38 சரணங்கள் 1. உரைத்த தேவர் துன்பம் மறக்க-காலன் ஒருக்காலும் காணாத ருசிகண்டு பறக்க அரக்கர் ஆதிக்கங்கள் இறக்க-நல்ல அனுகூல காலங்கள் முனிவர்க்குப் பிறக்க (கொடி) 2. மூதண்ட கோடிக்கப் பாலே-ஓசை முழங்கவிசு வாமித்திரன் சாலைக்கிப் பாலே கோதண்ட பாணியம் பாலே-நிலை குலைந்து புரண்டலறிக் கொண்டுமட் பாலே (கொடி) 3. நடலை வஞ்சனை மாயம் தடுக்க-சுவாமி நாள் கொண்டு முதற்பலி அரக்கரைக் கொடுக்க கடின கவா குபட்டுப் படுக்க-ராமன் கணையாலே மாரீசன் கடலோட்டம் எடுக்க (கொடி) --- அகலிகை சாபவிமோசனமும் சரித்திரமும் விருத்தம்-12 தாடகைதான் விழுந்தபின்பு தேவர் சொல்லச் சகலபடை களும்கொடுத்தே முனிவர் எல்லாம் கூடரைக் கௌசிகையே முதலாம் தீர்த்தம் கொண்டாடிக் கௌதமன்ஆ சிரமம்சேர் போதில் காடதிலே ரகுராமன் பதத்தூள் சிந்தக் கல்லுருப் போய் நல்லுருவாய் விளங்கிநின்ற பாடகக்கால் அகலிகையை இவள் ஆர் என்னப் பரந்துவிசுவா மித்திரமுனி பகர்கின் றானே. தரு-11 அசாவேரி ராகம் அடதாளச்சாப்புத் தாளம் பல்லவி தேவி இவள் ராமா - கௌதமன் ஆவி இவள் ராமா (தேவி) அநுபல்லவி ஆவலினாற் பண்டு மேவல் மனங் கொண்டு |