பக்கம் எண் :

621

அள்ளிமீதுலகை வீசும் அரிக்குலச் சேனைநாப்பண்
தெள்ளுதன் திரையிற்றாகிப் பிறிதொரு திறனும்சாரா
வெள்ளிவெண்கடலுள் மேல்நாள் விண்ணவர் தொழுது வேண்டப்
பள்ளிதீர்ந் திருந்தானென்னப் பொலிதரு பண்பினானனை

படர்மழை சுமந்தகாயம் பகர்வரும் அமரர் கோமான்
அடர்சிலை துறந்ததென்ன ஆரந்தீர் மார்பினானைக்
கடர் கடைமத்தின் பாம்பு கழற்றிய தென்னக் காசின்
சுடர்ஒளி வலயம் தீர்ந்த சுந்தரத் தோளினானை

கற்றைவெண் நிலவுநீங்கக் கருணையாம் அமிழ்தம் காலும்
முற்றுறு கலையிற்றாய மழுமதி முகத்தினானைப்
பெற்றவன் அளித்தமோலி இளையவன் பெறத்தான் பெற்ற
சிற்றவை பணித்தமோலி பொலிகின்ற சென்னியானை

வீரனை நோக்கி அங்கம்மெய்ம் மயிர்சிலிர்ப்பக் கண்ணீர்
வார நெஞ்சுருகிச் செங்கண் அஞ்சன மலையன்றாகின்
கார்முகில் கமலம்பூத்தது அன்றிவன் கண்ணன் கொல்லாம்
ஆரருள் சுரக்கும் நீதி அறநிறம் கரிதோ என்றான்

கரங்கள் மீச்சுமந்து செல்லும் கதிர்மணி முடியன்கல்லும்
மரங்களும் உருகநோக்கும் காதலன் கருணைவள்ளல்
இரங்கினன் நோக்குந் தோறும் இருநிலத்திறைஞ்சு கின்றான்
வரங்களின் வாரியன்ன தாளிணை வந்து வீழ்ந்தான்
   (வீடணன் அடைக்கலப்படலம் 129, 130, 132, 133, 134, 137)

விபீஷணர் ஸ்ரீராமரை சரணடைதல்

விருத்தம்-9 - தரு-8

அழிந்தது பிறவிஎன்னும் அகத்தியல் முகத்துக்காட்ட
வழிந்த கண்ணீரின் மண்ணில் மார்புற வணங்கினானை
பொழிந்ததோர் கருணை தன்னால் புல்லினன் என்று தோன்ற
எழுந்தினிது இருத்திஎன்னா மலர்க்கையால் இருக்கை ஈந்தான்
                           (வீடணன் அடைக்கலப்படலம் 138)