317 அனுமார் சீதை பிரிந்தபின் நடந்த செய்திகளை அவளுக்கு விவரித்தல் விருத்தம்-13 கண்டுதிரு வாழியினால் மகிழ்ந்த சீதை கடல்பாய்ந்த விசுவரூ பத்தைக் காட்டக் கொண்டுமகிழ்ந் தாள்பின்னும் அனுமா னேநான் கோணாமல் மானுக்காய் நெடுந்தூரத்தில் மண்டு ரகுவீரன்போய் மீண்ட வாறும் வந்திளையோ னுடன்கலந்த வாறும் நீதான் பண்டுபழகிய வாறும் சொல்வாய் என்னப் படிக்கின்றான் அவள் குறையை முடிக்கின்றானே தரு-10 தோடிராகம் ஆதிதாளம் பல்லவி கேளம்மா சொல்லுவேன்-முன் உள்ளதெல்லாம் கேளம்மா சொல்லுவேன் (கேள) அநுபல்லவி நீளமான் அனமாரீசன் மறைந்து நின்றுடனே உயிர்க் கொன்றுடனே மீளவே ரகுவீரன் வந்து சேர்ந்தபின் (கேள) சரணங்கள் 1. இனம் பிரிந்த மான்போலே என்தாயே உன்னை நாடி உணும் கனிகாய்களும்போய் உலைவாய் மெழுகாய் வாடி அனந்தம் காடும் மலையும் ஆறெங்கும் தேடித் தேடி தனந்தனியே புலம்பித் தம்பியாலுயிர் கூடி வனந்தனில் வந்து சடாயுவினால்மதி தேறவே-ராவணன் முனைந்ததெல்லாம் சொல்லியவன் உயிர்வானம் ஏறவே-அந்நேரம் சினந்து கவந்தனைக் கொன்று சவரிமொழி கூறவே-உன்தன்னை நினைந்து நினைந்தறி வானது போய்த்தடு மாறவே-நாயேனும் பணிந்திட வேதன தடியருள் ஆக்கிப் பணிகளும் மணிகளும் வகைவகை நோக்கித் துணிந்திடும் வாலியை மாட்டினன் முன்னே சுக்ரீவனை முடி சூட்டினான் பின்னே (கேள) |