பக்கம் எண் :

150

ஊண் அல உண்வழி நாயின் உண்டவன்
ஆண்அலன் பெண்அலன் ஆர்கொ லாம்என
நாணலன் நரகம் உண்டெனும் நல்லுரை
பேணலன் பிறர்பழி பிதற்றி யாகயான்
 

மறுவில்தொல் குலங்களை மாசிட்டு ஏற்றினோன்
சிறுவிலை எளியவர் உணவு சிந்தினோன்
நறியன அயலவர் நாவில் நீர்வர
உறுபதம் நுங்கிய ஒருவன் ஆகயான்
 

சுரும்பலர் செந்நல்அம் கழனிக் கானநாடு
அரும்பகை கவர்ந்துண ஆவி பேணினென்
இரும்பலர் நெடுந்தளை ஈர்த்த காலொடும்
விரும்பலர் முகத்தெதிர் விழித்து நிற்தயான்
                  (பள்ளிபடைப்படலம் 27-91, 94-97, 99-109, 113) 

குகன் பரதர் சேனையைக்கண்டு கோபித்தல்

விருத்தம்-26 - தரு-15 

மூன்றுல கினுக்குமோர் முதல்வ னாய்முதல்
தோன்றினன் இருக்கயான் மகுடம் சூடுதல்
சான்றவர் உரைசெயத் தருமம் ஆயதேல்
ஈன்றவள் செய்கையில் இழுக்குண் டாகுமோ
 

நன்னெறி என்னினும் நான்இந் நானில
மன்னுயிர்ப் பொறைசுமந்து இருந்து வாழ்கிலேன்
அன்னவன் தனைக்கொணர்ந்து அலங்கல் மாமுடி
தொன்னெறி முறைமையின் சூட்டக் காண்டிரால்
                                      (ஆறுசெல்படலம் 14, 17)
 

அப்படை கங்கையை அடைந்தது ஆயிடைத்
துப்புடைக் கடலின்நீர் சுமந்த மேகத்தை
ஒப்புடை அண்ணலோ டுடற்றவே கொலாம்
இப்படை எழுந்ததென்று எடுத்த சீற்றத்தான்
 

குகன்எனப் பெயரிய கூற்றின் ஆற்றலான்
தொகை முரண் சேனையைத் துகளின் நோக்குவான்
நகைமிகக் கண்கள்தீ நாற நாசியில்
புகையுறக் குனிப்புறும் புருவப் போர்விலான்