நேரிசை ஆசிரியப்பா
பார்கொண்ட தென்றிசைப் பரதகண் டத்திற்
சீர்கொண்ட சோழத் திருநா டதனிற்
றிருமக ளிருக்குஞ் செந்தா மரையாய்
விரவுபா ரதிக்கு வெண்டா மரையாய்
அளவில்செல் வத்தா லளகைமா நகராய்
உளமகிழ் சிறப்பி னும்பர்நா டாகி
வேதமும் வேள்வியு மிகுந்தய னுலகாய்
மாதவ னுறைதலின் வளரவன் பதியாய்ச்
சேவுயர் கொடியோன் றிகழ்தலிற் கைலையாய்
யாவரு முறைதலி னெழிற்சிவ புரியாய்
மீதலத் தோங்கிய விறன்மிகு மதிலும்
பாதலத் தணுகிய பரவுநீ ரகழியும்
வேதியர் நியமமும் வேந்தர்தம் வீதியும்
பேதமில் வணிகர் பின்னவர் தெருக்களும்
மாடமா ளிகைகளு மகிழர மியங்கலும்
நீடுகைத் தந்திக ணிலவிடும் பந்தியும்
வளர்பரிக் குலங்கண் மருவிடு சாலையும்
அளவில்பல் பண்டத் தாவண நிரையும்
விளங்கெழிற் றஞ்சை வியன்பதி யிடத்து
வளங்கொள்போ சலகுல வரோதய னாகிய
மருவுசீர்த் துளசி மன்னவன் புத்திரன்
சரபோஜி யென்னத் தகுமியர் பெயரினோன்
ஆகமங் கலைக ளருமறை புராணம்
பாகுறு மனுநூல் பலவுநன் குணர்ந்தோன்
படைகுடி கூழமைச்சுப் பகர்ந்திடு நீதி
நட்பர ணிவற்றி னயந்திடுஞ் சிறப்பினோன்
|