பக்கம் எண் :

344

சீதையைத் தேடப் போனவர்களைக் குறித்து ஸ்ரீராமர் இரங்கல்

விருத்தம்-30

     இப்புறம் ராம சாமி
     தெற்கினில் போன பேரை
     எப்படிக் காணு வேனே
     எனக்குறை கூறு வானே

திபதை-6

ஆகிரி ராகம்                             ஆதிதாளம்

கண்ணிகள் 

1. திக்குத் திக்காச் சீதையைத்     தேடி நொந்தாரோ-எந்த
  திக்குக்களிலும் காணாமல் எங்கே வாடி வந்தாரோ

2. தெற்குத் திசையில் போனோரைக் காணேன் கண்ணாலே-அடா
  சுக்கிரீவாநான் ஏதுக்கின்னம் இருந்தேன் மண்மேலே

3. கன்னி சீதை இறந்தாளே என்னப்         பட்டாரோ-இத்தை
  என்ன சொல்வோம் என்றுசீவன் தன்னை   விட்டாரோ

4. நாள்கணக்கை எண்ணிஎண்ணி ஏக்கம் ஆனோரோ-உன்தன்
  ஆக்கினைக்குப் பயந்துதவசு நோக்கிப் போனாரோ

5. மற்றொரு லோகத்தைச் சுற்றித் தேடு  கின்றாரோ-சிறையில்
  வைத்த அரக்கரோ டேபோர் ஆடு   கின்றாரோ

6. தென்முகமே முகமாக இன்னம்       செல்வாரோ இங்கே
  என்முகத்தில் சீதை சேதிஎன்ன       சொல்வாரோ

7. தன்வரவு பார்க்கும் என்னைத்தளரப் பார்ப்பானோ-அனுமான்
  என்வயிற்றில் என்றுவந்து பாலை    வார்ப்பானோ

8. கவலைஏன் அனுமனிருக்கக் காரியம் போகுமோ-அய்யோ
  அவனா லாகாத காரியம்பின் ஆரால் ஆகுமோ