பக்கம் எண் :

151

அஞ்சன வண்ணன் என்உயிர் நாயகன் ஆளாமே
வஞ்சனை யால்அர செய்திய மன்னரும் வந்தாரே
செஞ்சரம் என்பன தீயுமிழ் கின்றன செல்லாவோ
உஞ்சிவர் போய்விடின் நாய்க்குகன் என்றெனை ஓதாரோ
 

ஆழ நெடுந்திரை ஆறு கடந்திவர் போவாரோ
வேழ நெடும்படை கண்டு விலங்கிடும் வில்லாளோ
தோழமை என்றவர் சொல்லிய சொல்ஒரு சொல்லன்றோ
ஏழமை வேடன் இறந்திலன் என்றெனை ஏசாரோ
 

முன்னவன்என்று நினைந்திலன் மொய்புலி அன்னான்ஓர்
பின்னவன் நின்றனன் என்றிலன் அன்னவை பேசானேல்
என்இவன் என்னை இகழ்ந்தது இவ்வெல்லை கிடந்தன்றோ
மன்னவர் நெஞ்சினில் வேடர் விடும்சரம் வாயாவோ
 

பாவமும் நின்ற பெரும்பழியும் பகை நண்போடும்
ஏவமும் என்பவை மண்ணுல காள்பவர் எண்ணாரோ
ஆவது போகஎன்அருயிர்த் தோழமை தந்தான்மேல்
போவது சேனையும் ஆருயிரும்கொடு போயன்றோ
 

அருந்தவம் என்துணை ஆள இவன்புவி ஆற்றானோ
மருந்தெனின் அன்றுயிர் வண்புகழ் கொண்டுபின் மாயேனோ
பொருந்திய கேண்மை உகந்தவர் தம்மொடும் போகாதே
இருந்தது நன்று கழிக்குவென் என்கடன் இன்றோடே
 

தும்பியும் மாவும் மிடைந்த பெறும்படை சூழ்வாரும்
வம்பியல் தாரிவர் வாள்வலி கங்கை கடந்தன்றோ
வெம்பிய வேடர் உளீர் துறைஓடம் விலக்கீரோ
நம்பிமுன் னேஇனிநம் உயிர் மாய்வது நன்றன்றோ
 

போனபடைத்தலை வீரர்தமக்கிரை போதாதோ
சேனைக் கிடைக்கிடு தேவர் வரின்சிலை மாமேகம்
சோனை படக்குடர் சூறைபடச் சுடர் வாளோடும்
தானை படத்தனி யானைபடத் திரள் சாயேனோ
 

நின்ற கொடைக்கைஎன் அன்பன் உடுக்க நெடுஞ்சீரை
அன்று கொடுத்தவன் மைந்தர்பலத் தைஎன் அம்பாலே
கொன்று குவித்த நிணங்கொள் பிணக்குவை கொண்டோடித்
துன்று திரைக்கடல் கங்கை மடுத்தினி தூராதோ