வளமை யுனக்கு நான்
     சொல்லுவேன் கேளடி மானே

அனுபல்லவி

     வாழு முயர்மதிற் றஞ்சை சரபோஜி
     மகராஜன் மனுநூல்சொல் முறையே யுளமகிழ்ந்து             (சோழ)

சரணங்கள்.

     நாடு தனிலூர்களெல்லா நகரங்கள்
         நண்ணிடு மந்நகர் தம்மி லிலங்கிடும்
     வீடுகள் யாவையுஞ் சந்தனத் தாருவின்
         மேலிடு முத்தரந் தூண்களிசைந்திடும்
     மாடமாளிகைகளு நீணிலா முற்றமும்
         வாதாய னங்களுமாகி விளங்கிடும்
     நீடுமம் மாளிகை யெங்கு மணிதரு
         நெல்லு மணிகளும் பொன்னு மலிந்திடும்               (சோழ)

     நகரகங்க டோறு மருவி யிருக்கின்ற
         நால்வகைச் சாதியினோரும் பிறர்களும்
     தகுமவர் தங்கட் கிசையுந் தொழிலொடு
         சந்ததம் வாழ்வர்கள் மங்கள மாகவே
     புகலுந்தே வாலய மெங்கு நன் மண்டபம்
         போற்றும் விமானங்கோ புரங்களெல்லாம் பொன்னின்
     சிகர மிலங்குமெந் நாளுந் துலங்கிடும்
         தேரு முயர்திரு விழாவு நடந்திடும்                    (சோழ)