241 தோளும் வாங்கிய தோமுடை யாக்கையைத் துறவா, நீளம் நீங்கிய பறவையின் விண்உற நிமிர்ந்தான் ஈன்றவனோ எப்பொருளும் எல்லைதீர் நல்லறத்தின் சான்றவனோ தேவர்தவத்தின் தனிப்பயனோ மூன்று கவடாய் முளைத்தெழுந்த மூலமோ தோன்றி அருவினையேன் சாபத்துயர் துடைத்தாய் மூலமே இல்லாமுதல்வனே நீமுயலும் கோலமோ யார்க்கும் தெளிவரிய கொள்கைத்தால் ஆலமா ஆலின் அடையோ அடைக்கிடந்த பாலனோ வேலைப் பரப்போ பகராயே காண்பார்க்கும் காணப் படுபொருட்கும் கண்ணாகிப் பூண்பாய் போல் நிற்றியால் யாதொன்றும் பூணாதாய் மாண்பால் உலகை வயிற்றொளித்து வாங்குதியால் ஆண்பாலோ பெண்பாலோ அப்பாலோ எப்பாலோ ஆதிப் பிரமனும் நீ ஆதிப் பரமனும் நீ ஆதிஎனும் பொருட்கு அப்பால் உண்டாகிலும் நீர் சோதி நீசோதிச் சுடர்ப்பிழம்பும் நீஎன்று வேதம் உரைசெய்தால் வெள்காரோ வேறுள்ளார் எண்டிசையும் திண்சுவரா ஏழேழ் நிலைவகுத்த அண்டப் பெருங்கோயிற்கு எல்லாம் அழகாய மண்டலங்கள் மூன்றின்மேல் என்றும் மலராத புண்டரிக மொட்டின் பொருட்டே புரையம்மா மண்பால் அமரர் வரம்பாரும் காணாத எண்பால் உயர்ந்த எரிஓங்கும் நல்வேள்வி உண்பாய் நீ ஊட்டுவாய் நீ இரண்டும் ஒக்கின்ற பண்பார் அறிவார் பகராய்பரமேட்டி நிற்கும் நெடுநீத்த நீரில்முளைத் தெழுந்த மொக்குளே போல முகுளித்த அண்டங்கள் ஒக்கஉயர்ந்து உன்னுளே தோன்றி ஒளிக்கின்ற பக்கம் அறிதற்கு எளிதோ பரம்பரனே |