பக்கம் எண் :

228

அனகமா நெறிபடர் அடிகள் நும்அலால்
நினைவதோர் தெய்வம் வேறிலாத நெஞ்சினான்
சனகன் மாமகள் பெயர் சனகி காகுத்தன்
மனைவியாள் என்றனள் மறுவில் கற்பினாள்

சீதை வினவ ராவணன் கூறுதல்

ஈசன் ஆண்டிருந்த இலங்குமால் வரை
ஊசி வேரொடும் பறித்தெடுக்கும் ஊற்றத்தான்
ஆசைகள் சுமந்தபேர் அமரி யானைகள்
பூசல்செய் மருப்பினைப் பொடிசெய் தோளினான்

வெம்மைதீர் ஒழுக்கினன் விரிந்த கேள்வியான்
செம்மையோன் மன்மதன் திகைக்கும்-செவ்வியான்
எம்மனோர் அனைவரும் இறைவர் என்றெணும்
மும்மையோர் பெருமையும் முற்றும் வெற்றியான்

அனைத்துலகினும் அழகமைந்த நங்கையர்
எனைப்பலர் அவன்தனது அருளின் இச்சையோர்
நினைத்து அவர்உருகவும் உதவ நேர்கிலன்
மனக்கினியாள் ஒருமாதை நாடுவான்

வேதமும் வேதியர் அருளும் வெஃகலர்
சேதன மன்னுயிர் தின்னும் தீவினைப்
பாதக அரக்கர்தம் பதியின் வைகுதற்கு
ஏதுஎன் உடலமும் மிகை எனறெண்ணுவீர்

மங்கையஃதுரைத்தல் கேட்ட வரம்பிலான் மறுவின் தீர்ந்தார்
வெங்கண்வாள் அரக்கர்என்ன வெருவலெம் மெய்ம்மை நோக்கின்
திங்கள் வாள்முகத்தினாளே தேவரின் தீயர்அன்றே
எங்கள் போலியர்க்கு நல்லார் நிருதரே போலும் என்றான்

திறந்தெரி வஞ்சன்அச்சொல் செப்பலும் செப்பம் மிக்காள்
அறந்தருவள்ளல் ஈண்டிங் கருந்தவம் முயலும் நாளுள்
மறந்தலை திரிந்தவாழ்க்கை அரக்கர்தம் வருக்கத்தோடும்
இறந்தனர் முடிவர் பின்னர் இடரிலைஉலகில் என்றாள்