கொடையினின் முகிலலை கொண்டிட வலைத்துத்
திடமதின் மேருவைச் சிரங்குனி வித்து
வேள்வியிற் சதமகன் வெள்கவி்ண் ணடக்கிக்
கேள்வியி லநந்தனைக் கீழ்ப்படச் செய்து
வடிவினிற் சிலைக்கை மதனனை மறைத்துத்
தடையிலா துயிர்க்கெலாந் தண்ணளி புரிந்து
புகலரி யணைமிசைப் பொருந்தவீற் றிருந்து
மகிதலம் புரப்பவன் மன்னவர் பெருமான்
உலகமன் னவர்க ளுற்றெதிர் பணிய
நலமுறு காசி நண்ணியொண் கங்கை
மென்புனல் படிந்து விச்சுவ நாதன்
தன்பத பங்கயந் தனையெதிர் பணிந்து
வேண்டிய வரங்கள் விருப்புட னேற்று
நீண்டிடு மகிழ்ச்சி நிலவுற வந்தோன்
பொன்னெடுந் தேர்களும் பொருந்துகுஞ் சரங்களும்
பன்னுயர் பரிகளும் பதாதியுஞ் சூழ
மன்னவர் குழுவு மந்திரத் தலைவரும்
தந்நிகர் மந்திரி தந்திரக் கணமும்
சேனைத் தலைவருஞ் செறிந்திடு நண்பரும்
தாணா பதிகளுந் தண்புடை நெருங்கத்
தூரிய முழங்கத் துலங்குபொற் றொடிக்கை
நாரிய ரளவிலர் நடனஞ் செய்யப்
பாலெளிற் கவரிகள் பாங்கின ரிரட்ட
மேலுயர் பொற்கால் வெண்குடை நிழற்றக்
கண்கொடு கண்டோர் களிக்கப்
பண்புறு யானைமேற் பவனிவந் தனனே.
___
|