பக்கம் எண் :

308

12. சற்றும் வைத்துப் பாராமல் பாவிராவணன் வார்த்தை
     தணர்போல் இறைக்கிறானே           திரிசடையே
  பத்துத்தலையும் பனங் காய்போல் விழுந்துருளப்
     பார்ப்பதெந் நாளோநான்             திரிசடையே

13. பாயும் கைகளும் என்னைப் பார்க்குங் கண்களுமிந்தப்
     பழிவார்த்தை சொல்லும் வாயும்        திரிசடையே
  பேயும் பெருங்கழுகும் நாயும்நரியும் பிச்சுப்
     பிடுங்கித் தின்னக் காண்பேனோ        திரிசடையே

14. குடிமகனிந்திரசித்தன் கொழுந்தனால் பட்டானென்ற
     கூக்குரல் என்று கேட்பேன்            திரிசடையே
  அடியற்றமரம் போல்மண் டோதரி ராவணன்முன்
     அலறி விழக்காண்பேனோ             திரிசடையே

15. பேயாம் அரக்கனையும் சேனைகளையும் என்றன்
     பிராணநாதர் கொல்வாரோ            திரிசடையே
  தாயேஉன் அப்பன் வீடுபாற்கடல் போலே பொங்கித்
     தழைக்க நான் காண்பேனோ           திரிசடையே

16. இடதுகண் துடிப்பதும் இடதுதோள் துடிப்பதும்
     ஏதோ அறிகிலேனே                 திரிசடையே
  இடது செவியிலொரு வண்டுவந்தூதக் கண்டேன்
     என்ன சொல்லடியம்மா               திரிசடையே

17. வந்தசாமிமுன் மிதிலையில் என்கை தொட
     வரக்கண்ட குறியிவை                 திரிசடையே
  அந்தநாளிற் குறி இந்தநாளிலும் கண்டேன்
     அதிசயம் ஏதோ அம்மா              திரிசடையே

------

சீதாதேவிக்குத் திரிசடை கனாநிலை உரைத்தல்

கொச்சகம்-1

கோதைமனம் தளர்ந்திந்தக் குறிகுணங்கள் சொன்னளவில்
தூதுவன் இப்போதுனக் கோர் சுபாவத்தைச் சொல்லுவன்காண்
காதலியே நானும்நல்ல கனவுகண்டேன் கேள்எனவே
சீதைமனம் தேறியிடத் திரிசடையும் சொல்வாளே