பக்கம் எண் :

212

உயரும் விண்ணிடை மண்ணிடை விழும் கிடந்துஉழைக்கும்
அயரும் கைகுலைந்தலமரும் ஆருயிர் சோரும்
பெயரும் பெண்பிறந்தேன் பட்டபிழை எனப்பிதற்றும்
துயரும் அஞ்சிமுன் தொடர்ந்திலாத் தொல் குடிப்பிறந்தாள்

ஊற்றும் மிக்கநீர் அருவியின் ஒழுகிய குருதிச்
சேற்று வெள்ளத்துள் திரிபவள் தேவரும் இரிய
கூற்றும் உட்கும்தன் குலத்தினோர் பெயரெலாம் கூறி
ஆற்று கிற்றிலள் பற்பல பன்னிநின் றழைத்தாள்

நிலைஎடுத்து நெடுநிலத்து நீயிருக்கத் தாபதர்கள்
சிலைஎடுத்துத் திரியுமது சிறிதன்றோ தேவர்எதிர்
தலையெடுத்து விழியாமைச் சமைப்பதேதழல் எடுத்தான்
மலையெடுத்த தனிமலையே இவை காண வாராயோ

புலிதானே புறத்தாகக் குட்டி கோட் படாதென்ன
ஒலியாழி உலகுரைக்கும் உரைபொய்யோ ஊழியினும்
சலியாத மூவருக்கும் தானவர்க்கும் வானவர்க்கும்
வலியானே யான்பட்ட வலிகாண வாராயோ

ஆர்த்தானைக் கரசுந்தி அமரர்கணத் தொடும் அடர்ந்த
போர்த்தானை இந்திரனைப் பொருதவனைப் போர்தொலைத்து
வேர்த்தானை உயிர்கொண்டு மீண்டானை வெரிந் பண்டு
பார்த்தானே யான்பட்ட பழிவந்து பாராயோ

மரனேயும் நெடுங்கானில் மறைந்துறையும் தாபதர்கள்
உரனேயோ அடலரக்கர் ஓய்வேயோ உற்றெதிர்ந்தார்
அரனே யோ அரியேயோ அயனேயோ எனும் ஆற்றல்
கரனே யோ யான்பட்ட கையறவு காணோயோ

உரன்நெரிந்து விழஎன்னை உதைத்துருட்டி மூக்கரிந்த
நரன் இருந்து தோள்பார்க்க நான்கிடந்து புலம்புவதோ
கரன்இருந்த வனம்அன்றோ இவைபடவும் கடவேனோ
அரன்இருந்த மலையெடுத்த அண்ணாவோ அண்ணாவோ

நசையாலே மூக்கிழந்து நாணமிலா நான்பட்ட
வசையாலே நினதுபுகழ் மாசுண்ட தாகாதோ
திசையானை விசைகலங்கச் செருச்செய்து மருப்பொசித்த
இசையாலே நிறைந்தபுயத்து இராவணவோ இராவணவோ