197 சீதையின் பிரிவாற்றாமல் ஸ்ரீராமர் இரங்கல் விருத்தம்-26 பொறையடையத் தந்தையிந்தப் புத்திசொல்லிப் பரமபதம்போகக்கண்டான் விறகுதம்பி இடக்கண்டான் சாமிசடாயுவுக்குள்ள விதியும் கண்டான் கறையிருளும் வரக்கண்டான் சீதைமுகக் கமலமொன்றும் காணானாகி மறைவுசெய்தார் ஆர்என வேதியங்கினான் ஸ்ரீராமன் மயங்கினானே திபதை-10 சங்கராபரண ராகம் ஆதிதாளம் கண்ணிகள் 1. நல்லோர் பெரியோர் என்னை வசையும் சொல்லல் ஆச்சே நடுக்காட்டில் என்னைத் தெய்வம் அகலக் கொண்டுபோச்சே பொல்லா ராவணனைக்கண்டு கலங்கினாளோ பேதை பூனைகண்ட கிளிபோலே புலம்பினாளோ சீதை 2. ஆரும் இல்லாத காட்டில் அதட்டினானோ பாவி ஐயோ நினைக்கநினைக்கப் பதைக்குதேஎன் ஆவி வாரும் வாரும் என்றென்னைக் கூவிஇரைந் தாளோ வழிமேலே கண்ணை வைத்துப் பார்த்துக்கரைந் தாளோ 3. வீடே பர்ணசாலைஎன் றெண்ணி இருந் தேனே விதிமோசத்தாலேதம்பி விட்டுப்பிரிந் தானே காடே மலையே என்தன் கவலைதடுக் கீரோ கண்ணாட்டி போனவழி காட்டிக் கொடுக் கீரோ 4. துளித்த மான்குட்டி வந்தென் முன்னே நின்ற போதே சொன்னானே தம்பியதை உண்மையொன்றெண்ணாதே வெளுத்த தெல்லாம் பாலென்று எண்ணியடுத் தேனே வீட்டுவிளக்கை வெட்ட வெளியில்விடுத் தேனே 5. அங்கலாய்ப் பாளேசீதை கண்ணைநனைப் பாளே அரக்கர்க்குப் பயந்தான் என்றென்னைநினைப் பாளே சிங்கார வேட்டையாட வீணேபோகி னேனே சிறகுபறிகொடுத்த பறவைஆகி னேனே 6. தணிக்கா நெருப்பைப் போலே மூளுதேவி சாரம் தாரத்தை ரட்சியாதான் வீரம்என்ன வீரம் அணைப்பானே சிறகால்என் றெண்ண எண்ணி னேனே அய்யோ சடாயுவுக்கும் பாவம்பண்ணி னேனே. |