260 ஸ்ரீராமர் கார்காலம் சீதையை நினைந்து இரங்கல் விருத்தம்-13 மாமகுடம் புனைந்தசுக்கிரீ வனுக்கிவ் வாறே மதிசொல்லி மதங்கமுனி மலையின்மேலே ஏமமழைக் காலமெல்லாம் இருந்துசீதை எண்ணத்தால் ரகுராமன் வண்ணம்மாறிக் காமலர்ச்சோ லையைமயிலைக் குயிலை மானைக் கானகத்தைப் பார்த்து விரகாக்கினி யாலே வேமுருகும் வெண்ணெயைப் போல் கரைந்துசிந்தை விலங்குவான் தனியேதான் கலங்குவானே திபதை-6 நாதநாமக்கிரியைராகம் ஆதிதாளம் கண்ணிகள் 1. மான்கள் பழிகொண்டீர் பொன் மான்உருவாய் என்னைவந்து கெடுத்தீர் நான் அறியாத விதனங்கள் கொடுத்தீர் கான்காள் வழிசொல்வீர் இரு கண்ணை விட்டுத்திரிவார் உண்டுயிர்போலப் பெண்ணைவிட்டுப் பிரிவார்களு முண்டோ 2. மயில்காள் ஒன்று சொல்வீர் சொல்ல வாயில்லையோ உங்கள் சாயலை நேர்தரு சேயிழை யானவள் போயதெவ்வாறோ குயில்காள் ஒன்று கூறீர் சொன்னால் குற்றமுண்டோ எனதுத்தமியாகிய பத்தினி சானகி எத்திசைபோனாள் 3. கிளிகாள் உரையீரோ ஒரு கேள்வி கேளீர் படுபாவிகளே என தாவியை நேர்தரு தேவிவராளோ அளிகாள் கிருபை இலையோ உவந் தாடுகிறீர் உயிரோடுயிரானவள் ஓடுகையாள் உயிர் வாடுகிறேனே |