பக்கம் எண் :

358

மெய்திருப்பதம் மேத்வென்ற போதினும்
இத்திருத்துறந் தேகுஎன்ற போதினும்
சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை
ஒத்திருக்கும் முகத்தினை உன்னுவாள்

தேங்கு கங்கைத் திருமுடிச் செங்கணான்
வாங்குகோல வடவரை வார்சிலை
ஏங்கு மாத்திரத் திற்றிரண்டாய்விழ
வீங்கு தோளை நினைந்து மெலிந்துனாள்

இன்னல் அம்பர வேந்தற்கியற்றிய
பன்னலம் பதினாலாயிரம் படை
கன்னல் மூன்றில் களப்படக் கால்வளை
வில்நலம் புகழ்ந்து ஏங்கி வெதும்புவாள்

ஆழநீர்க் கங்கை அம்பி கடாவிய
ஏழை வேடனுக் கெம்பிநின்தம்பி நீ
தோழன் மங்கை கொழுந்தி எனச்சொன்ன
வாழி நண்பினை உன்னி மயங்குவாள்

உரங்கொள் தேமலர்ச் சென்னி உரிமைசால்
வரங்கொள் பொன்முடி தம்பி வனைந்திலன்
திரங்கு செஞ்சடை கட்டிய செய்வினைக்கு
இரங்கி ஏங்கியது எண்ணி இரங்குவாள்

பரித்த செல்வம் ஒழியப் படரும் நாள்
அருத்தி வேதியற்கு ஆன்குலம் ஈந்தவன்
கருத்தின் ஆசை கரையின்மை கண்டிறை
சிரித்த செய்கை நினைந்தழும் செய்கையால்

மழுவின் வாளினன் மன்னரை மூவெழு
பொழுதின் நூறிப் புலவுறு புண்ணின்நீர்
முழுகினான்தவ மொய்ம்பொடு மூரிவில்
தழுவும் மேன்மை நினைந்துயிர் சாம்புவாள்

ஏகவாளி அவ்இந்திரன் செம்மல் மேல்
போகஏவி அதுகண்பொடித்த நாள்
காகம் முற்றும் ஓர்கண்ணல வாகிய
வேக வென்றியைத் தன்தலைமேற் கொள்வாள்