பக்கம் எண் :

209

 
நாறிய நகையணி நல்ல புல்லினால்
ஏறிய செவ்விமேல் இயற்றுமோ எனா
மாறகல் முழுமணிக்கு அரசின் மாட்சிதான்
வேறொரு மணியினால் விளங்குமோ என்றாள்

கரந்திலன் இலக்கணம் எடுத்துக் காட்டிய
பரந்தரு நான்முகன் பழிப்புற் றானரோ
இரந்திவன் இணையடிப் பொடியும் ஏற்கலாம்
புரந்தரன் உலகெலாம் புரக்கின்றான் என்றாள்
                                   (சூர்ப்பணகைப் படலம் 5-18) 

ஸ்ரீராமர் பக்கல் சூர்ப்பநகை வருதல்

விருத்தம்-8 - தரு-4


நின்றனள் இருந்தவன் நெடிய மார்பகம்
ஒன்றுவென் அன்றெனின் அமுதம் உண்ணினும்
பொன்றுவென் போக்கினி அறிந்து போம்எனா
சென்றெதிர் நிற்பதோர் செய்கை தேடுவாள்

பஞ்சி யொளிர் விஞ்சுகுளிர் பல்லவ மனுங்க
செஞ்செவிய கஞ்சநிகர் சீறடிய ளாகி
அஞ்சொலிள மஞ்ஞையென அன்னமென மின்னும்
வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்

கானில்உயர் கற்பகம் உயிர்த்த கதிர்வல்லி
மேனிநனி பெற்றுவிளை காமம் நிறை வாசத்
தேனின் மொழியுற்று இனியசெவ்வி நனிபெற்றோர்
மானின் விழிபெற்று மயில் வந்ததென வந்தாள்

நூபுரமும் மேகலையும் நூலும் அறல்ஓதிப்
பூமுரலும் வண்டும் இவை பூசலிடும் ஓசை
தாமுரைசெய் கின்றதொரு தையல் வருமென்னா
கோமகனும் அத்திசை குறித் தெதிர் விழித்தான்
                        (சூர்ப்பணகைப் படலம் 21, 24, 26, 27)