பக்கம் எண் :

623

ஏழுநூறு யோசனை அகலம் இட்டகீழ்
ஆழம் நூறுயோசனை ஆழிமால் வரை
வாழியாய் உலகினை வளைந்த வண்ணமே
சூழும்மாமதில் அது சுடர்க்கும் மேலதால்

மருங்குடை வினையமும் பொறியின் மாட்சியும்
இருங்கடி அரணமும் பிறவும் எண்ணினால்
சுருங்கிவிடும் என்பல சொல்லி சுற்றிய
கருங்கடல் அகழது நீரும் காண்டிரால்

வடதிசை வயங்கொளி வாயில் வைகுவோர்
இடையிலர் எண்ணிரு கோடி என்பரால்
கடையுக முடிவினில் காலன் என்பதென்
விடைவரு பாகனைப் பொருவும் மேன்மையார்

இப்படி மதிலொரு மூன்றும் வேறினி
ஒப்பரும் பெருமையும் உரைக்கவேண்டுமோ
மெய்ப் பெருந்திருநகர் காக்கும் வெய்யவர்
முப்பது கோடியின் மும்மை முற்றினார்

தேர்ப்பதினாயிரம் பதுமம், செம்முகக்
கார்வரை அவற்றினுக் கிரட்டி, கால்வயத்து
ஊர்பரி அவற்றுனுக் கிரட்டி ஒட்டகம்
தார்வரு புரவியும் இரட்டி சாலுமே

உகம்பல் காலமும் தவம்செய்து பெருவசம் உடையான்
சுகம்பல் போரலால் வேறிலன் பொருபடைத் தொகையான்
நகம்பல் என்றிவை யில்லதுஓர் நரசிங்கம் அனையான்
அகம்பன் என்றுளன் அலைகடல் பருகவும் அமைவான்

பொருப்பை மீதிடும் புரவியும் பூட்கையும் தேரும்
உருப்ப விற்படை ஒன்பதுகோடியும் உடையான்
செருப்பெய் வானிடைச் சினைக்கிடாய் கடாய்வந்து செறுத்த
நெருப்பை வென்றவன் நிகும்பன் என்றுளன் ஒருநெடியோன்

தும்பியீட்டமும் இரதமும் புரவியும் தொடர்ந்த
அம்பொன் மாப்படை ஐயிருகோடி கொண்டமைந்தான்
செம்பொன் நாட்டுடைச் சித்தரை சிறையிடவைத்தான்
கும்பன் என்றுளன் ஊழிவெங்கதிரினும் கொடியான்