314 அனுமார் ஸ்ரீராமரை வருணித்தல் விருத்தம்-11 அன்னையெனும் சனகியிவ்வா றழுது வாடி ஆவிஇனி வைத்திரேன் என்று பிராணன் தன்னைவிட நினைத்தொருபூஞ் செடிக்கீழ் வந்தாள் சாமிஅனு மானுமுன்னே வணங்கிக் கொண்டு என்ன தசரதராமன் தூதன் நானே எங்கெங்கும் தேடினேன் அனுமான் என்பேர் சொன்னபடி சொல்லவந்தேன் சாமிரூபம் சொல்லுவேன் என்றெடுத்துச் சொல்லுவானே தரு-8 கேதாரகௌள ராகம் ஆதிதாளம் பல்லவி அந்தராம சவுந்தரியம் என்னால் அறிந்து சொல்லப் போமோ அம்மா (அந்த) அநுபல்லவி கந்தம் மேவும்அர விந்தமலரும் அவர் காலுக்கு நிகராமோ கைக்குத்தான் சொல்லப்போமோ (அந்த) சரணங்கள் 1. உருண்ட மணிமுழங் காலுக்குவமையவர் உடைய அட்சயதூணி ஏற்குமே திரண்ட பெருந்தொடை இரண்டுக்கும் எட்டுத் திசையானை துதிக்கையும் தோற்றுமே வரிந்தமர வுரிஇடையும் நடையுங்கண்டோர் மனதையெல்லாம் உருக்கி வார்க்குமே தரந்தர மாயுல கிருந்த வயிற்றுக்குச் சரிசொல்லக் கூடுமோ யார்க்குமே விரிந்தமார் புக்கிணை பூமியகலங் காணும் விளங்கும் கழுத்துக்குநேர் இளங்கமுகே பூணும் பரந்த புசங்களுக்கு மேருமலையே நாணும் பார்க்கப் பார்க்கப் பதினாயிரம் கண்கள் வேணும் (அந்த) |