பக்கம் எண் :

இதன்பொருள்21


முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு,
பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்பன. பதினெண்கீழ்க் கணக்கு-நாலடி,
நான்மணிக்கடிகை, இன்னாநாற்பது, இனியவை நாற்பது, கார்நாற்பது,
களவழிநாற்பது, ஐந்தினையைம்பது, ஐந்திணையெழுபது,
திணைமொழியைம்பது, திணைமாலைநூற்றைம்பது, திணைமாலையெழுபது,
குறள், திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம்,
முதுமொழிக்காஞ்சி, ஏலாதி என்பன. இக்கூறிய பதினெட்டனுட் சிலவற்றை
யொழித்து வேறுசில சேர்த்துப் பதினெட்டென வொப்பிப்பாரு முளராகலின்,
இவைதாம் பதினெட்டென்ப தெமக்குடன்பாடன்று. பதினெண்கீழ்க்
கணக்குமென்புழி உம்மைதொக்கது. பொங்குநூலென்றமிகையாற் கல்லாட
முதலிய பிற விலக்கியங்களுங் கொள்ளப்படும். தேற்றுமென்பது தன்
வினையாய் நின்றது. “நட்பாடறேற்றாதவர்” என்றாற்போல. இதனைப்
பகுதிப்பொருள் விகுதியென்னுஞ் சுவார்த்தத்தில் வந்த காரிதமென்பர்
வடநூலார்.

     மறை இல் கேள்வி துறை பல் போகி-மறுத்தலில்லாத கேட்டற்
றொழிலையுடைய துறைகள் பலவற்றிலும் போய்,

     பா இனம் யாத்தற்கு வாய் வளம் கூர்ந்தனன்-பாக்களையு
மவற்றினங்களையுங்கட்டுதற்கு வாய்த்த வளமிக்கேனாயினேன்;

     பாவினம்-உம்மைத் தொகை. யாத்தற் கென்னுங் குவ்வுருபு அதற்கு
வினையுடைமையில் வந்தது.

     கற்று உணர் மாக்கள் அருமை இற்று என அறிந்து-கற்றுணர்ந்த
மனிதர்களினருமை இத்தன்மைத்தென்ற அளவிட்டறிந்து,

     உளம் தக அதனை தெரிந்து-உள்ளந் தகுதிபட அக்கல்வியைத்
தெரிந்து,

     அதனை-நெஞ்சறிசுட்டு. முன் நாள் பொன் உம் மணி உம்
சிதறி-முற்காலத்தே பொன்னையு மிரத்தினங்களையும் பலவாகக் கொடுத்து,

     இம்பரில் தம் பெயர் விட்டனர் மாய்ந்த-இவ்வுலத்தின் கண் தம்
பெயர்களை விட்டுவைத்து மறைந்து போன.

     விட்டனரென்னம் வினைமுற்று வினையெச்சமாய் நின்றது.