30 சிறைக்கருடன் மீதினில்அச் சுதனும் வந்தான் பொன்னின்மலர் அவன்பதத்தில் இறைத்தே கண்ணீர் பொழிகின்றார் அரக்கர்துன்பம் மொழிகின் றாரே தரு-3 அசாவேரி ராகம் ஆதிதாளம் பல்லவி கடைக்கண்ணால் இரங்கிப் பார்அய்யா-பார்த்துக் காவாவிட்டால் இனிமேல் ஆர்அய்யா (கடை) அநுபல்லவி அடைக்கலம் எனஓடி வந்தோமே-நாங்கள் ஆலைக் கரும்புபோல நைந்தோமே (கடை) சரணங்கள் 1. சொர்க்காதி புவனமெல்லாம் தாவிக்-கொண்டு துரத்தக் கும்பகர்ணன்தனை ஏவி-மற்ற பக்கம் இந்திர சித்தென்னும் பெருங் கோவி-ஆளப் பண்ணிவைத்தானே ராவணன் பாவி செக்குள்ளே அகப்பட்ட எள்ளுப் போலே-அரக்கர் கைக்குள்ளே அகப்பட்ட எங்கள் மேலே-உனது (கடை) 2. அளகேசன் புஷ்பகம் தனைவிட்டான்-இலங் கையிலே சூரியன்தேரும் வரவொட்டான்-மெத்தத் தளர இந்திரனைக்கூடச் சிறையிட்டான்-அரக்கன் சருவகொள்ளை யடிக்கத் தலைப்பட்டான் எளியோர்களை இப்படிஈனர் ஒடுக்கல் ஆமோ கிளியை வளர்த்துப் பூனைகிட்டக் கொடுக்கல்ஆமோ (கடை) 3. பாவிஅரக்கன் பேச்சே மேலாச்சு-நாங்கள் படைத்த பலங்கள்எல்லாம் மேல்பூச்சு-நல்ல பூவைவண்ணா அரக்கன் கைவீச்சு-வெள்ளிப் பொருப்பே அறியும்இனி ஏன் பேச்சு ராவணன் வதைக்கின் றான்எங்கள்மேல் என்னகண்டோ தேவநீ கேளாவிட்டால் திக்குத்திசை இன்னமுண்டோ (கடை) |