பக்கம் எண் :

237

ஸ்ரீராமர் கோபத்தைச் சடாயு ஆற்றுதல்

விருத்தம்-25 - தரு-15

இவ்வழிநிகழும் வேலை எருவைகட் இறைவன்யாதும்
செவ்வியோய் முனியல்வாழி தேவரும் முனிவர்தாமும்
வெவ்வலி வீரநின்னால் வேறும்என் றேமாக்கின்றார்
எவ்வலி கொண்டுவெல்வார் இராவணன்செயலை என்றான்

நாள்செய்த கமலத்தண்ணல் நல்கியநவையில் ஆற்றல்
தோள்செய்த வீரம்என்னில் கண்டனை சொல்லும் உண்டோ
தாள்செய்ய கமலத்தானேமுதலினர் தலைபத்துள்ளாற்கு
ஆட்செய்கின் றார்களன்றி அறஞ்செய்கின் றார்கள்யாரே

தெண்திசை உலகந்தன்னில் செறுநர்மாட் டேவல்செய்து
பெண்டிரின் வாழ்வர்அன்றே இதுவன்றோ தேவர்பெற்றி
பண்டுல களந்தோன்நல்க பாற்கடல் அமுதம் அந்நாள்
உண்டிலர் ஆகில் இந்நாள் அன்னவர்க்குய்தல் உண்டோ

வம்பிழை கொங்கைவஞ்சி வனத்திடைத் தமியள்வைகக்
கொம்பிழை மானின்பின்போய்க் குலப்பழி கூட்டிக்கொண்டீர்
அம்பிழை வரிவில்செங்கை ஐயன்மீர் ஆயுங்காலை
உம்பிழை என்பதல்லால் உலகம் செய்பிழையும் உண்டோ

ஆதலால் முனிவாயல்ல அருந்ததி அனையகற்பின்
காதலாள் துயரம்நீக்கி தேவர்தம் கருத்தும்முற்றி
வேதநூல் முறையில்யாவும் விதியுளி நிறுவிவேறும்
தீதுளதுடைத்தி என்றான் சேவடிக்கமலம் சேர்வான்

புயல்நிறவண்ணன் ஆண்டுப் புண்ணியன் உரைத்த சொல்லைத்
தயரதன் பணியீதென்னச் சிந்தையில் தழுவிநின்றான்
அயல்இனி முனிவதென்னை அரக்கரை வருக்கம் தீர்க்கும்
செயல்இனிச் செயல் எனறெண்ணி கண்ணியசீற்றம் தீர்ந்தான்

ஆயபின் அமலன்தானும் ஐயநீ அமைதிஎன்ன
வாயிடை மொழிந்ததன்றி மற்றொருசெயலும் உண்டோ
போயதவ் அரக்கன் எங்கே புகல்எனப் புள்ளின் வேந்தன்
ஓய்வினன் உணர்வுதேய உரைத்திலன் உயிரும் தீர்ந்தான்
                                (சடாயுஉயிர்நீத்தபடலம் 121-127)