பக்கம் எண் :

624

பேயை யாளியை யானையைக் கழுதையைப் பிணித்தது
ஆயதேர்ப்படை ஐயிரு கோடிகொண்ட மைந்தான்
தாயை ஆயினும் சலித்திடு வஞ்சனைதவிரா
மாயையான் உளன் மகோதரன் என்றொரு மறவோன்

குன்றில் வாழ்பவர் கோடி நாலைந்தினுக்கு இறைவன்
இன்றுளார் பினைநாளையிலார் எனஎயிற்றால்
தின்றுளான் நெடும் பல்முறை தேவரைச் செருவின்
வென்றுளான் உளன்வேள்வியின் பகைஞன் ஓர்வெய்யோன்

மண்ணுளாரையும் வானிலுள்ளாரையும் வகுத்தால்
உண்ணும் நாளொருநாளின் என்றொளிர் படைத்தானை
எண்ணின் நாவிருகோடியன் எரிஅஞ்ச விழிக்கும்
கண்ணினான் உளன் சூரியன்பகை என்றோர் கழலான்

தேவரும் தக்கமுனிவரும் திசைமுகன் முதலா
மூவரும் பக்கம் நோக்கியே மொழிதர முனிவான்
தாவரும் பக்கம் எண்ணிரு கோடியின் தலைவன்
மாபெரும் பக்கன் என்றுளன் குன்றினும் வலியான்

உச்சிரத் தெரிகதிர் என உரத்தெரி முகத்தன்
நச்சிரப்படை நாலிரு கோடிக்கு நாதன்
முச்சிரத்தையில் தலைவற்கு வெலற்கரு மொய்ம்பன்
வச்சிரத்து எயிற்றவன் உளன் கூற்றுவன் மாற்றான்

அசஞ்சலப்படை ஐயிருகோடியான் அமரின்
வசஞ் செயாதவன் தானன்றிப் பிறரிலா வலியான்
இசைந்த வெஞ்சமத் தியக்கரை வேரொடும் முன்நாள்
பிசைந்து மோந்தவன் பிசாசன் என்றுளன் ஒருபித்தன்

சில்லிமாப் பெருந்தேரோடும் கரிபரிசிறந்த
வில்லின் மாப்படை ஏழிருகோடிக்கு வேந்தன்
கல்லிமாப்படி கலக்குவான் கனல்எனக் காந்திச்
சொல்லும் மாற்றத்தன் துன்முகன் என்றறம் துறந்தோன்

இலங்கை நாட்டினன் எறிகடல் தீவிடை உறையும்
அலங்கல் வேற்படை ஐயிருகோடிக்கும் அரசன்
வலங்கொள் வாள்தொழில் விஞ்சையர் பெரும்புகழ் மறைத்தான்
விலங்கு நாட்டத்தன் என்றுளன் வெயில்உக விழிப்பான்