இவ்வாறு,
முஸ்லிம் புலவரால் இயற்றப்பட்ட ஆற்றுப்படை நூல் ஒன்று
உண்டு. இது மதுரைத் தமிழ்ச் சங்கத்துப் புலவராற்றுப்படை என்ற பெயரைப்
பெற்றுள்ளது. பாண்டித்துரைத் தேவரினால் நிறுவப்பட்ட நான்காம் தமிழ்ச்
சங்கத்தையே இந்நூல் குறிப்பிடுகின்றது. மதுரைத் தமிழ்ச் சங்கத்துக்குச்
சென்று சிறப்புப் பெயரும் பரிசிலும் பெறுகிறார் ஒரு புலவர். இவற்றைப்
பெறாத இன்னொரு புலவரைச் சந்திக்கிறார் அப் புலவர். சந்தித்ததும்
சிறப்பும் பெயரும் பரிசிலும் பெறுமாறு கூறி இவற்றைப் பெறாத அப்
புலவரைச் சங்கப் புலவரிடத்து வழிப்படுத்தியுள்ளார். இதனாலேயே இந்நூல்
புலவராற்றுப்படை எனப் படுவதாயிற்று.
புலவராற்றுப்
படையில் குலாம் காதிறு நாவலர் சங்க காலத் தமிழ்க்
கவி மரபுகளையே ஆண்டுள்ளார். தமிழ் மொழியைப் பற்றிக்
குறிப்பிடுகையில் தமிழ் என்ற சொல்லின் இனிமையைப் பற்றிக் கூறுகிறார்.
தனிமை
யென் பெயர்த்தா யினிமை யென் பொருட்டாய் என்று தமிழ்
என்ற சொல்லில் பொதிந்துள்ள கருத்துக்களை விளக்குகிறார்.
தமிழ்
மொழி அகத்தியருக்குச் சிவ பெருமானால் போதிக்கப்பட்டது
என்பது மரபு. இக் கருத்தினையே நாவலர் தமது புலவராற்றுப் படையில்
பின்வருமாறு கூறுகின்றார்:-
கங்கைச்
சடைய னொரு பாக மங்கையன்
இமயப் பொதியத் தமர்முனி அகத்தியற்
காய்ந்து தர வுணர்த்திப் போக்க.
பாரி,
காரி, ஆய், ஓரி, பேகன், நள்ளி, அதிகன் என்போர் கடையெழு
வள்ளல்கள். அவர்கள் பழங்காலத்தில் கற்றுணர்ந்த மக்களின் அருமை
இத்தன்மைத்து என அளவிட்டறியும் ஆற்றல் வாய்ந்தவர்களாய்த்
திகழ்ந்தனர். உள்ளந் தகுதிபட அக் கல்வியைத் தெரிந்து கொண்டனர்.
தெரிந்து பொன்னையும் இரத்தினங்களையும் பலவாறாக அளித்தனர்.
இவ்வாறு வரையாது கொடுத்து இவ்வுலகத்தின் கண் தம் புகழ் மங்காப்
பெயர்களை நிலை நாட்டினர். நிலை நாட்டிவைத்து மறைந்து போயினர்.
குலாம்காதிறு நாவலர் உள்ளக் கண்கள் முன் இவர்கள் தோன்றுகின்றனர்.
தமக்கென ஒன்றும் வையாது கொடுத்த அத்தகைய வள்ளல்கள் இக்காலத்தில்
வாழ்கின்றனர் அல்லர் என உள்ளம் உடைகின்றார். எனவே உணர்ச்சி
ததும்பப் பின்வருமாறு பாடுகின்றார்:
|