பக்கம் எண் :

263

சுக்கிரீவன் மதுபானத்தை நிந்தித்தல்

கொச்சகம்-1

சாமிஇந்தப் படியுரைக்கத் தம்பியும் கிஷ்கிந்தையிற் போய்
ஆமனுமான் தாரையைக் கண்டதுசொன்னான் அவராலே
கோமகன் சுக்ரீவன் இளங்குமரன் வரவறிந்து கெட்டேன்
மாமதுஉண் டென்றுரைவான் சொல்லிக் கரைவானே

தரு-10

புன்னாகவராளிராகம்                           அடதாளசாப்பு

பல்லவி

         மதுவே-உன்னாற்கெட்ட திதுவே

அநுபல்லவி

     புதுமை நான்பாவ சுக்கிரீவன் எய்த
     பூமிதந்தானுக்குச் சாமிதுரோகம் செய்த                 (மது)

சரணங்கள்

1. சாமிஎன்றங்கதன் கூவிஎனைத்              தட்ட
     தொட்டதும் விட்டதும் நானறியேன்       முட்ட
  பாமரனாய் உன்னைக் குடித்தேனே          பொட்ட
     பஞ்சமா பாதகன் ஆனேன்கடை          கெட்ட      (மது)

2. பித்தாம் உடம்புக்கு மத்தும்                புறப்படும்
     பெண்என்றும் தாயென்றும் தெரியாம      லேவிடும்
  குத்திரம் ஆம் நரகத்தினி                  லேயிடும்
     குடித்தவன் அடுத்தவன் எடுத்தவனும்      கெடும்      (மது)

3. குன்றாத வாலியை வென்று                பிறந்தேனே
     கோதண்ட தீக்ஷாகுருவாற்              சிறந்தேனே
  ஒன்றா அவன்செய்த நன்றி                துறந்தேனே
     உன்னைக் குடித்தேனே என்னை         மறந்தேனே   (மது)

4. வையகம்தந்து மதிதந்                    தெனையாள
     வைத்தானை எண்ணாமல் வைத்தாய் பழிமூள
  ஐயையோ நான்சொன் காலஞ்சற்      றேநீள
     ஆகாமற் போனேனே ஓகோ சண்டாள               (மது)