பக்கம் எண் :

144

ஆண்டகை நெடுமுடி அரசர் கோமகன்
யாண்டையான் பணித்திர்என்று இருகை கூப்பினான்
 

ஆனவன் உரைசெய அழிவில் சிந்தையாள்
தானவர் வலிதொலைத்து அவனி தாங்கிய
தேனமர் தெரியலான் தேவர் கைதொழ
வானகம் எய்தினான் வருந்தல் நீ என்றாள்
 

எறிந்தன கடியசொல் செவியுள் எய்தலும்
நெறிந்தலர் குஞ்சியான் நெடிது வீழ்ந்தனன்
அறிந்திலன் உயிர்த்திலன் அசனி ஏற்றினால்
மறிந்துயர் மராமரம் மண்ணுற் றென்னவே
 

வாய்ஓளி மழுங்கதன் மலர்ந்த தாமரை
ஆய்மலர் நயனங்கள் அருவி சோர்தரத்
தீயெரி செவியில்வைத் தனைய தீயசொல்
நீயலது உரைசெய நினைப்பரோ என்றான்
 

எழுந்தனன் ஏங்கினன் ஏங்கிப் பின்னரும்
விழுந்தனன் விம்மினன் வெய்து யிர்த்தனன்
அழிந்தனன் அரற்றினன் அரற்றி இன்ன
மொழிந்தனன் பின்னரும் முகிலின் செவ்வியான்
 

அறந்தனை வேர்அறுத் தருளைக் கொன்றுயர்
சிறந்தநின் தண்ணளித் திருவை தேசழித்து
இறந்தனை ஆம்எனின் இறைவ நீதியை
மறந்தனை உனக்கிதன் மாசுமேல் உண்டோ
 

சினக்குறும் பெறிந்துஎழு காமத் தீயவித்து
இனக்குறும்பு யாவையும் எற்றி யாவர்க்கும்
மனக்குறு நெறிசெலும் வள்ளியோய் மறந்து
உனக்குறு நெறிசெலல் ஓழுங்கின் பாலதோ
 
முதலவன் முதலிய முந்தையோர் பழங்
கதையையும் புதுக்கிய தலைவன் கண்ணுடை
நுதலவன் சிலைவிலின் நோன்மை நூறிய
புதல்வனை எங்ஙனம் பிரிந்து போயினாய்