145 செவ்வழி உருட்டிய திகிரி மன்னவ எவ்வழி மருங்கினும் இரவ லாளர்தாம் இவ்வழி உலகினில் இன்மை நண்ணினோர் அவ்வழி உலகினும் உளர்கொலோ ஐய பல்பகல் நிழற்றும்நின் கவிகைப் பாய்நிழல் நிற்பன பல்லுயிர் உணங்க நீ நெடும் கற்பக நெடுநிழல் காத லித்தியோ மற்பக மலர்ந்ததோள் மன்னர் மன்னனே இம்பர்நின் றேகினை இருக்கும் சார்பிழந்து உம்பர்வந் துன்கழல் ஒதுங்கி னார்களோ சம்பரன் அனையஅத் தானைத் தானவர் அம்பரத் தின்னமும் உளர் கொலாம் ஐய இயங்கெழு தானையர் இறுத்த மாத்திரை உயங்கலில் மறையவர்க் குதவி உம்பரின் அயங்கெழு வேள்வியோ டரசர்க் கோதிய வயங்கெரி வளர்க்கலை வைக வல்லையோ ஏழுயர் மதகளிற் றிறைவ ஏகினை வாழிய கரியவன் வறியன் கையெனப் பாழியம் புயத்துநின் பணியின் நீங்கலா ஆழியை இனிஅவற்கு அளிக்க எண்ணியோ பற்றுறு தவத்தினின் பயந்த மைந்தர்க்கு முற்றுல களித்துநீ முறையின் எய்திய கொற்றநல் முடிமணக் கோலங் காணவும் பெற்றிலை போலும்நின் பெரிய கண்களால் (பள்ளிபடைப்படலம் 42, 55) பரதர் கைகேசியைக் கோபித்தல் விருத்தம்-24 - தரு-13 எந்தையும் யாயும் எம்பிரானும் எம்முனும் அந்தமில் பெருங்குணத்து இராமன் ஆதலால் வந்தனை அவன்கழல் வைத்த போதலால் சிந்தைவெங் கொடுந்துயர் தீர்கலா தென்றான் |