பக்கம் எண் :

132

 

ஊழின் பெற்றாய் என்றுரை இன்றேல் உயிர் மாய்வென்
பாழிப் பொற்றோள் மன்னவ என்றாள் பசையற்றாள்
 

அரிந்தான் முன்னோர் மன்னவனன்றோ அருமேனி
வரிந்தார் வில்லாய் வாய்மை வளர்ப்பான் வரம் நல்கிப்
பரிந்தால் என்னாம் என்றனள் பாயும் கனலே போல்
எரிந்தா றாதே இன்னுயிர் உண்ணும் எரியன்னாள்
 

வீழ்ந்தாளே இவ்வெய்யவள் என்னா மிடல் வேந்தன்
ஈந்தேன் ஈந்தேன் இவ்வரம் என்சேய் வனம் ஆள
மாய்ந்தே நான்போய் வானுல காள்வென்வசை வெள்ளம்
நீந்தாய் நீந்தாய் நின்மகனோடும் நெடிதென்றான்
 

 (கைகேயி சூழ்வினைப்படலம் 7, 14, 22, 23, 30, 32, 34, 36, 37, 39, 41,46,
  47, 48) 

கைகேசி ஸ்ரீராமரை வனத்துக்கு ஏவுதல்

விருத்தம்-8

 

ஆயன நிகழும் வேலை அண்ணலும் அயர்ந்து தேறாத்
தூயவன் இருந்த சூழல் துருவினன் வருதல் நோக்கி
நாயகன் உரையான் வாயால் நானிது பகர்வென் என்னாத்
தாயென நினைவான் முன்னே கூற்றெனத் தமியள் வந்தாள்
 

வந்தவள் தன்னைச் சென்னி மண்ணுற வணங்கி வாசச்
சிந்துரப் பவளச் செவ்வாய் செங்கையின் புதைத்து மற்றைச்
சுந்தரத் தடக்கை தானை மடக்குறத் துவண்டு நின்றான்
அந்தி வந்தடைந்ததாயைக் கண்டஆன் கன்றின் அன்னான்
 

நின்றவன் தன்னை நோக்கி இரும்பினால் இயன்ற நெஞ்சின்
கொன்றுறழ் கூற்றம் என்னும் பெயரின்றிக் கொடுமை பூண்டாள்
இன்றுனக் குணர்த்தலாவது ஏயதே என்னின் ஆகும்
ஒன்றுனக்கு உந்தை மைந்த உரைப்பதோர் உரையுண் டென்றாள்

எந்தையேஏவ நீரே உரைசெய இயைவதுண்டேல்
உய்ந்தனென் அடியேன் என்னின் பிறந்தவர் உளரோவாழி
வந்ததென் தவத்தினாய வருபயன் மற்றொன்றுண்டோ
தந்தையும் தாயும்நீரே தலைநின்றேன் பணிமின் என்றான்