பக்கம் எண் :

309

தரு-6

சங்கராபரண ராகம்                        ஆதிதாளம்

பல்லவி

என்கனவைக் கேளாயம்மா-சானகியம்மா
ஏனுனக்குக் கவலையம்மா                       (என்)

அநுபல்லவி

மங்களம் உனக்குண்டாமே வல்அரக்கன் வாழ்வுபோமே (என்)

சரணங்கள்

1. சுந்தரி மண்டோதரி           வெறுந்தலையைச் சீவினாள்
     அந்திடத்திலே அவள்      விழுந்தழுது     கூவினாள்
  இந்தமன்னன் வீடுவிட் டெழுந்  தொருபெண்     தாவினாள்
     என்தகப்பன் வீட்டில் அவள் வந்துகந்து      மேவினாள் (என்)

2. பூவுகளெல்லாம் கரிக          ளாக்கருகவும்    கண்டேன்
     கோவில்களெல்லாம் மெழுகு போலுருகவும்    கண்டேன்
  பேய்வகையும் ஓரிகளும்        மேபெருகவுங்    கண்டேன்
     ராவணன் எண்ணெய்த்தலை  யோடேவருகவும் கண்டேன்(என்)

3. பத்துமுடி ராவணனைக்        கொத்துடனே        கொல்லவோ
     வைத்தசிறை விட்டமரர்     சொஸ்தமொடு       செல்லவோ
  உத்தமியுன் பத்தினி           மகத்துவம் என்ன    சொல்லவோ
     இத்தனையும் இலங்கைக்    கனர்த்தம் என்ப     தல்லவோ (என்)

-----

சீதாதேவி பக்கல் ராவணன் குறையிரத்தல்

விருத்தம்-8

    திரிசடையிப் படிசொல்லச் சனகி கொஞ்சம்
          தெளிந்தளவில் இதுநல்ல வேளை என்றே
    மரம்உறையும் அனுமானும் குறுகும் போதில்
          மகுடம் ஒருபத்தும் மின்ன மாதராட
    அருகினிற்கட் டியம்போட அந்த ராவில்
         அரக்கன்வந்தான் அருந்ததிக்கும் தெய்வமாகும்
    கருணைவல்ல சீதைமுன்னே தான்ஏ தோதோ
         கரைக்கின்றான் பல்கெஞ்சி உரைக்கின்றானே