576 மாராபி ராமனைத்தன் மார்பில் கட்டி மகிழுவான் அவன் குணத்தைப் புகழுவானே. தரு-85 மத்தியமாவதி ராகம் ஆதிதாளம் பல்லவி ஐயனே இன்றுன்னைக் கண்டேன் ஆனந்தங் கொண்டேன் (ஐய) அநுபல்லவி வையம் ஆள் தசரதனாம் என்னை மலடுநீக்கிவிட்டபிள்ளை வானவருக்கும் அந்த நான் முகனுக்கும் எட்டா மாயவன் உலகத்திலேஇரு என்றென்னை வைத்த (ஐயா) சரணங்கள் 1. மல்லிகைப்பூ மிதித்தாலும் வருந்தும் உன்தன் தாளிலே வனத்தில் உள்ள கல்லும் முள்ளும் பொறுத்தாய் இந்த நாளிலே எல்லாரும் காணக் கைகேசி சண்டாளி என் தோளிலே இருந்து செவியைக் கடித்தாற்போல் உன்னைப் பிரித்தாளே ஒரு கோளிலே செல்லும் தரித்திரனுக்குத் திரவியம் கண்டெடுத்தாற்போல் சென்மக் குருடனுக்குத் தெய்வம் கண் கொடுத்தாற்போல் (ஐய) 2. கைகேசி சொல்லம்புக் காயம் கொஞ்சத்திலே மாறுமோ கட்டிக்கொண்டாறினதல்லால் பின்னை ஒன்றால் ஆறுமோ அய்யாஉன் வாய்முத்தம்போல் அமுர்தமும்சுவை ஊறுமோ ஆர்முகமும் உன்முகம்போல் ஆகுமோ மனம் தேறுமோ கையும்மெய்யும் என்தன் கண்கள் தெரிசித்தது கண்கள் படைத்தபலன் இன்றல்லோ லபித்தது (ஐய) 3. பரதனையும் கூட்டிக்கொள்ள வேணுமோ உற் றுரிமைக்கு பாருள்ளோருனக்கொப்பாரோ என்அப்பா உன்தன் அருமைக்கு துருவமாம் அருந்ததிகூட நிகரோ சீதை பெருமைக்கு சோதிக்க வேணுமோ என்ன சொல்வேன் உன்தன் ஒருமைக்கு திருக்கண்டகண்ணுக்குத் தீங்குண்டோ மென்மேலே தேவாதி தேவர்க்கும் சிறந்தேனே உன்னாலே (ஐயா) |